நாகேந்திர பாரதி/தாய்க் கிழவி

அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை

கொல்லம் பக்கத்தில் ஒரு கிராமம் அது . வெறுப்புடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்க் கிழவி கம்பை ஊன்றிய படி. .

எவ்வளவு நாள் ஆசையுடன் வளர்த்து ஆளாக்கிவிட்ட அந்தப் பையன் . அவளை விட்டு ஓடியவன் எப்போ திரும்பி வருவானோ என்ற ஏக்கத்தில் எத்தனை வருடங்கள் கழிந்தன.. ஒரே பையன். கணவனும் இறந்தபின் அவனே பிற்காலத்தில் தன்னைக் காப்பாற்றுவான் என்று எத்தனை ஆசையுடன் இருந்தாள் .

அவனோ ஆரம்பம் முதல் சோம்பேறி. எந்த வேலையும் செய்யாமல் , ஊர் சுற்றிக்கொண்டும், எங்காவது குளக்கரையில் சும்மாவே உட்கார்ந்து கொண்டும், பசி எடுத்தால் வீட்டுக்கு வந்து ‘ அம்மா , சாப்பாடு போடு ‘ என்று அவளை அதட்டிக் கொண்டும். .

யாருடனும் சேருவதும் இல்லை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினாலும் அங்கே ‘கடைசி பெஞ்சில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று சொல்லி பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தி விட்டார்கள். ‘ஏதாவது வேலைக்குப் போடா ‘ என்று அவள் திட்டானாலும் பதில் இல்லை. ‘எனக்கு வேலை பார்க்கப் பிடிக்கலை . சும்மா தான் இருப்பேன் ‘ என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். ஆனால் பசி மட்டும் வந்து விடும். ‘சாப்பாடு போடு ‘ என்ற ஒரே வார்த்தை தான்.

‘ வெளியே தெருவுல போயிட்டு வாடா, நாலு பேரோட பழகுடா ‘ என்று சொன்னாலும் எங்கும் போகாமல் ஏதோ யோசனையில் வீட்டிலேயே கிடந்தான். அவனுக்குள் தெரியும் ஏதேதோ வெளிச்சங்கள் . ‘ அந்த சுகம் உனக்குத் தெரியாது’ ன்னு அவளை அடக்கி விட்டு முடங்கிக் கிடந்தான் .

‘ ஏண்டா நீ பின்னால வளர்ந்து ஆளாகி என்னை காப்பாற்றுவேன்னு பார்த்தா உன்னை காப்பாற்றுறதே என் பொழப்பா போச்சேடா’ என்று அந்த தாய் சொல்லுவதெல்லாம் அவன் காதுகளில் ஏறவே ஏறாது.அவன் வாயில் இருந்து பசிக்கும் போது ‘ சாப்பாடு சாப்பாடு ‘என்று ஒரே வார்த்தை மட்டும் தான். சில சமயம் வெளியே போய்ப் பக்கத்துக் காட்டில் இருந்து விட்டு பசிக்கும் போது வீட்டுக்கு வருகை . அவளும் எவ்வளவு நாட்கள் தான் பொறுமையாக இருப்பாள் . வயதாகி அவள் உடலும் தளர்ச்சி . அவளாலும் வேலை செய்ய முடியாத நிலைமை .

இவனோ ‘ ஏம்மா வேலைக்கு போகாம வீட்டில் இருக்கே ‘ என்று அதட்டல். ‘ ஏன்டா நீ போய் என்னைக் காப்பாற்ற வேண்டியது இருக்க என்னை போகச் சொல்றியேடா ‘ என்ற புலம்பித் தள்ளினாள் . இருவரும் பட்டினி சில நாட்கள் . ஒரு நாள் பசி பொறுக்காமல் பக்கத்து வீட்டில் போய் திருடி அடிபட்டு ஜெயிலுக்குப் போனவன்தான். திரும்பி வரவேயில்லை.

இவளுக்குத் தெரிந்தவர்கள் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு காலம் தள்ளிக் கொண்டு இருந்தாள் அந்தக் கிழவி. ‘எப்போவாவது அவன் திருந்தி திரும்பி வர மாட்டானா, தன்னைக் காப்பாற்ற மாட்டானா ‘, என்று ஒரு ஏக்கம் எப்போதும் அவளுக்கு. ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரி வந்து அவளைக் கூட்டிச் சென்றாள். ‘பக்கத்து ஊருக்கு ஒரு சாமியார் வந்திருக்காரு. அவரைப் பார்க்க ஒரு கூட்டம். அவர் முகத்தைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் தெரியுதாம். அவருக்குக் காணிக்கை சாப்பாடு மட்டும் தான். அவரைப் பார்த்துட்டு வந்தா எல்லோருக்கும் நல்லது நடக்குதாம். உன் மகனும் கிடைப்பான் . நீயும் வாயேன் ‘ என்று கூட்டிச் சென்றாள் .

அங்கே ஒரு பெரிய வரிசை. அவர்கள் கைகளில் எல்லாம் ஏதாவது சாப்பாடு, தின்பண்டம்.. கூட வந்தவள், இவள் கையிலும் ஒரு வாழைப்பழத்தைத் திணித்து வைத்திருந்தாள் . ‘ வெறும் கையோடு போனா, சாமி கோபப் பார்வை பார்க்குமாம். நல்லது இல்லை ‘ என்று சொல்லிக் கூட்டி வந்திருந்தாள்.

வரிசை நகர நகர , பக்கத்தில் நெருங்க நெருங்க , அந்தச் சாமியாரின் தாடி மீசைக்குள் ஒளிந்திருந்த அவன் முகம் அவளுக்குப் புரிந்தது. வெறுப்புடன் ‘ சோம்பேறிப்பய ‘ என்று திட்டி விட்டு கூட்டி வந்தவளை விட்டுவிட்டு , வரிசையை விட்டு விலகி , அந்த வாழைப்பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு தோலை அந்தச் சாமியார் மேல் வீசி விட்டுத் திரும்பினாள்.

அதோ, தளர்ந்த நடையோடு , கம்பு ஊன்றி நடந்து செல்லும் அந்தத் தாய்க் கிழவிக்கு வேண்டியதெல்லாம் ஒரு வாய்ச் சாப்பாடு , இருக்க ஒரு இடம் , அதைக் கொடுக்காமல் சென்றவனைச் சுற்றித் தோன்றும் ஒளி வட்டத்தால் அவளுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. ‘ பொறுப்பில்லாத சோம்பேறித்தனத்திற்கு சாமியார் பட்டம் வேறு ‘ என்று திட்ட மட்டும் தான் தெரியும் அவளுக்கு. அந்த சோம்பேறி மகனின் உயிரைச் சுமந்த அவள் வயிறுக்குத் தெரிந்த ஞானம் அதுவே.

————————–