அழகியசிங்கர்/ஓட்டம் பிடித்தார்…

அவர் புகழ் பெற்ற எழுத்தாளன். எல்லா இடங்களிலும் அவர் புகழ் பரவி இருந்தது.
அவர் பெயரைக் கேட்டாலே எல்லோரும் மரியாதையுடன் பார்ப்பார்கள். அது ஒரு காலம்.

புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள். அவருக்கு அதில் ஒரு பெருமிதம்.

இலக்கியக் கூட்டங்களில் அவரைக் கூப்பிட்டுப் பேசச் செல்வார்கள். அவரும் புதிய புத்தகம் தவிர அவரைப் பற்றிப் பேசுவார்.

கூட்டம் நடத்த முடியாதவர்கள் தங்கள் புத்தகங்களை அவர் முகவரிக்கு அனுப்புவார்கள்.

அவர் எதாவது அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதுவார் என்ற நம்பிக்கையில். அப்படி எழுதினால் ஒருசில பிரதிகள் விற்குமென்று அவர்களுக்கு நம்பிக்கை.

நாளடைவில் அவர் புகழ் மங்கத் தொடங்கியது.

இப்போதெல்லாம் அவரை யாரும் மதிப்பதில்லை. அவரிடம் புத்தகங்களும் கொடுப்பதில்லை.

அவரால் எந்தப் பிரயோசனுமில்லை என்றும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது

ஆனால் அவர் எந்த இலக்கிய நிகழ்ச்சியையும் விடுவதாக இல்லை.

புத்தகங்கள் வெளியிட்டு விழாவில் கலந்துகோண்டு
புத்தகங்களை ஓசியில் வாங்கி விடுவார்.
எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் பஸ் பிடித்துச் செல்வார்.

பணம் கொடுத்துப் புத்தகங்களை வாங்குவதில்லை என்று எப்போதோ முடிவு செய்திருந்தார்.

ஏன்? அவரிடம் பணம் இல்லையா? இருக்கிறது.

ஆனால் புத்தகங்களை விலைக் கொடுத்து வாங்கக் கூடாதென்று தீர்மானமாக இருக்கிறார்.

மேலும் இப்போதெல்லாம்
அவர் புத்தகங்களை வாங்கிச் சென்றபின் எந்தப் புத்தகத்தைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் கூட எங்கும் எழுதுவதில்லை.
வாங்குவதோடு சரி. பிறகு அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கூடப் பார்ப்பதில்லை.

இதையும் எல்லோரும் புரிந்து கொண்டு அவரிடமிருந்து ஒதுங்கி விட்டார்கள்.

மேலும் அவர் மற்றவர்களிடம் பேசும்போது தன்னைப் பற்றியே பேசுவார். தான் எழுத்தில் சாதித்ததைச் சொல்லிக் கொண்டிருப்பார். கேட்பவர்கள் மனதிற்குள் சிரித்துக் கொள்வார்கள்.

இப்போதெல்லாம் புத்தகம் வெளியீடு
முடிந்தவுடன் அவர் அடித்துப் பிடித்துக்கொண்டு
மேடைக்குப் போய் புத்தகப் பிரதியை ஆசிரியரிடமிருந்து எப்படியாவது பிடுங்கிக் கொண்டு விடுவார்.

வேறு வழி இல்லாமல் அவர்களும் கொடுக்கும்படி நேரிடும்.

அவரும் வழக்கம் போல் புத்தகங்களை வீட்டில் ஒரு இடத்தில் பரப்பி வைத்துவிட்டு மறந்து விடுவார்.

எழுதிய ஆசிரியரை பாராட்டுவதோ புத்தகம் பற்றி சொல்வதோ அவர் நினைப்பதே இல்லை.

இப்போதெல்லாம் புத்தகம் வெளியிடுபவர் மறக்காமல் அவருக்குத் தகவலே தருவதில்லை. அவர் கண்ணில் பட்டால் ஆபத்து என்றும் நினைக்கிறார்கள்.

அவரோ எப்படியோ சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டம் பற்றி மோப்பம் பிடித்து விடுவார்.

அன்று அப்படித்தான் ஒரு சினிமாப் புத்தகம் வெளியீடு.

அழைப்பில்லாமல் எழுத்தாளன் போயிருந்தார்..

யாரும் அவனரப் பார்த்தவுடன் கண்டு கொள்ளவில்லை.

அந்தப் புத்தக ஆசிரியர் தூரத்தில் இருந்தே அவரைப் பார்த்துவிட்டார்.
அவருக்கு ஏனோ பதற்றம் கூடி விட்டது.

அவருக்குக் கோபம் எழுத்தாளர் மீது. கடுகடு வென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் கூட்டம் முடியும் வரை.

அப்போதுதான் தோன்றியது. எழுத்தாளர் தேவையில்லாமல் கூப்பிடாமல் வந்திருக்கிறாரென்று.

எழுத்தாளருக்கு அவர் எழுதிய புத்தகம் கிடைக்கக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் புத்தக ஆசிரியர் நினைத்துக் கொண்டார்.

முடிவாக புத்தக ஆசிரியர் பேசும்போது, கோபத்தில் அவர் பெயரைக் குறிப்பிடாமல், அவரைப் பற்றி மட்டம் தட்டிப் பேசினார்.

நம்மைப் பற்றிதான் அவர் கூட்டத்தில் பேசுகிறார் என்று எழுத்தாளர் நினைக்க தவறவில்லை. ஆனால் பொருட்படுத்தவில்லை.

புத்தக ஆசிரியர் மேடையில் பேசும் போது , ‘சிலர் புத்தகங்களை ஓசியில் வாங்குவதற்காகவே இங்கு வருகிறார்கள். அவர்களுக்குப் புத்தகத்தைக் கொடுத்தாலும் ஒன்றும் எழுதப் போவதில்லை. இப்படியெல்லாம் எழுத்துலகத்தில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு புத்தகத்தை ஓசியிலே வாங்க நினைக்கும் இவர்களை நாம் என்ன செய்ய முடியும். ?’

தன்னைப் பற்றிதான் புத்தக ஆசிரியர் பேசியிருக்கிறாரென்று யோசிக்காமல், கூட்டம் முடிந்தவுடன், அந்த ஆசிரியரிடம் போய் தனக்கு ஒரு பிரதி வேண்டும் என்று கேட்கப்
போனார்.

தூரத்தில் அந்த எழுத்தாளர் வருவதைப் பார்த்தவுடன் நகர்ந்து நகர்ந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார் நூல் ஆசிரியர்.

அன்று எழுத்தாளர் கையில் அகப்படவில்லை நூலாசிரியர்.