நாணு/வணக்கம் அன்பர்களே..

இன்று ஏற்பட்ட அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை வேறு யாருக்காவது இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.. ஆனால் எனக்கு இது முதல் தடவை.. ரொம்பவே புளங்காகிதமடைந்து விட்டேன்..
சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் 47வது புத்தகக் கண்காட்சி நடந்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
444-445 விருட்சம் அரங்கில் வழக்கமாக விருட்சம் அழகியசிங்கரும் குவிகம் கிருபானந்தனும்தான் கல்லாவில் உட்கார்ந்திருப்பார்கள். இன்று (11/01/2024) கிருபானந்தனுக்கு சொந்த வேலை காரணமாக வரமுடியாமல் போனதால் என்னை அழகியசிங்கருக்கு உதவியாக கல்லாவில் உட்காரும்படி கேட்டுக் கொண்டார்கள்.
நானும் ஆஜர் ஆகிவிட்டேன்.
புத்தகப்பிரியர்கள் விருட்சம் அரங்குக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்..
ஒருவர் ஏழெட்டு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து பில் போட எடுத்து வந்தார். நானும் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பில் எழுதிக் கொண்டிருந்தேன்.. நான்காவது புத்தகம் பில் எழுதி முடித்தபின் ஐந்தாவது புத்தகத்தை எடுத்தவனுக்கு அதிர்ச்சி.. காரணம் அது நான் எழுதிய “அன்புள்ள அம்மாவுக்கு” சிறுகதை தொகுப்பு. உடனே என் உடம்பிலிருந்த செல்களெல்லாம் ஆனந்த தாண்டவம் ஆடத் தொடங்கின. ஆனால் எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பில் எழுதி அடுத்த புத்தகத்தை எடுத்தவனுக்கு மீண்டும் பன் மடங்கு அதிர்ச்சி.. காரணம் அடுத்த புத்தகம் என்னுடைய “தீதும் நன்றும்”. அந்த கணத்தில் எனக்குள் ஏற்பட்ட சந்தோஷ உணர்வுகள்.. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
நான் அழகியசிங்கரைப் பார்த்தேன். அவர் சிரித்துக் கொண்டே புத்தகம் வாங்கியவரிடம்..
“சார்.. என்ன இந்த எழுத்தாளர் புக் ரெண்டு வாங்கியிருக்கீங்க? இவரை உங்களுக்குத் தெரியுமா”
என்று அப்பாவியாகக் கேட்டார்.
உடனே அவர்..
“தெரியாது சார்.. ஆனா புத்தகத்தைப் பார்த்த உடனே மனசுக்குப் பிடிச்சுது. வாங்கணம்னு தோணிச்சு.. வாங்கிட்டேன்”
அதன் பிறகு நான் தான் அந்த புத்தகங்களை எழுதினவன் என்று அழகியசிங்கர் அவரிடம் கூறினார்.
அந்த வாசகர் விடைபெற்றுக் கொண்ட சிறிது நேரத்தில் ஒரு இளம் தம்பதியர் அரங்குக்கு வந்தார்கள். சுற்றி ஒவ்வொரு புத்தகமாக ஆராய்ந்தார்கள். இறுதியாக ஒரு புத்தகத்துடன் பில் போட வந்தார்கள்.
அவர்கள் நீட்டிய புத்தகத்தைப் பார்த்தவனுக்கு அதைவிட பேரதிர்ச்சி இருக்க முடியாது.
“தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அனுபவங்களும்”
என்னுடைய புத்தகம்தான்.
நான் உணர்ச்சிக் கொந்தளிப்பில் பில் போட்டுக் கொண்டிருக்க அழகியசிங்கர்தான் அவர்களுடன் பேசினார்.
“ஏன் சார் இந்த புத்தகம்?”
அதற்கு அந்த இளைஞர்..
“சார்.. இந்த டைட்டில் எனக்கு ரொம்பப் பிடிச்சுது. வாழ்க்கைல நானும் எத்தனையோ தவற விட்டிருக்கேன். அதனால இந்த அனுபவங்களையும் படிக்க ஆவலா இருக்கு”
அவ்வளவு தான்.. என் மனக்கண் முன் ஆயிரம் தேவதைகள் வெள்ளை உடையில் நடனமாடத் தொடங்கி விட்டார்கள்.
அவர்கள் சென்ற பிறகு அழகியசிங்கர் என்னைப்பார்த்து..
“நாணு.. உங்க எழுத்தோட மகிமை உங்களுக்கேத் தெரியலை”
இது போதாதென்று இன்னொரு இன்ப அதிர்ச்சி..
நண்பர் இளங்கோ குமணன் மனைவியுடன் வந்திருந்தார்..
“நாணு.. உங்க புத்தக லாஞ்ச் அன்னிக்கு என்னால வர முடியாமப் போச்சு. அன்னிக்கு லாஞ்ச் ஆன புக் இருக்கா?”
தனிமரத் தோப்பு…
பில் போட்டுக் கொடுத்தேன். குமணனின் மனைவி எங்களை க்ளிக் செய்தார்.
ஆக.. இன்று எதிர்பாராதவிதமாக என்னுடைய புத்தகத்துக்கு நானே பில் போட்ட ஆனந்த அனுபவம்..
அனுபவம் புதுமை.. என்று பாட்டு பாட வேண்டும் போலிருந்தது.. (சரி.. சரி.. பாடலை!)
எழுத்தாளர்கள் புத்தகம் எழுதுவது ஆனந்தம். அந்தப் புத்தகங்கள் விற்பனையாவதை நேரில் காண்பது பேரானந்தம். அந்தப் புத்தகத்துக்கு அந்த எழுத்தாளனே எதிர்பாராத விதமாக பில் போடுவது.. பரமானந்தம்..
அந்த பரமானந்தத்தை இன்று எனக்குக் கொடுத்த அழகியசிங்கருக்கும் கிருபானந்தனுக்கும் நன்றி..
கடவுளுக்கு நன்றி

One Comment on “நாணு/வணக்கம் அன்பர்களே..”

  1. நரி முகத்தில் விழித்தால் தான் இப்படியெல்லாம் நடக்குமாம்! எங்கே பிடித்தீர்கள் அந்த நரியை?

Comments are closed.