பார்த்துக்கொண்டிருப்பவர்/போர்ஹெஸ்

பார்த்துக்கொண்டிருப்பவர்

போர்ஹெஸ்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———
ஒளி நுழைகிறது நான் யார் என எனக்கு ஞாபகம் வருகிறது; அவர் அங்கே இருக்கிறார்.
அவர் அவருடைய பெயரைச் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறார்
அவருடைய பெயர் (இப்போது அது தெளிவாகியிருக்க வேண்டும்) என்னுடையதாக இருக்கிறது.
நான் எழுமுறை பத்துவருடங்களுக்கு அதிகமான சேவகத்திற்குத் திரும்புகிறேன்
அவருடைய ஞாபகங்களால் அவர் தன் இடுபணிகளை என் மேல் சுமத்துகிறார்.
அவர் தினசரித் துன்பங்களை என் மேல் சுமத்துகிறார், அது மனிதனின் இருப்புநிலை
நான் அவருடய வயது முதிர்ந்த தாதி, அவர் நான் அவருடைய பாதங்களைக் கழுவக் கட்டளையிடுகிறார்
அவர் என்னைக் கண்ணாடிகளில், செம்பழுப்பு நிற மரக்கட்டையில், கடைகளின் ஜன்னல்களில் வேவு பார்க்கிறார்.
ஒரு பெண்ணோ இன்னொருவளோ அவரை நிராகரித்திருக்கிறாள், நான் அவருடைய வேதனையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அவர் இப்போது அவருடைய கவிதையை ஒப்ப எழுத உரத்துக்கூறுகிறார், அது எனக்குப் பிடிக்கவில்லை.
அவர் நான் அந்தப் பிடிவாதமான ஆங்கிலோ சாக்சனுக்கு தற்காலிகப் பயிற்சித் தொழிலாளியாகவேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
அவர் இறந்த போர்வீரர்களுக்கான கதாநாயக வழிபாட்டிற்கு என்னை வென்றெடுத்திருக்கிறார்,
அந்த மக்களோடு நான் அரிதாகவே ஒரு வார்த்தை பரிமாறிக்கொள்ள முடிந்திருக்கிறது.
கடைசிப் படிக்கட்டுகளில் என்னால் அவரை என்பக்கத்தில் உணர முடிந்திருக்கிறது
அவர் என் காலடியோசைகளில் இருக்கிறார், என் குரலிலும்.
அவருடைய கடைசி விபரம் வரை அவரை நான் வெறுக்கிறேன்.
அவரால் அரிதாகவே பார்க்கமுடியும் என்று சொல்வதில் நான் திருப்தி அடைகிறேன்.நானொரு வட்டத் தனியறைக்குள் இருக்கிறேன் அந்த எல்லையற்ற சுவர் மூடிக்கொண்டு வருகிறது.
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்வதில்லை ஆனால் இருவருமே பொய்சொல்கிறோம்.
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிவோம், ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிக்க முடியாத சகோதரர்.
நீ என்னுடைய கோப்பையிலிருந்து நீரருந்துகிறாய்
நீ எனது ரொட்டியை ஓநாய் போல விழுங்குகிறாய்.
தற்கொலைக்கான கதவு திறந்திருக்கிறது
ஆனால் இறையியலாளர்கள் அறுதியிட்டுச் சொல்கிறார்கள்
அடுத்து வருகிற முடியரசு நாட்டின் நிழல்களில்
நான் இருப்பேன்
எனக்காகக் காத்திருப்பதாக.