நாகேந்திர பாரதி/தங்கச்சி

‘ சீக்கிரம் போய் அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வாடா ‘அலறும் அப்பத்தாவின் குரல்.’ வயித்தாலே, வாயாலே ‘ போய்த் திணறிக் கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தவன் அழுதபடி , அடுத்த நிமிடம் கிராமத்துக்குச் செல்லும் அந்த மண் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தான். தாத்தா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் இவனும் இவன் தங்கையும். ஆரம்பப் பள்ளி வரை கிராமத்தில் படித்துவிட்டு ஆறாவது படிக்க இப்பொழுது இவன் இருக்கும் தாத்தா வீட்டுக்கே வந்து விட்டாள் இவன் தங்கையும் .

அங்கே அந்தக் கிராமத்து ஓட்டு வீட்டில் , இவன் அங்கு போகும் போதெல்லாம் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த அவளுக்கு இங்கே தாத்தாவின் பெரிய கல்லு வீட்டில் இந்தத் தெரு முதல் அடுத்த தெரு வரை நீண்டுள்ள அந்தப் பெரிய வீட்டில் அண்ணனுடன் சேர்ந்து ஓடி விளையாடுவதில் பெரிய குஷி . ஆட்டம் பாட்டம் ஆகத்தான் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை.

முந்தாநாள் மாலை கிராமத்தில் இருந்து வந்த அப்பாவுடன் சேர்ந்து பக்கத்து டவுனுக்குப் பஸ்ஸில் போய் ஃபர்ஸ்ட் ஷோ செகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு, உறவினர் வீட்டில் தங்கி விட்டுத் திரும்பும் போது அப்பா கிராமத்தில் இறங்கிக்கொள்ள, இவர்கள் இருவரும் தாத்தா வீட்டிற்குத் திரும்பினர் . அன்று இரவில் இருந்து தங்கை பார்வதிக்கு வயிற்றுப்போக்கு . அங்கு இருக்கும் ஒரே டாக்டரும் ஏதோ மருந்து கொடுத்து நிற்காமல் இரவு முழுக்க காய்ச்சல் வயிற்றுப் போக்கு . துரும்பாக வதங்கிக் கிடந்த தங்கையைப் பார்க்கப் பார்க்க சங்கருக்கு அழுகை அழுகையாக வந்தது. அவள் உதடுகளில் நேற்றுப் பார்த்த சினிமா பாட்டு லேசாக முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.

பஸ் போக்குவரத்து வசதி அடிக்கடி இல்லாததால் அந்த நாலு கிலோமீட்டர் தூரத்தை அப்போது ஓடிக் கடந்து கொண்டிருந்தான் சங்கர் . தங்கையோடு சேர்ந்து நிதானமாக நடந்து வந்த காலத்தில் , அந்த ரோட்டோரம் கிடக்கும் பெரிய குழாய்களுக்குள் ஒளிந்து கொண்டு விளையாடிய ஞாபகம். ‘கடவுளே அவள் பிழைக்க வேண்டும், திரும்ப நாங்க ஒளிந்து பிடித்து விளையாட வேண்டும். . என்னுடன் ஓடிப் பிடித்து ஒளிந்து பிடித்து விளையாடுவதில் எவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு’.

அங்கே கிராமத்து கண்மாய் மேட்டிலேயே இவனைப் பார்த்துவிட்டு அம்மா ஓடிவந்தாள் . ‘ என்னடா ‘செய்தி தெரிந்ததுமே அம்மாவும் அப்பாவும் பரக்கப் பரக்க மறுபடியும் மூன்று பேராக அந்த மண் ரோட்டில் திரும்ப ஓடி வர அப்பா நினைப்பில் ‘ பிரியமான பாரு . ‘அப்பா அப்பா ‘ என்று வாய்க்கு வாய் கூப்பிட்டு கூப்பிட்டு அவள் பேசும் பேச்சு. அதைக் கவனித்து கேட்காவிட்டால் அவள் முறைக்கும் முறைப்பு. ‘

காலையில் சாப்பிடும் போது அண்ணனுக்கு தனக்கு வைக்கும் இட்லியின் அந்த மெல்லிசான ஓர இதழ்களை பிய்த்து அண்ணனுக்குப் பிடிக்கும் என்று அவள் சாப்பிடும் போது இவன் தட்டில் பிய்த்துப் போடுகின்ற பாசம். பள்ளியில் எல்லாவற்றிலுமே ஃபஸ்ட். இவளோட பிரண்ட்ஷிப்பா இருக்க போட்டி போடும் ஆறாவது வகுப்பு தோழிகள் . ‘ பாரு பாரு’ என்றபடி வீட்டுக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்து டாக்டர் வீட்டுக்கு ஓட, அங்கு மூச்சுவிட திணறி விழி பிதுங்கிய நிலையில் பார்வதி.

‘ ஏதோ மாத்திரை கொடுத்துட்டாரு டாக்டர் ,அதுக்கப்புறம் இப்படி ஆயிட்டா’ என்று டாக்டரை அடிக்கக் கிளம்பும் தாத்தா. ‘ அது மாத்திரையினால் இல்லைங்க ,தண்ணி எல்லாம் வெளியேறிடுச்சு,குளுக்கோஸ் வாட்டர் ஏத்தணும் . இங்கே ஆஸ்பத்திரி இல்ல, அதுக்குரிய வசதி இல்ல, பக்கத்து டவுனுக்குத் தான் போகணும், அதுக்குக் காருக்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம் ‘ என்று சமாதானப்படுத்தும் கம்பவுண்டர் .

‘அப்பா, அம்மா, எல்லாம் வந்திருக்காங்க ,தைரியமா இரு ‘என்று அழுகையோடு படுக்கையில் கிடக்கும் தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தான் சங்கர். ‘அந்த விழி ஏன் சொருகுகிறது. ஏன் நெஞ்சு எம்பி எம்பி, என்ன இது தங்கச்சி’ என்று அவன் கத்த , கூடியிருந்த அந்தக் கிராமத்துக் கூட்டம் டாக்டர் மேல் பாய்ந்தது.

————————–