இரங்கற்பா/போர்ஹெஸ்


—-

தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி


———
மூன்று தொன்மையான முகங்கள் என்னோடு தங்கியிருக்கின்றன
ஒன்று சமுத்திரம், அது கிளாடியஸோடு பேசிக்கொண்டிருக்கும்
இன்னொன்று வடதிசை அதன் உணர்ச்சியற்ற மனப்பாங்குடன்
சூரியோதயத்தின் போதும் சூரியஸ்தமனத்தின் போதும்
காட்டுமிராண்டித்தனமாய் இருப்பது
மூன்றாவது மரணம், கழியும் காலத்திற்கு நாம் கொடுக்கும் இன்னொரு பெயர், நம் அனைவரையும் களைப்படையவைப்பது.
கனவு காணப்பட்ட அல்லது உண்மையாகவே நிகழ்ந்த வரலாற்றிலிருந்து கிளைத்த
மதச்சார்பற்ற சுமை
என்னைக் குற்ற உணர்வு போல தனிப்பட்ட முறையில்
ஒடுக்கிக்கொண்டிருக்கிறது
வானத்தின் கீழே டென்மார்க்கை ஆண்ட
ஸ்கைல்ட் ஸ்கீவிங்கின் உடலை கடலுக்குத் திரும்ப
சுமந்து செல்லும் பெருமிதக் கப்பலைப் பற்றி
சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்
பாம்புகளைக் கடிவாளமாகக் கொண்ட
பெரிய ஓநாய்
எரியும் படகுக்கு இறந்த அழகான கடவுளின்
தூய்மையையும் வெண்மையையும் வழங்கிய
பெரிய ஓநாயைப் பற்றி
சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்
நான் கடற்கொள்ளையர்களைப் பற்றியும் சிந்திக்கிறேன்
எந்தத் தண்ணீரில் அவர்கள் தங்கள் சாகசங்களை நிகழ்த்தினார்களோ அதே தண்ணீரின் எடைக்கு கீழ்
அவர்களுடைய மனிதச்சதை சிதறிக்கிடப்பதை சிந்திக்கிறேன்
வடக்கு ஒடிசிக் கடற்பயணங்களில் மாலுமிகள் பார்த்த
கடற்கரைக் கல்லறைக் கூடங்களைப் பற்றி சிந்திக்கிறேன்
நான் என்னுடைய மரணத்தைப் பற்றி சிந்திக்கிறேன்,
முழு நிறைவான என் மரணம்
ஒரு அஸ்தி கலசம் இல்லாதது
ஒரு கண்ணீர்த்துளி இல்லாதது.