புவனா சந்திரசேகரன்/வானப்ரஸ்தம்

78 ஆவது இணைய காலக் கவியரங்கம்
04/01/2024

சென்ற தலைமுறை
கூட்டுக் குடும்பங்கள்
பல்கலைக் கழகங்கள்!

தாத்தாவும் பாட்டியும்
அரிய நூலகத்தின்
அபூர்வப் புத்தகங்கள்!

சித்தப்பா சித்தி
பெரியப்பா பெரியம்மா
விளையாட்டு ஆசிரியர்கள்!

அப்பா வகுப்பாசிரியர்
அம்மா அரவணைக்கும்
சிறப்பு ஆலோசகர்!

தலைமை ஆசிரியர்
துணை வேந்தர் எல்லாம்
தாத்தா மட்டும் தான்!
கண்டிப்பும் கனிவும்
கலந்த பிரம்புடன்!

பாட்டி நிர்வாகி
கதை சொல்லி!
தெய்வத் துதிகள்
கற்பிக்கும் இசையரசி!
பள்ளியின் தாளாளர்!

அண்ணன் தம்பி
அக்கா தங்கைகள்
பல்வேறு வகுப்புகளின்
மாணவச் செல்வங்கள்!

வீட்டின் பூஜையறை
பிரார்த்தனை சபை!
மாமா அத்தை மற்ற உறவுகள்
அவ்வப்போது வருகை தரும்
கௌரவ ஆசிரியர்கள்!
(விஸிட்டிங் புரொஃபஸர்கள்)

பண்டிகைகள் விருந்துகள்
சிறப்பு விழாக் கொண்டாட்டங்கள்!
பரிசுகளாகப் புதுத் துணிகள்!
வகை வகையாகத் தின்பண்டங்கள்!

அன்பும் செழித்தது!
உறவுகளின் மேன்மை புரிந்தது!
ஒற்றுமை வளர்ந்தது!
உலக ஞானம் வீட்டில் கிடைத்தது!

இன்றைய தலைமுறை
சின்னக் குடும்பங்கள்
தனிமைத் தீவுகள்!
வெளிக் காற்று புகாத
இருண்ட சிறைச்சாலைகள்!

குழந்தைகள் தினமும்
நேரம் கழிக்கத் தேவை பணம்!
மழலையர் பள்ளி,
விளையாட்டுப் பள்ளி,
பள்ளி செல்லும் முன்
பழகுவதற்கு சிறு பள்ளி,
விளையாட்டுக் கற்பதற்கு
தனிப் பள்ளி
நுண்கலைகள் கற்பிப்பதற்கு வேறொரு பள்ளி
பல்வேறு வகுப்புகள்
பணம் கொடுத்து விலைக்குக் கிடைக்கின்றன!

யூ ட்யூப் மாமிகளும் பாட்டிகளும்
சமையல் கலை கற்பிக்கத்
மாமியார்களும்  மாமனார்களும் ஆரண்யங்களில் தனியாக
வானப்ரஸ்த வாழ்வே கதியென்று
மூலையில் கிடக்கிறார்கள்!