கண்ணன் சுந்தரம்/சில நினைவுகள்

நண்பர் தேவிபாரதி சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் சில நினைவுகள்.

அவரை முதலில் சந்தித்துக் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகின்றன. சு.ரா.வைப் பார்க்க வந்திருந்தார். அன்று எனக்கு காந்திமீது பக்தியற்ற பெருமதிப்பு இருந்தது. தமிழ் இலக்கியவுலகில் அன்றைய எழுத்தாளர்களை காந்திமீது வெறுப்புக் கொண்டவர்கள், மெளனமான பற்றுடனும் பற்றற்றும் இருந்தவர்கள் என்று பொதுவாகப் பிரிக்கலாம். தேவிபாரதி காந்திமீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்ததும் அதைத் தயக்கமின்றி வெளிப்படுத்தியதும் எனக்கும் அவருக்குமான உரையாடலுக்கு அடித்தளம் அமைத்தது.

1994இல் நான் மீண்டும் தொடங்கிய காலச்சுவடு முதலிதழ் தேவிபாரதி சிறுகதையுடன் (தீர்ப்பு) வெளிவந்தது. இதனால் ஒரு துர்தேவதை சீறியெழுந்ததை இந்த மங்களகரமான நேரத்தில் பேச வேண்டாம்.

இதற்கு ஒருசில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் அப்போது எழுதிக்கொண்டிருந்த நொய்யல் நாவல்பற்றி என்னுடன் பேசினார். அதைத் தட்டச்சு செய்து திருத்தி மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்வது மிகக் கடினமாக இருக்கிறது, ஒரு கணினி தர முடியுமா என்று கேட்டார். நான் என்னிடமிருந்த ஒரு கணினியை பார்சல்செய்து அனுப்பினேன்.
இதற்கும் சில ஆண்டுகளுக்குப் பின்னர், தனது கிராமத்தில் பள்ளிப் பணியில் தொடர முடியவில்லை, சென்னை போக வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். காலச்சுவடு சென்னை அலுவலகத்தில் சேர்ந்துகொள்ளும்படி தெரிவித்தேன். அங்கு பொறுப்பாசிரியர் அரவிந்தனுடன் பணியாற்றினார். அரவிந்தன் வேறு பணிக்கு நகர்ந்த பின்னர் தேவிபாரதி காலச்சுவடு பொறுப்பாசிரியரானார்.

தேவிபாரதி வெளியிட்ட 2008 ஜனவரி காலச்சுவடு காந்தி சிறப்பிதழ் முக்கியமானது. தமிழில் காந்தி பற்றிய உரையாடலைத் தொடங்கிவைத்த முக்கியக் கண்ணிகளில் ஒன்று. அதில் தேவிபாரதியின் ‘ பிறகொரு இரவு’ நெடுங்கதை நல்ல கவனம் பெற்றது. மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் அதை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் ‘கேரவன்’ இதழில் வெளியிட்டார். இந்தத் திறப்பைக் கைக்கொண்டு அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பை ஆங்கிலத்தில் கொண்டுவர முயன்றேன். 2012இல் ஹார்பர் காலின்ஸ் அதற்கான உரிமையை பெற்று வெளியிட்டார்கள். நூலின் தலைப்பு: Farewell, Mahatma. அதே வேகத்தில் அவருடைய நிழலின் தனிமை நாவலுக்கும் அவர்களுடன் 2014இல் ஒப்பந்தம் செய்தேன். அப்படைப்பு இன்னும் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. சாகித்ய அகாதமி விருது அதற்கான உடனடி உந்துதலை வழங்கினால் மகிழ்ச்சி அடைவேன்.

2011ஆம் ஆண்டு ஒரு தமிழ் படைப்பாளியை அமெரிக்காவில் இருக்கும் லெட்டிக் இலக்கிய முகாமுக்கு அனுப்பும் வாய்ப்பு வந்ததும் தேவிபாரதியைப் பரிந்துரைத்தேன். தேவிபாரதியின் முதல் நாவலான ‘நிழலின் தனிமை’ அங்கு உருக்கொண்ட படைப்பு. தேவிபாரதி அங்கு சென்ற சில நாட்களில் அங்கத்திய உணவைச் சாப்பிட முடியாமல் திணறுவதாக அறிந்து அவரிடமே விசாரித்தேன். கிணற்றுக்குள் இருந்து சல்லிசான ஒரு குரல் கேட்டது. முக்கியமான பிரச்சினை, புளி இல்லை; ஆகவே ரசம் வைக்க முடியவில்லை என்பதுதான். அந்தப் பிராந்தியத்தில் சில நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த என் தங்கைக்கு ‘அபயம் அபயம்’ என்று செய்தி அனுப்பினேன். அவரும் கணவரும் ஒரு காரில் இந்திய உணவுச் சாமான்களை ஒரு மாதத் தேவைக்கு எடுத்துச் சென்று லெட்டிகில் இறக்கிவிட்டு வந்தார்கள். அடுத்த தொலை அழைப்பில் தேவிபாரதி சிரித்தார்.

தேவிபாரதியின் சென்னை வாசத்தை நினைக்கையில் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வரும்.

  1. ஒரு நாள் அலுவலகத்தில் பெருமாள்முருகன் பற்றிப் ‘புறம் பேசி’ கிண்டலடித்துக்கொண்டிருந்தோம். அலுவலகத்தில் – நாங்கள் ‘ஐயா வழி’ என்றழைக்கும் வரிசையில் ஒருவர் – காலச்சுவடில் பல காலங்களில் பணியாற்றிய பெருமாள்முருகனின் பல மாணவர்களில் ஒருவர் – அப்போது உடன் இருந்ததை மறந்துவிட்டோம். ஒரு கட்டத்தில் தனது ஐயாவை நாங்கள் கிண்டலடிப்பது பொறுக்க முடியாமல் அவர் எழுந்து நின்று உடல் விறைத்து நடுங்கிட’ சார்’ என்று கத்தி எதிர்ப்பைத் தெரிவிக்கவும் எங்கள் சப்தநாடி அடங்கிவிட்டது! நமக்கு நண்பர் இன்னொருவருக்கு ‘ஐயா’ என்பதை உணர்ந்த தருணமது. இப்போதும் ஐயாவைப் பற்றிப் பேசுகையில் சுற்றுமுற்றும் பார்த்துப் பேசுவதே பழக்கமாகிவிட்டது.
  2. தேவிபாரதியின் காந்தியை கதாபாத்திரமாகக் கொண்ட ‘ பிறகொரு இரவு ‘ சிறுகதை வெளியாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. தேவிபாரதிக்குப் பல ஆளுமைகள் அழைத்துப் பேசினார்கள், வாழ்த்தினார்கள், விவாதித்தார்கள். அடுத்த ஒரு மாதத்திற்கு தினமும் அலுவலகத்தில் தனக்கு வந்த அழைப்புகள் பற்றி அவரும் சளைக்காமல் சொல்லிக்கொண்டே வந்தார். இதற்கு ஒரு முடிவுகட்ட உதவி ஆசிரியர் திவாகர் முடிவு செய்தார். ஒருநாள் அவர் கேட்டார், “தேவிபாரதி, நேற்று காந்தி உங்களை அழைத்துப் பாராட்டினாராமே, உண்மையா?”

(,முகநூல் பதிவு)