
என் நண்பர்கள் யாரும்
புது வீடு கட்டும்போது
படிகளின் அருகே
ஒரு சக்கர நாற்காலி செல்லும்
சறுக்குப் பாதை அமைத்ததே இல்லை
என் சொந்த சகோதரர்கள், சகோதரிகள்
வீடுகளில் கூட
ஒரு சக்கர நாற்காலி செல்லும் அளவு
வாசலுள்ள கழிவறைகள் இல்லை
என் சிநேகிதிகள் எவரும்
தரைத்தளங்களிலோ
லிஃப்ட் உள்ள மேல்தளங்களிலோ
குடியிருந்ததே இல்லை
இதெல்லாம் இல்லாதது
என் வருத்தமல்ல
நான் அங்கு வரவேண்டும் என
ஒருவர்கூட யோசிக்கவில்லை என்பது
மிகவும் வியப்பாக இருக்கிறது
ஏதாவது ஒரு நாள்
யார் வீட்டிற்காவது செல்லவேண்டும்போல
தோன்றும்
அப்புறம் எதையோ யோசித்துக்கொண்டு
என் அறையிலே இருந்துவிடுவேன்
அல்லது
அவர்களை பூங்காக்களுக்கோ
கடற்கரைகளுக்கோ அழைப்பேன்
இப்படித்தான்
நான் வீடுகளே இல்லாத
மனிதனாக மாறினேன்
–
