யுகயுகன் கவிதை

ஆவல் ததும்ப கொண்டு வந்து
முற்றத்தில் நட்டு வைத்தேன்
அழகு செடியொன்றை

நீரூற்ற மறந்த பொழுதுகளில்
அது தன் கண்ணீரைக் குடித்து வளர
கற்றுக் கொண்டது

பறவைகள் வந்து எச்சமிட்டன
முகம் சுளித்தேன்
கனிவதை கைவிட்டது

அதன் சிறு கிளையில்
என் ஆடை சிக்கிய தருணத்தில் எரிச்சலுற்றேன்
கிளைப்பதை கைவிட்டது

முதிரிலைகள்
முற்றத்தில் அலைந்தன
அலுத்துக் கொண்டேன்
துளிர்ப்பதை கைவிட்டது

அன்பின் அடைமழை கால நினைவுகளைப்
பற்றிக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்கிறது மொட்டை மரமாய்

அதன் வேர் அகழ்ந்து கொண்டிருக்கிறேன்
ஆசை ஆசையாய் வளர்த்தேன்
சனியன் பட்டுவிட்டது என்றபடி.

தகவமைப்பின் தற்கொலைப் பாறை
மீதிருந்து ஓர் உடல் சரிகிறது.

.