ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 60/அழகியசிங்கர்

27.12..2023 – புதன் கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி:   இணையக் கால கவியரங்கம் என்ற பெயரில் 69 கூட்டங்களை நடத்தி விட்டீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நான் பத்து பத்து கவிதைகளாக ஒரு கவிஞரின் கவிதைகளைப் படிப்பது வழக்கம். இதுவரை : தேவதச்சன், ஞானக்கூத்தன், காசியபன், காளி-தாஸ், தமிழவன் தொகுத்த புத்தகம். இப்போது மனுஷ்யபுத்ரன் கவிதைகள்.
ஜெகன் :  நீங்கள் இன்னொன்றும் செய்கிறீர்கள்.  அக் கவிதைகளை உங்கள் டெய்லி விருட்சத்திலும் பதிவு செய்கிறீர்கள்.
மோகினி : பதிவு செய்வது அவசியம்.  சரி நீங்கள் பதிவு செய்வதெல்லாம் கவிதைகளா?
அழகியசிங்கர் :  நாம் எதாவது பதிவு செய்தால் கவிதை இல்லை என்று சொல்வதற்கு ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை.  
மோகினி :  உங்கள் கவிதைகளைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அழகியசிங்கர் :  என் கவிதைகள் எல்லாம் உரை நடைக் கவிதைகள்.  எனக்கு முன்னோடி க.நா.சு, நகுலன், ஞானக்கூத்தன்.
ஜெகன் : ஞானக்கூத்தனைச் சேர்த்துக் கொள்ள முடியுமா?
அழகியசிங்கர் :  முடியும்.  அவர் எழுதும் கவிதை முறையில் க.நா.சுவின் பங்கும் இருக்கிறது.  
மோகினி :   கவிதை விற்பதில்லை என்ற குறை எப்போதும் எல்லோருக்கும் இருக்கிறது.
அழகியசிங்கர் : உண்மைதான்.  ஆனால் மனுஷ்ய புத்திரன் 50ஆவது கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறார்.  10000 கவிதைகளுக்கு மேல் எழுதி விட்டார்.  இன்னும் எழுதிக் கொண்டு வருகிறார்.  இந்த அளவிற்கு அதிகமாகக் கவிதைகள் எழுதியவர் யாருமில்லை.  ஏன் உலகளவில் கூட இதைக் குறிப்பிடலாம்.  காலையில் எழுந்தவுடன் கவிதையுடன் ஆரம்பிக்கிறார். தூங்கும்போதும் கவிதையுடன் தூங்குகிறார்

ஜெகன் : அவர் கவிதையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
அழகியசிங்கர் : அவருடைய எல்லாக் கவிதைகளிலும் கட்டமைப்பில் ஒழுங்கு தென்படுகிறது.. அவர் அதிக எண்ணிக்கையில் கவிதைகள் எழுதுவதால் எல்லோரும் சற்று வித்தியாசமாகப் பார்ப்பதாக நினைக்கிறேன். நான் இணையக் கால கவிதை அரங்கத்தில் பத்து கவிதைகளை அவருடைய தொகுப்பிலிருந்து (நீயே என் கடைசிப் பெண்ணாக இரு) படித்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் உணர்வு ரீதியாக எழுதப்பட்ட கவிதைகள். கொஞ்சம் சோகம் இருக்கிறது. நகைச்சுவை உணர்வு குறைவாக இருக்கிறது. சீரியஸ்சாக இருப்பவர் போல் தோன்றுகிறது.
மோகினி : இன்றைய இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.
அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.
ஜெகன்: இன்று பேசியது போதும்.
அழகியசிங்கர். இரவு வணக்கம்.
(இரவு 10.30 மணிக்கு)