
முன்னும் பின்னும்
பறக்கும்
இறகுப் பந்து
அந்தரத்தில் தான்
எப்போதும்
உயிர்ப்போடு இருகிறது
பூப்பந்து
நட்சத்திரப் பந்தாக
மாறிவிடுவதும்
அப்போது தான்
சீரான பறத்தலின் லபத்தில்
மட்டை தொடுகிறதா
பந்து தொடுகிறதா
என்று தெரியாமல்
ஒன்றை ஒன்று முத்தமிட்டு
கொஞ்சிக் கொண்டிருக்கும்
களி நடனத்தில்
மோதிக் கொள்ளும் போதே
சமயத்தில்
உக்கிரகமான போர் மூண்டு விடும்
இரண்டுக்குமிடையில்
ஆவேசம் ஆவேசம் ஆவேசம்
அத்தனையும் அடங்கி
மரணமுற்றவனைப் போல
சட்டென்று இரண்டும்
தரையில் சாய்ந்து விடும்
விளையாட்டு முடிந்த பின்பு
