சுனாமி நினைவலைகள்/நாகேந்திர பாரதி

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 69


——————————
போதுமடி கடல்தாயே நிப்பாட்டு
போனமுறைக் காயமின்னும் ஆறவில்லை
மோதிவந்து கோபத்தில் முட்டாதே
முன்னிருந்த பாசமெல்லாம் என்னாச்சு

பூமிக்குப் பிறந்தவளே பொறுமை காட்டு
புறப்பட்டுக் கரை தாண்டி வாராதே
மீனுக்குப் பசியென்றால் பாசி கொடு
மீனவரை உணவாக்க எண்ணாதே

பிள்ளைகுட்டி குடும்பத்தை அள்ளிப் போய்ப்
பெருஞ் சோறு போட்டாயே போதாதா
பின்னுமென்ன ஆசையடி பேரழிவே
பிள்ளைகளைத் தின்னுகின்ற பேயா நீ

தாலாட்டாய் உன்னலையைக் கேட்டிருந்தோம்
ஒப்பாரி ஆனதடி அப்போது
படகோட்டி மீன் ஈட்டி வாழ்ந்திருந்தோம்
பயம் காட்டி நிறுத்தி விட்டாய் சரியாடி

உத்தரவு இடுகின்றோம் உள்வாங்கு
உன்மத்தம் போதுமடி பின் வாங்கு
கத்து கடல் சப்தத்தைக் குறைத்துக் கொள்
கண்மூடித் தூங்க விடு வாழ விடு

———-