வேலு ராஜகோபால்/ஒரு குழந்தை போல 

                        ’வாழ்க்கை பலருக்குப் பலவிதமாக அமைந்துவிடுகிறது.  ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிருடன் தொடர்புடையது. சிலரது வாழ்க்கை மிகவும் எளிதாக, வசதியாக எல்லா சுகங்களும் கைவரப்பெற்றதாக இருக்கிறது. இன்னும் சிலரது வாழ்க்கை எந்தச் சுகமும் நிம்மதியும் இல்லாமல் இருக்கிறது. பெரும் சிக்கலான இந்த உலகத்தைப் புரிந்து கொண்டுவிட முடியுமா?’ இந்தச் சிந்தனைகள் பாஸ்கருக்கு ஏற்படும்போது மிகவும் தாமதமாகிவிட்டது. அதனால் என்ன? வயதான பின்னர் தெரிந்துவிட்ட காரணத்தினாலேயே அது உண்மையற்றதாகி விடுமா?   

            பாஸ்கர் எந்தச் சிறப்புகளும் இல்லாத ஒருவன். சமூகம் என்னும் சுவரில் அவனும் ஒரு செங்கல். பள்ளிக் கூடத்தில் படிக்கும் போதிலிருந்து மிகவும் சாதாரணமான மாணவன்தான். ’பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணிவிட முடியுமா’ என்று ரிசல்ட் வரும் வரை அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.  அது குறித்த பதட்டம் அந்நாட்களில் வதைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் கடைசி நிமிடத்தில், அவனுக்குப் பிடிக்காத கணக்குப் பாடத்தில் 69 மதிப்பெண்கள் வாங்கிய போது அவனுக்கே வியப்பாக இருந்தது. எண்களைக் கண்டாலே அவனுக்குப் பயம். கணிதமும், அது போலவே சூத்திரங்களைக் கொண்டு அவனை மிரட்டிய இயற்பியலும் அவனது கொலைகார எதிரிகளாகவே இருந்தனர்.

            பி.யு.சியில் சேர்க்கும் போது அவனது அம்மாவுக்கு அவனை டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டதால், விஞ்ஞானப் பிரிவில் சேர்த்துவிட்டாள். ஆனால் அவள் பேராசையை தன்னால் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்திருந்தும், கணக்குத் தவிர்ந்த, இரண்டாவது குரூப்பில் சேர்ந்தான். இயற்பியல், வேதியியல், உயிரியல் இருந்த குரூப்.  இயற்பியல் அவனை ரொம்பவும் பயமுறுத்தியது. வேதியியல் ஒன்றும் குறைந்ததாக இல்லை. தினமும் படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், அம்மா இன்னும் பலர் சொல்வதால், அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். ஆனால், ஒருநாள் கூட அன்றைக்கு நடத்திய பாடத்தைப் படிக்க முடியவில்லை. தினமும் ஐந்து வகுப்புகள் என்றால், அதை வீட்டில் போய்ப்படிக்க ஐந்து மணிநேரம் ஆகும். அப்படியெல்லாம் படிப்பவர்கள் தேவதைகள் என்று அவனுக்குத் தோன்றியது.  உலகம் என்ன தேவதைகளால் மட்டுமே ஆனதா? கோடானு கோடிச் சாதாரண மனிதர்களால், பிறரால் ‘விவரம் தெரியாதவர்கள்’ என்று அழைக்கப்பட்கிறவர்களால் ஆனது. இந்தச் சாதாரணர்கள் இல்லையென்றால் இந்த உலகம் ஸ்தம்பித்துவிடும்.  

பி.யு.சியும் எப்படியோ மூன்றாவது வகுப்பில், பாஸ் பண்ணிவிட்டான்.  காலேஜில் அட்மிஷன் கிடைத்தால் அதுவும் யோகம் என்றே தோன்றியது.  அவனுடைய வகுப்பிலிருந்த 80 மாணவர்களில், எல்லாப் பாடங்களிலும் பாஸ் செய்தவர்கள், 15 பேர் என்று கேள்விப்பட்டான். ‘பெரிய கண்டம்தான். அதைத் தாண்டிவிட்டேன் போலிருக்கு’ என்று திருப்திப் பட்டுக் கொண்டான்.

            கல்லூரியில் சேரப்போனபோது, தாவரவியலில் சேரலாம் என்று நினைத்துக் கொண்டுதான் போனான். அதற்கு விசேஷமான காரணம் இருந்தது. ‘பி.யூ.சியிலேயே, தாவரவியல் பாடம் நடத்தும் போது உளுக்கு எடுத்துவிட்டார்கள். அதில் மட்டும் முதல் வகுப்பில் பாஸ்பண்ணியிருந்தான். அதுவும் ஒரு ஆச்சரியம்தான். பள்ளியில் படிக்கும் போது உயிரியலைக் கண்டு பயம்.  பி.யு.சி.யில் உயிரியலில் அதிக மதிப்பெண்கள் வாங்கியதற்கு, கடுமையாக நடந்து கொண்ட ஆசிரியர்களே காரணம் என்று தோன்றியது.

ஆனால் கல்லூரி வளாகத்துக்குள் நுழையும் போது, எதிரே வந்தவர், விலங்கியல் பேராசிரியர்.  ‘இந்தப் பையன் நம்ம துறைக்கு வரமாட்டான்’ என்று யூகித்து, ’என்ன சப்ஜெக்ட்ல சேரப்போற?’ என்று அக்கறையின்றிக் கேட்டார். அந்த ஒரு நிமிடத்தில் ‘ப்ரொஃபெஸ்ஸர், பயங்கர ஸ்டிக்ட். தாவரவியல் லெக்சரர்களைவிட படிக்கிறவர்களை மாணவர்களைக் கடுமையாக நடத்துவார். பள்ளிக் கூடத்து டீச்சர் மாதிரி’ என்று கேள்விபட்டிருந்தது ஞாபகம் வரவே, ‘சார், விலங்கியல் சேரணும்’ என்று சொன்னான். பட்டம் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதே அவனது குறிக்கோள். இதுமாதிரி கண்டிப்புடன் நடந்து கொள்கிறவர்களிடம் படித்தால் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அந்த நிமிடத்தில் ஏற்பட்டது. கல்வியைப் பற்றி அவ்வளவுதான் அவனுக்குப் புரிதல் இருந்தது.  அவனுடைய பதிலை எதிர்பாராத அதிர்ச்சியில், அவர் உடனே அவனைப் பிடித்துக் கொண்டார். ’செர்டிபிகெட்லாம் கொண்டாந்திருக்கியா?’ என்றார். ‘ஆமா, சார்.’ ’சரி, டிபார்ட்மெண்ட்டுக்கு வா, ஃபார்ம் ஃபில்லப் பண்ணுவோம்’ என்று அழைத்தார். ‘நானே ஃபில்லப் பண்ணிருவேன்’ என்று சொல்லிவிட்டு அவரை அனுப்பிவிட்டான். பிறகு பிரின்ஸிபால் அறைக்கு வெளியில் நின்றபோது, மீண்டும் அங்கு வந்த புரொஃபஸர், கையோடு அவனை உள்ளே கூட்டிப் போய் கையெழுத்து வாங்கி  அட்மிஷன் போட்டுக் கொடுத்தார்.  மூன்றாண்டுகள் தட்டுத் தடுமாறி, கஷ்டப்பட்டு படித்ததாகச் சொல்லிக் கொண்டு அவனுக்குத் தெரியாமல் எப்படியோ பாஸாகிவிட்டான்.  அதற்கு முன்னால் வேண்டிக் கொண்டபடி, அப்பாவுடன் திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்டான்.

            அத்துடன் அவனது அதிர்ஷ்டம் முடிந்து போனது.  அவனுக்குப் பாடம் படிப்பதே கசந்து போனது. அதில் அவனுக்குப் பிடித்தமாதிரி எதுவுமே இல்லை. ஆசிரியர்களும் ஏதோ கடுங்காவல் தண்டனைக் காவலர்கள் போலவே தெரிந்தார்கள். அவனுக்குத் தமிழ்ப் பாடம் பிடித்தது. அதிலும் கூட அவனால் இலக்கணம் கசந்தது. வரலாறு படித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ரொம்பவும் மோசமான மாணவர்கள்தான் வரலாறு, தமிழ் போன்ற பாடங்களில் பட்டம் படித்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் ஒரு இழுக்காகவே அந்தக் காலங்களில் கருதப்பட்டது. அவன் வாங்கிய மதிப்பெண்ணுக்கு பலகலைக்கழகத்தில் மட்டுமே இருந்த முதுகலைப் படிப்புக்குக் கொஞ்சமும் தகுதி கிடையாது என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. அத்துடன் படிப்பைப் பற்றிய சிந்தனைகளை முடித்துவிட்டு, வேலையில்லாமல் அலைந்து கொண்டிருந்த பல கோடிப் பேர்களில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான். அவனுடைய குடும்பத்தில் பட்டம் வாங்கியவன் அவன் ஒருவன் தான் என்று அப்பா பெருமையுடன் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறான்.

            அடுத்த நான்காண்டுகளில், துணிக்கடையில் விற்பனையாளனாக, பில் போடுகிறவனாக, மோட்டார் கம்பெனியில் கணக்கெழுதுகிறவனாக, ஹோட்டலில் சூபர்வைசராக பல வேலைகள் பார்த்துக் களைத்துப் போனான்.  சூடு சுரணை உள்ளவன் இந்தமாதிரி வேலைகளைப் பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.  பலமாதங்கள் எங்கேயும் வேலைக்குப் போகாமல் சும்மா இருந்தான்.

            தூத்துக்குடியிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வையஞ்சாவடி கிராமத்தில் இருக்கும் அவனைப் போன்ற இளவட்டங்கள் பெரும்பாலும் ஊரில் இருப்பதில்லை. பத்துப் பைசா கிடைத்தாலும் நகரத்துக்கு ஓடிவிடுவார்கள்.

            பாஸ்கரின் அப்பா ராமசாமி விவசாயத்துறையில் உதவியாளராக இருந்தார். மனைவியும் மூன்று மகன்களும், ஒரு பெண்ணும் அவரது கொற்றக் கொடையின் நிழலில் இருந்தனர். மனைவி பொன்னம்மா, அவருக்குச் சாமரம் வீசுகிறவராக இருந்தார். ஒரே ஒரு பிரச்சனை. ரங்கூனில் காவலில் வைக்கப்பட்டிருந்த கடைசி முகலாயப் பேரரசரைப் போல, அவர்களது ஆட்சி அவர்கள் வீட்டு வாசலைத் தாண்டவில்லை.  அண்ணனைப் போல வேலையில்லாமல் இருந்தால், தெருநாய் கூட மதிக்காது என்று முதல் தம்பி சரவணனுக்குப் புரிந்திருந்தது.   ஆனால தெருநாய்க்கு உள்ள சுதந்திரம் வீட்டில் வளர்க்கப்படும் அடிமை நாய்க்குக் கிடையாது என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. மூன்றாமவன் வேல்முருகன் பிளஸ் டு படித்துக் கொண்டிருந்தான்.  நான்காவதான லட்சுமி ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். ஒருவர் சம்பாத்தியத்தில் ஐந்து பேர் வாழ்வது அந்தக் காலத்திலும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அரசு ஊதியமாயிற்றே!. பற்றாக் குறையாக இருந்தாலும், பசி பட்டினி கிடையாது.

            ராமசாமிக்கு ரிடையர் ஆக ஒருவருடம இருந்தது. ’மூத்தமகன் வேலைக்குப் போவான். தனது பாரம் கொஞ்சம் குறையும் என்ற அவரது கனவு மெல்லப் புகையாகிக் கொண்டிருந்தது.  இரண்டாவது மகனுக்காவது வேலை கிடைத்துவிட்டால் தனது துயரங்கள் அனைத்துக் நீங்கிச் சுபீட்சம் வந்துவிடும் என்று அடுத்த ஆசையில் மிதந்து கொண்டிருந்தார்.  தட்டுத் தடுமாறி அவர்கண்ட வாழ்க்கையில் அவரது பென்ஷனும், ஒரு மகனுடைய சம்பளமும் போதுமானதாக இருந்திருக்கும். அதற்குமேல் அவரால் கனவு காணக்கூட முடியவில்லை.  அடிக்கடி அவருக்கு ஒரு கனவு வரும். ’குடும்பத்தினர் ஆறுபேரையும் ஒரு பேராற்று வெள்ளம் அடித்துப் போய்க்கொண்டிருக்கிறது. அவர்களுடைய தலைகள் மட்டும் தண்ணீருக்கு வெளியில் தெரிகிறது. ஒருவராலும் ஆற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒருவருக்கொருவர் பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஆறுபேரும் கரையேறிவிடுவோமா? நீரில் மூழ்கிவிடுவோமா என்ற பதட்டம். மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் போது ராமசாமி விழித்துக் கொள்வார். பதினைந்தாம் வயதிலிருந்து வேலைக்குப் போகும் வரை, கவிஞனாகிவிட வேண்டும் என்ற தனது வேட்கை பகல் கனவானதன் விளைவு இது என்று அவருக்குத் தோன்றும். உடனே சிரித்துக் கொள்வார்.  கவிஞனாகியிருந்தால், திருமணம் செய்துகொண்டிருக்க முடியுமா? பிள்ளைகளைக் காப்பாற்றி இருக்க முடியுமா? என்று தோன்றும் போதே, ’தமிழ்நாட்டில் என்ன கவிஞர்கள் எல்லாம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களும் ஏதோ பிழைப்பு நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்’ என்றும் யோசிப்பார்.

            பாஸ்கர் வங்கித் தேர்வுகள், மாநில மத்திய அரசுத் தேர்வுகள் எதையும் ஒன்றுவிடாமல் எழுதிக் கொண்டிருந்தான். அவன் எப்போது படிப்பான் என்ற ரகஸியம் யாருக்கும் தெரியாது.  வீட்டில் இல்லாத நேரங்களில், தூத்துக்குடியில் பிரையண்ட் நகர்  முதல் தெரு தெருமுக்கில் இருக்கும் அவனுடைய நண்பன், முத்துராஜாவின் சைக்கிள் கடைக்குப் போய்விடுவான்.  அங்கிருக்கும் நீளமான பெஞ்ச்சில் அமர்ந்து கொண்டால் நேரம் போவதே தெரியாது. மாரியப்பன், கணேஷ், வேல்முருகன், வீரமணி என்று அவன் வயதை ஒத்த நண்பர்கள் கூடிவிடுவார்கள். சாப்பிடும் நேரங்கள் தவிர எந்த நேரமும் யாராவது உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.  உலகம் முழுவதும் அவர்களது ஆளுகையின் கீழ் வந்துவிடும். வேலையில் இல்லாத வரைக்கும் யாரும் எந்தப் பதவியைக் குறித்தும் கற்பனை செய்து கொள்ளலாம். பி.யு. சி. படிக்கும் போது நன்றாகப் படித்த சந்திரசேகரன் கூட, விலங்கியல் பட்டம் வாங்கிய பின்,  லாரி ஷெட்டில் தன்னுடைய மச்சானுக்கு உதவி செய்யப் போகும் வரை டாக்டராக வழியிருக்கிறதா என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.  அருகிலிருந்த வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கும் ஏஜெண்ட்டுகளாக வந்தவர்கள் அங்கே கட்டவேண்டிய தொகையையும் லஞ்சப் பணத்தையும், சைக்கிள் கடையில் நின்று பிரித்து எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

            அப்படி ஒரு நாளில் போஸ்ட்மேன் அவனைத் தேடிவந்தார். மத்திய அரசில் ‘கிளர்க்’ பதவிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று, தட்டெழுத்துத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் வந்திருந்தது. ஏதோ வேலையே கிடைத்துவிட்டது போல, நண்பர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.  வறண்டு போன அவர்களது பாலைவனத்தில் தூரத்தில் எங்கோ ஒரு சோலை தெரிந்தது. சொந்தம் கொண்டாட முடியாவிட்டாலும், பார்க்கவாவது முடிந்ததே!  ஆனால் தட்டெழுத்துத் தேர்வில் கிடைக்காவிட்டால் பெருத்த அவமானமாகிவிடும். பாஸ்கருக்கு அந்தப் பயமும் கூடவே வந்தது. நண்பர்கள் நடுவில் உற்சாகமாகத் தெரிந்தாலும், வீட்டுக்குல் நுழைந்ததும், தனிமையில் இருக்கும் போதும் அவனது முகத்தில் ஒரு இறுக்கம் தொற்றிக் கொண்டுவிடும். 

            வீட்டில் தான் ஒரு வேண்டாத ஆள் போல உணர்ந்தான். பட்டம் வாங்கி நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது. ‘உருப்படாதவன்’ என்று அப்பா சொல்வதில்லை.  ஆனால் அவனுக்குக் கேட்டது.  அவரது பார்வைகள் அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தன.  அவனுடைய தன்மானப் பிரச்சனை அவர்களுக்குப் புரியவில்லை. அன்றாடப் பிரச்சனைகளின் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.  ‘நீ பெரியவன், பொறுப்பு இருக்க வேண்டாமா?’ அவர்கள் ரேஷன் கடைக்குப் போவது, மண்ணெண்ணை வாங்க வரிசையில் நிற்பது, காய்கறி வாங்கப் போவது பற்றிச் சொன்னாலும் அவனுக்கு அது வேறு ஒன்றாகத்தான் புரிந்தது.  ‘நீயாக, இந்த வேலைகளை எடுத்துச் செய்யக் கூடாதா?’  என்ற அம்மாவின் பேச்சு அவன் மனதைக் கலக்கும்.

            அவன் தம்பி சரவணன் தினமும் ஒரு சினிமாவுக்குப் போய்விடுவான். அவனால் எப்படிப் போக முடிகிறது? காசு எப்படிக் கிடைக்கிறது? அவனுக்குப் பொறுப்புக் கிடையாதா? என்றெல்லாம் பாஸ்கர் நினைப்பான்.  ஆனால், அவனிடமோ, அம்மாவிடமோ கேட்க முடியாது.  மூத்த பிள்ளைகளுக்குப் பெற்றோரிடம் சண்டை போட வராது. அம்மா பாவம் இத்தனை பேருக்கு வேலை செய்தே சக்கையாகிப் போனவள்.  அவளைக் காயப்படுத்தக் கூடாது என்றே நினைப்பான்.  ஆனாலும் அவன் பேச்சின் உக்கிரத்தை, சூட்டை உள்வாங்கிக் கொள்வது அம்மாவின் பகுதி நேர வேலையாக இருந்தது. எதற்கெடுத்தாலும் அம்மாவிடம் மட்டும் பாஸ்கர் சண்டை போடுவான். மற்றபடி அவசியம் இருந்தால் மட்டும் மற்றவர்களிடம் பேசுவான்.

            அன்று தங்கை லட்சுமி தோழி வீட்டுக்குப் போயிருந்தாள்.  வீட்டில் தம்பி தங்கைகள் இல்லை. அவன் மனதில் இறுக்கம் பெருகி, கழுத்தை நெறித்தது.  என்ன செய்வதென்று புரியாமல் தரையில் சும்மா படுத்து, கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘நான் எந்த வேலைக்கும் தகுதியில்லாதவனா? அரசு அலுவலகங்களில் கிளர்க்குகள் என்ன வேலை செய்கிறார்கள்?. அவர்கள் செய்யும் வேலைக்குப் பட்டப்படிப்போ, அறிவோ கூடத் தேவையில்லை. எல்லாம் பழைய ஃபைலைப் பார்த்து, அதே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை என்னால் செய்ய முடியாதா? அவர்களில் மூன்று பேர் செய்யும் வேலையை நான் ஒருவன் செய்து விடுவேன்’. அப்பாவின் அலுவலகத்தில் மேலிருந்து கீழ்வரை எல்லோரையும் அவனுக்குத் தெரியும். ’அவர்களை விட நான் புத்திசாலிதான். ஏதோ தேர்வில் தட்டுத் தடுமாறிப் பாஸ் செய்துவிட்டார்கள் என்பதற்காக, வேலையும் செய்து, பொது மக்கள் எல்லோரையும் கஷ்டப்படுத்தி, அலையவிட்டு, சம்பளம் வாங்கி, பென்ஷனும் வாங்கி.. இன்னும் என்னென்னவோ வசதி வாய்ப்புக்களோடு வாழ்கிறார்கள்.  இங்கே அவர்கள் மட்டுமென்ன உயர்ந்த் குடிமக்களா?. அவர்களை விட நான் உயர்ந்தவந்தான். எனக்குத் தெரியும்.’ மனதுக்குள் வீராப்பாக எண்ணிக் கொண்டானே தவிர, உள்ளுக்குள் துயரம் காடாக மண்டிக் கிடந்தது.

            தேவையான வேலைவாய்ப்புக்களை உருவாக்க இயலாத அரசு, தேவைக்கு அதிகமான தேர்வுகளை நடத்தி, மனிதர்களைத் தரம்பிரித்து, ஒருவனை மேலாகவும், இன்னொருவனைக் கீழாகவும் அவமரியாதை செய்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. அரசும், அரசியல் வாதிகளும் தங்கள் பைகளை நிரப்புவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். தானும் தன்னைப் போன்றவர்களும் வேலையில்லாமல் இருப்பதற்குத் தாங்கள் மட்டும் காரணம் அல்ல என்று புரிந்துகொண்டான்.  அவனோ இதைப் புரிந்து கொண்டவர்களோ எதையும் செய்ய முடிவதில்லை. எதற்காக வேலை கிடைக்கவில்லை என்று அவனுக்குப் புரியவில்லை. ‘நான் ஒழுங்காக, நேர்மையாக வேலைபார்ப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால் வாய்ப்பே இல்லாமல் எப்படி வேலை பார்ப்பது? தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்மையானவர்களாக வேலை பார்க்கிறார்களா?’

            வேலை மட்டும் கிடைத்துவிட்டால், தம்பிகளை, தங்கையை எப்படி முன்னேற்ற வேண்டும், அவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அவனுக்குத் தெரியும்.  அம்மாவுக்கு அடுத்து அவன்தானே?  ஆனால் வீட்டில் மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டே போவது போலிருந்தது. அண்ணன் அதிகாரத்தை இழந்து கொண்டிருந்தான்

            படியேறி மொட்டை மாடிக்குச் சென்றான்.  அவள் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டுத் தங்கமயில் அவனை அவனை ஒருமாதிரிப் பார்த்தாள்.  அவன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். அவளுடைய பார்வையில் தெரிவது அனுதாபமா? அல்லது வேறு ஏதாவதா? வேலையில்லாத அவனுக்கு இரண்டும் தேவையில்லை.  அந்தி மாலை நேரம். இன்னும் இருட்டவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும்.  நிலவு இல்லாத வானம். எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய்விட்டால் என்ன? தூரத்திலுருக்கும் ஒரு நகரத்தில் வேலை கிடைத்தால் நல்லது. வீட்டின் துயரங்களிலிருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும். கொஞ்சம் வருடங்கள் கழிந்த பிறகு திரும்ப வருவது பற்றி முடிவு செய்யலாம்.

            ’பாஸ்கர், பாஸ்கர்’ என்று அம்மா கத்துவது கேட்டது. ‘இருட்டாகி விட்டது. அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். கீழே இறங்கிவா!’. அவளுக்கு மகன் என்ன செய்வான் என்ற கவலை. வேண்டா வெறுப்புடன் கீழே இறங்கிவந்தான். வீட்டில் மஞ்சள் நிற பல்ப் அழுது வடிந்து கொண்டிருந்தது. ‘வேலைக்குப் போனதும் முதல் வேலையாக டியூப் லைட் மாட்ட வேண்டும்’. உள்ளறையின் நிலைப்படியில் உட்கார்ந்து அதில் சாய்ந்து கொண்டான். சாந்து பூசிய சுவற்றில் சாய்ந்துகொண்டால் முதுகில் அப்பிக் கொள்ளும். எதையெல்லாம் சரி பண்ணிக் கொண்டிருப்பது?  அப்பா கடைத் தெருவுக்குப் போயிருந்தார். தம்பிகளும் வீட்டில் இல்லை. தங்கை தோழி வீட்டுக்குப் போயிருந்தாள். அவனால் யாரையும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ’உண்மையிலேயே நான் எதற்கும் லாயக்கில்லாதவனா?’ என்ற சந்தேகம் அடிக்கடி தோன்றியது.

            தட்டெழுத்துத் தேர்வும் முடிந்துவிட்டாலும், இன்னும் முடிவுகள் வரவில்லை. பலமாதங்கள் கடந்து விட்டன. வேலைக்கான தேர்வுகள் எழுதி எழுதி அலுத்துவிட்டான்.  அப்பா ஒருநாள், ‘வேலைகளுக்கு இத்தனை அப்ளிகேஷன் போடுற. எல்லாம் வெட்டிச் செலவாக இருக்கு. தேர்வுகளுக்கு எப்பவாவது படிச்சயா?’ என்று கேட்டார். அதற்கப்புறம் அப்ளிகேஷன் போட அப்பாவிடம் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தான். ஆனாலும் பணம் கேட்க வேண்டியிருந்தது. வேலை இல்லாதவன் இதுமாதிரி கோபப்பட அதிகாரம் இல்லை என்று புரிந்தது. மனப்பாரம் அழுத்தியதைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை.

            ’ஹார்பர்ல டேலி கிளர்க் வேலைக்காவது போ’ என்று அம்மா இரண்டு மூன்றுதரம் சொன்னாள். அப்பா இன்னும் ஒரு வருடத்தில் ரிடையராகிவிட்டால், குடும்பத்தை நடத்துவது கஷ்டமாகிவிடும் என்ற கவலை அவளுக்கு. ஒருவனுக்காவது வேலை கிடைக்காதா?

            தினமும் சைக்கிள் கடைக்கு வரும் சுப்பையா அண்ணனைக் கேட்டான். அவர் ஹார்பரில் வேலை செய்து கொண்டிருந்தார். ‘ஹார்பர்ல இல்லைன்னாலும் தற்காலிக வேலை எங்கயாவது கிடைத்தால் பரவாயில்லைன்ணே! இருந்தா சொல்லுங்க!’

            ’பாஸ்கர், கொஞ்சம் பொறு, காண்ட்ராக்டர்களிடம் வேலைக்குப் போனால் முதலில் அவர்கள் உன்னுடைய சுய நம்பிக்கையை, சுயமரியாதையை நொறுக்கிவிடுவார்கள். கூலி வேலைக்குத்தான் லாயக்கு என்று உனக்கே தோன்றும். அப்படிப் பாடாய்ப் படுத்துவார்கள். வேலையிலும் கசக்கிப் பிழிந்து, உன்னை மற்ற நேரங்களில் ஒன்றுமே செய்யவிடாமல் ஆக்கிவிடுவார்கள்.’ என்றார்.

            ’இல்லைண்ணே! வீட்டில் தண்டச் சோறு என்று நினைக்கிறார்கள்.’ சொல்லும் போதே அவனுடைய கண்கள் கலங்கிவிட்டன. சமாளித்துக் கொண்டு செருமினான். தொண்டை வரை வந்த கேவல், அங்கேயே அழுந்தி நின்றுவிட்டது.

            ’கொஞ்ச நாள் பொறு. உனக்கு இருபத்தி நாலு வயதுதான ஆகுது. எனக்குக் கம்பெனியில வேலை கிடைக்கும் போது இருபத்தி ஒன்பது. இன்னும் நாள் இருக்கு. நம்பு பாஸ்கர்’ அவன் மீது அவனுக்கே நம்பிக்கை இல்லாத போது அவருக்கு அவன் மீது இருந்த நம்பிக்கை ஆறுதலாக இருந்தது. அவர் சொல்லும் போது மீண்டும் கண்கலங்கினான்.

            அவர் சொன்னதை அப்படியே அம்மாவிடம் சொன்னான். அவள் அமைதியாக இருந்தாள்.

            அவ்வப்போது ஏதாவதொருவர், உங்க பையனுக்கு நான் சிபாரிசு பண்ணுகிறேன், அவரைப் பாருங்க இவரைப் பாருங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் அவர்களையெல்லாம் நம்பி, ‘நீ அவரைப் போய்ப் பார்த்தால் என்ன?’ என்கிற மாதிரிக் கேட்டுக் கொண்டிருதாள்.  வாய்ச் சவடால்காரர்களை நம்ப அவன் தயாராக இல்லை. ‘சொன்னதைக் கேட்டாத்தானே வேலை கிடைக்கும்’ என்று நடுநடுவில் அம்மா முனக்கிக் கொண்டிருந்தாள். அது சிறுபிள்ளைத் தனமாகத் தெரிந்தது.

            சாப்பிட்டுவிட்டுப் படுத்த போது நீண்ட இரவின் கரங்கள் அவனை ஆரத் தழுவிக் கொண்டன. ஒரு புறம் மூச்சுவிடுவதே கடினமாக இருந்தது. மறுபுறம் இரவின் இறுக்கம் அமைதி தருவதாகவும் இருந்தது.  மழைக்காலத்துப் பூச்சிகளின் ரீங்காரம் காதைக் குடைந்துகொண்டிருந்தது. ‘கொலுசு அணிந்த கால்கள் நடந்து வருவதே போல தாள லயத்துடன் இரவுப் பூச்சிகள் எழுப்பும் ஒலி. மூடிய கண்களுக்கும் ஒரு தேவதை அன்ன நடை போட்டுக் கொண்டிருந்தாள். இரவு நீண்டு கொண்டே இருந்தது.     

                                                                        *

            காலைச் சூரியன் எழுவதற்கு முன்பே நீல ஓளி பரவத் தொடங்கியிருந்தது. பிறகு அது பூசிய செக்கச் சிவந்த நிறம் வானத்தை ஒளி வெள்ளமாக்கியது.  எவ்வளவு துயரத்தில் இருந்தாலும், காலைச் சூரியனின் அழகு முகம், மேகங்களின் விளிம்புகளில் மின்னும் ஒளி, குதூகலத்தைக் கொண்டுவந்துவிட்டது.

            பதினொரு மணிக்கு மேல் பாஸ்கர் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். போஸ்ட்மேன் வீட்டு வாசலில் நின்று, ‘சார்’ என்று கூப்பிட்டார். மத்திய நிதி அமைச்சகத்திலிருந்து வந்த பதிவுத் தபாலை வாங்கினான். கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். பதினைந்தாம் தேதிக்குள் வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று எழுதியிருந்தது. மீண்டும் இரண்டு முறைகள் படித்தான். நம்புவதற்குக் கடினமாக இருந்தது. அழுக்கடைந்த சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலென்டரைப் பார்த்தான். தேதி பதினொன்று. இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று உள்ளார்ந்து நினைத்தான். ஆனால் மகிழ்ச்சியாக இருந்து அவனுக்குப் பழக்கமில்லை.  முதல் முறையாக அவன் லேசாகச் சிரித்தான்.

            அம்மா குமுதம் படித்துக் கொண்டிருந்தாள்.  அவளருகில் சென்று அமர்ந்தான். அவளது சலிப்படைந்த, களைத்த முகத்தைப் பார்த்தான். ‘அம்மா, இதைப்பார்’ என்று பழுப்பு நிறக் காகிதத்தை நீட்டினான். சைக்ளோஸ்டைல் செய்யப்பட்ட காகிதத்தின் இரண்டு இடங்களில், பாஸ்கர் என்று டைப் அடிக்கப்பட்டிருந்தது மட்டும் தெரிந்தது. அவன்  பெயரைத் தவிர எதுவும் புரியவில்லை. ’வேலைக்கு ஆர்டர் வந்துவிட்டதா?’ என்ற கேள்வியிலேயே அவளது மனதின் கவலைகள் பறந்துவிட்டன என்று தெரிந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரித்தாள். அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கண்கலங்கினாள். அதே சமயத்தில் ஆனந்தமாகச் சிரித்தாள். ‘ரொம்ப நல்லது’ என்றூ சொல்லிவிட்டு, எழுந்து நின்றாள். மீண்டும் ஒருமுறை ‘ரொம்ப நல்லது. உனக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது’ என்று சொல்லும் போது அவனுடைய வலது கையில் அம்மாவின் இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.               

                பதினோராம் தேதி அவன் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் ரயில்வே பிளாட்பாரத்தில் பாஸ்கரைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். ‘எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டயா?’ என்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் ‘போன உடனே லெட்டர் போடு’ என்று சொல்ல அதை ஒரு மந்திரம் மாதிரி மற்றவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ரயில் கிளம்பியது. கையசைத்து விடைபெற்று அவனுக்கென்றிருந்த இடத்தில் சென்று அமர்ந்தான். கொஞ்ச நேரம் சென்றதும், மேற்கே சூரியன் செக்கச் செவேலென வான் முழுவதையும் வண்ணம் பூசிக் கொண்டிருந்தான். இந்தச் சூரியனும் அவனுக்கு விடை கொடுப்பது போலவே இருந்தது. ‘வாழ்வின் புதிய திசையில் போகிறேன். தெரியாத வழி, இடம். அங்கே ஒளியாகத்தான் இருக்க வேண்டும்’. அவனுக்கென்று ஓரிடம் கிடைத்துவிடும்  ‘முன் பின் தெரியாத ஊருக்குப் போகிறேன்’ என்ற பயமும் இருந்தது.  எதிர்காலம் என்ற இருட்டுக்குள் போவது போல் இருந்தாலும், கையில் அரசு வேலை என்ற கைவிளக்கு இருந்தது. அந்த ஒளி தற்போதைக்குப் போதுமானது. உலகத்தில் வெற்றி பெறலாம் என்று நினைத்தான்.

                                                ******

            வேலையில் சேர்ந்த பின் நாட்கள் மாதங்களாக ஓடிக் கொண்டிருந்தன. பாஸ்கர் ஒரு விடுதியில் தங்கியிருந்தான். அங்கே காலையும் இரவும் உணவும் கிடைத்தது. டிசம்பர் மாதக் குளிரில் நாள் முழுவதும் நடுக்கம் உடலை ஆட்டி வைத்தது. எதைத் தொட்டாலும் குளிர். எதை அணிந்து கொண்டாலும் குளிர் விடவில்லை. உதடுகள் வெடித்தன. அதில் ரத்தம் வந்து எரிந்தது. குளிரில் அலுவலகத்தில் பல அடிக்கடி டீ குடித்தார்கள். நிறைய டீ குடித்து அவனுக்குப் பழக்கமில்லை.  எத்தனை டீ குடிப்பது என்று யோசித்தான். அவன் நினைத்தது போல் வேலையில் அவனுக்கு மனநிறைவில்லை. ஆனால் வேறு வழியில்லை.  கடைத்தெருக்களில் கடுகு எண்ணையில் செய்த பஜ்ஜியும் பிரட் பகோடாவும் கிடைத்தன. பார்க்க அருமையாக இருந்தாலும், கடுகு எண்ணையின் நாற்றமும், ருசியும் அவனுக்குக் குமட்டியது.  சப்பாத்தி அடிக்கடி கிடைத்தது. அன்னியனைப் போல உணர்ந்தான். சப்பாத்தியுடன் சம்பந்தா சம்பந்தம் இல்லாத, வெண்டைக்காய், பீன்ஸ், என்று சேர்த்துச் சாப்பிட வேண்டியிருந்தது.

            காலையிலிருந்து அவசர அவசரமாக ஓட வேண்டியிருந்தது. வெய்யில் பிரதேசத்திலிருந்து வந்திருந்த அவனுக்கு குளிர்காலத்தில் சூரிய ஒளியின் தீவிரத்தை வைத்து நாளின் நேரம் தெரிந்துவிடும். டெல்லியில் குளிர்காலத்தில் மத்தியானம் மணி 2 கூட ஊரில் மாலை ஆறுமணி போல வெளிச்சம் இருந்தது. கோடை காலத்தில் காலை ஐந்தரை மணிக்கே வெளிச்சம் வந்திவிடும். ஏழே முக்கால் மணிவரை வெளிச்சம் நீளும். அலுவலகத்தில் இந்தி சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எழுத்துக்களை அவனால் படிக்க முடியும் என்றாலும், வேகமாகப் படிக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. ஆங்கிலம் பேசினால் புரிந்து கொண்டான். எழுதவும் முடிந்தது. ஆனால் சரளமாகப் பேச முடியவில்லை. ஆனால் மெல்ல மெல்ல பழகிக் கொண்டான். வேலையும் படுக்கையும் இருந்தால் போதும் என்றிருந்த மனதுக்கு என்னென்னவோ தேவைப்பட்டது. மெஸ் சாப்பாடு பிடிக்கவில்லை.

            நண்பர்கள் கூட்டத்தில் இருந்து கூத்தடித்து பொழுது போக்குவது இனிமையாக இருந்தாலும் நிறைய நேரத்தை வீணாகக் கழிப்பது போலிருந்தது. ஆனால் நண்பர்களுடன் பேசுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பொதுவாக சில விஷயங்களைப் பேச வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் புகைப்பிடிக்கக் கற்றுக் கொண்டான், எப்போவாவது மது அருந்தினான்.

            ஒரு வருடத்துக்குள் ராமசாமி ரிடையர் ஆகிவிட்டார்.  ஐநூற்றி அறுபத்தி ஆறு ரூபாய் சம்பளத்தில் இருநூறு ரூபாய் அப்பாவுக்கு மணியார்டர் செய்துவிடுவான். மெஸ்ஸுக்கு இருநூறு ரூபாய் போக நூறு ரூபாயில் மற்ற செலவுகளைப் பார்த்துக் கொண்டான். அவன் அனுப்புகிற பணம் வீட்டுச் செலவுகளுக்குச் சரியாக இருந்தது. அப்பாவுக்கு நிம்மதியாக இருந்தாலும், அம்மா ‘வீடு வாங்க வேண்டும்’ என்ற கனவுடன் போராடிக் கொண்டிருந்தாள். அதனால் இன்னும் பெரிய வேலைக்குப் போய் நிறையப்ப் பணம் அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்த்தாள். அவ்வப்போது கடிதத்தில் ’பிரமோஷன் உண்டா?’ என்று கேட்டுவைப்பாள்.  சினிமாக்களின் தான் பத்து நிமிடத்தில் ரௌடிகள் குப்பத்திலிருந்து கோடீஸ்வரனாக முடியும் என்று அவன் நினைத்துக் கொண்டாலும், அம்மாவிடம் அதைச் சொல்வதில்லை.

                                                            ****

            ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டதே தெரியவில்லை. ஆனால் வீட்டில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.  முதல் தம்பி சரவணன் சோப் கம்பெனியில்  வேலைபார்த்தான். சம்பளம் அதிகம் இல்லை.  அவனுடைய செலவுகளுக்கே அது சரியாக இருந்தது.  வீட்டுக்கு பணம் எதுவும் அவன் கொடுப்பதில்லை. ஆனால் சிகரெட் குடிக்கவும் மது அருந்தவும் பழகியிருந்தான். பொறுப்பின்றி அவன் நடந்து கொள்கிறான் என்ற கோபம் பாஸ்கருக்கு இருந்தாலும், அதை வெளிப்படுத்தத் தயங்கினான்.  நல்ல வேலை கிடைக்காதது, சரவணன் குற்றம் அல்ல என்றும் தோன்றியது. அப்பாவிடம் அம்மாவிடம் பேசும் போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினான். பல நேரங்களில் என்ன பேசுவது என்று தடுமாறினான். ‘ நல்லா சாப்பிட்டயா?, குளிருதா? உடம்ப நல்லாப் பாத்துக்கோ! என்பதையே அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனும் ‘அதே கேள்விகளைப் பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய திருமணம், தம்பிகளின் திருமணம், தங்கையின் திருமணம், சொந்த வீடு கட்டுவது என்று பல விஷயங்களைப் பேச வேண்டியிருந்தாலும், அவை பேச முடியாத விஷயங்களாகி விட்டன. பேச்சைத் தொடங்குவதற்கு வேண்டிய பணம கூட அவர்களிடம் இல்லை.

            இரண்டாவது தம்பி வேல்முருகன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சும்மா இருந்தான். லட்சுமி முதுகலை கடைசி ஆண்டில் இருந்தாள்.  அப்பாவும் அம்மாவும் பாஸ்கரிடம் உரிமையோடு பேசுவதுபோல் சரவணனிடம் பேசுவதில்லை என்று புரிந்தது. பையன்களையும் பெண்ணையும் நல்ல நிலைமையில் கொண்டுவர முடியவில்லையே என்ற கவலையும் குற்றவுணர்வும் அவர்களிடம் தெரிந்தது.

            பாஸ்கர் தனக்கென்று சில நியதிகளைப் பின்பற்றினான். பெரிய வேலைக்குப் போகும் வரை திருமணத்தைப் பற்றி நினைக்கக் கூடாது. நான்கு செட் உடைகள் தான் வைத்திருக்க வேண்டும். அதுவும் தீபாவளிக்குப் போகும் போது அம்மா அப்பா மூலமே எடுத்துக் கொண்டான். வீட்டில் தம்பிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பினான்.  சில நேரங்களில் அவர்களுக்காகத் தான் கஷ்டப்பட வேண்டுமா என்றூ தோன்றினாலும், அது கடமை என்று தேற்றிக் கொண்டான். வேறு என்ன செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. மாதத்தில் ஒன்றிரண்டு சினிமாக்கள் பார்ப்பான். நண்பர்களுடன் தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே எப்போதாவது வருடத்தில் ஓரிரு முறை மது அருந்தினான்.

            திருமண வயதைத் தாண்டிவிட்டோம் என்று கொஞ்ச நாட்களாக நினைத்தான். குமாஸ்தா வேலைச் சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாது. வீட்டுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்த முடியாது. குடும்பத்தில் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுவிடும்.  ஆனாலும் அவன் எவ்வளவுதான் முயன்றாலும், வீட்டில் எல்லாம் முன்போலவே அப்படியே இருந்தன.  அவனுடைய திருமணம் பற்றிப் பேச்செடுத்தால், கொஞ்ச நாள் போகட்டும் என்று அம்மாவிடம் சொன்னாள். அந்தக் கொஞ்சநாள் ஒருநாளும் கழியப்போவதில்லை என்று அவனுக்கும் புரிந்தது. அப்பாவும் அதற்கு மேல் கேட்பதில்லை.  அவன் அனுப்பும் பணமில்லாமல் குடும்பத்தை நடத்த முடியாது என்று அவருக்கும் தெரியும்.

            சரவணம் ஊதாரி என்று வீட்டில் முடிவு செய்துவிட்டார்கள். அவனும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவன் என்ன நினைக்கிறான் என்று அவர்களுக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. தனக்கும் திருமணமாக வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு அவன் வந்திருக்கலாம். தங்கையும் அது போன்ற தொனியில் பேசினாள். ஆனால் யாரும் யாருடனும் அது குறித்தெல்லாம் பேசிக் கொண்டதில்லை. இயலாமை தன் இருளை அவர்கள் மீது போத்தியிருந்தது. அவர்களது வாய்களை, கனவுகளை அது அடைத்தே வைத்திருந்தது.

            சரவணன் காலையில் வேலைக்குப் போனால் மாலையில் நண்பர்களுடன் அரட்டை அடித்து, சுற்றியலைந்துவிட்டு, பல நேரங்களில் மது அருந்திவிட்டு, மிகத் தாமதமாக படுப்பதற்காக மட்டும் வீட்டுக்கு வருவதை வழக்கமாக்கிவிட்டிருந்தான்.

            லட்சுமி படித்துவிட்டு பகுதி நேர வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.  ஏழு மணிக்கு மேல் வீட்டுக்கு வருவாள். தினப்படி விஷயங்களைத் தவிர யாரும் எதைப்பற்றியும் பேச முடியவில்லை.

            அப்பாவும் அம்மாவும் மாதம் ஒரு முறை டாக்டரிடம் போக வேண்டியிருந்தது. கால்வலி, ரத்தச் சோகை என்று அம்மாவும், ரத்தக் கொதிப்பு, உடல் தளர்ச்சி என்று அப்பாவும் மாத்திரை மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  மருத்துவச் செலவு கூட வீண் செலவும் என்று கொஞ்ச மாதங்களாக அம்மா பேசத் தொடங்கியிருந்தாள்.

                                                *****

            ராமசாமி எழுபத்தி ஆறாம் வயதில் மூச்சை நிறுத்திய போதுதான் தனக்கு நாற்பத்தி மூன்று வயதாகிறது என்று பாஸ்கருக்கு உறைத்தது. அடிக்கடி இருமல் வந்தது. சிகரெட்டினால் நுரையீரல் பாதிக்கிறது என்று இருமல் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தது.  பதினைந்து வருடங்களுக்கு மேலாக அவன் வீட்டிற்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவனுடன் அறை நண்பர்களாக இருந்த பலருடைய குழந்தைகள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். புதிது புதிதாக வந்த அறை நண்பர்கள், மெஸ் நண்பர்கள் வயதில் மிகவும் இளையவர்களாக இருந்தார்கள். அவர்கள் யாரும் வீடுகளுக்குப் பணம் அனுப்புவதில்லை. வீடுகளுக்கு அவர்கள் பணம் தேவையில்லையா அல்லது இவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லையா என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.  தானும் அப்படி இருந்திருக்கலாமோ? தம்பியைப் போல் இவர்கள் அணுகுமுறை இருந்தாலும், அவனால் அப்படி இருக்கமுடியவில்லை.  எல்லாம் தங்களுக்காகவே என்று வாழ்க்கை நடத்தினர்.  மெஸ் நடத்துகிறவர் நீண்ட நாட்களாக இருப்பவன் என்ற ஒரே காரணத்தினால் அவனைக் காலி செய்து போகச் சொல்லவில்லை. மெஸ்ஸில் புதியதாக வந்தவர்களை நண்பர்கள் என்று அழைப்பது கடினமாக இருந்தது.  பெரிய அண்ணன் ஆகிவிட்டிருந்தான். தாடியும் மீசையும் நரைக்கத் தொடங்கிவிட்டிருந்தன.  அவனுக்கும் மெஸ்ஸில் இருந்தவர்களுக்கும் இணைப்புப் பாலமாக இருந்தது சிகரெட்டும் மதுவும். அதன் மூலமாகவே உறவு உறுதியாகிக் கொண்டிருந்தது. 

            குடும்பமோ வேறு உறவினர்களோ இல்லாத இடத்தில் அவன் எல்லாவிதமான மனிதர்களோடும் உறவாட வேண்டியிருந்தது. அலுவலக நண்பர்களும், கூட வேலை பார்க்கிறவர்களும் திருமணம் முடிக்கச் சொல்லி ஓய்ந்துவிட்டார்கள்.  பாஸ்கர் அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டு பயந்து போனான்.  ஏற்கனவே வீட்டுப் பொறுப்புக்களைச் சுமந்து களைத்துப் போயிருந்த அவனுக்கும், மனைவி, மக்கள் என்ற பொறுப்புக்களைச் சுமக்கச் சக்தியில்லை என்று நினைத்தான்.  இந்த வயதில் பெண்பார்ப்பது, தன்னைப்பற்றி அவர்களுடன் விவாதிப்பது போன்றவற்றை நினைக்கவே தயக்கமாக இருந்தது. சுதந்திரமாக இருப்பது அவனுக்குப் பிடித்துப்போய் விட்டது.  நண்பர்களின் கொண்டாட்டங்களில், வீடுகளில் அவனுக்குத் தனி மரியாதை இருந்தது. அது கூட அவன் அப்படியே தொடர்வதற்கு ஒரு சாக்காகவும் ஆனது.  ஆண்களின் பார்வையில் கவலையில்லாத மனிதனாகவும், பெண்கள் பார்வையில் பரிதாபத்துக்குரிய மனிதனாகவும் தெரிந்தான்.

            வாழ்க்கை என்ன நாம் நினைப்பது போலெல்லாம் அவரவர் போக்கில் விட்டுவிடுகிறதா? அவ்வப்போது நாற்பதைத் தாண்டிவிட்டாய் என்று அவருக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.  டிசம்பர் மாதம் இருபத்தி ஆறாம் தேதி காலையில் மருத்துவமனையில் பாஸ்கர் அனுமதிக்கப்பட்டான். மெஸ்ஸின் அருகில் தெருவில் அவன் மயங்கிவிழுந்த போது காலை ஆறுமணி. மெஸ்ஸிற்குப் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு முதியவள் அவனை எழுப்பி உட்கார வைத்து, வீட்டிலிருந்து தண்ணீர் கொடுத்துவிட்டு மெஸ்காரருக்கும் தகவல் சொன்னாள். அவர் ஆட்டோ பிடித்து கரோல்பாகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டார்.  கார்டியன் என்று அவரே கையெழுத்தும் போட்டார்.  நான்கு நாட்கள் அவன் கண் திறக்கவே முடியவில்லை. காய்ச்சல் மிக அதிகமாக இருந்தது. ஐந்தாவது நாளில் ‘டைபாயிட்’ என்று உறுதியானது. ஒரு மாதம் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. 

            மிகத் தீவிரமான சிகிச்சை அளித்த குழுவில் இருந்தவர்களில் டாக்டர் சம்ருதாவும் ஒருத்தி.  ஓரிரண்டுமுறை உடல்நிலை தேறுமா என்ற எல்லைக்குச் சென்று வந்த பாஸ்கர் பல நாட்கள் நினைவில்லாமல் கிடந்தான். எதுவும் நினைவில் இல்லை.  அவ்வப்போது அலுவலக நண்பர்கள் பார்த்துவிட்டுச் சென்றாலும் துணைக்கு இருக்க யாருமில்லை. திருமணம் பண்ணிக் கொண்டால் எவ்வளவு துயரம் என்று கிண்டலடித்துக் கொண்டிருந்த நண்பர்கள், திருமணம் முடிக்காவிட்டால் எத்தனை துயரம் என்று பேசிக் கொண்டிருந்தனர். 

பதினோராவது நாள் பாஸ்கர் கண்விழித்த போது அவனருகில் யாரும் இல்லை. அந்தக் காய்ச்சலிலும் கொஞ்சம் மனம் சங்கடப்பட்டது. படுக்கையிலிருந்தே அறை முழுவதையும் நோட்டம் விட்டான். அறையில் பெண்கள் பயன்படுத்துகிற தோல் பை இருந்தது. கண்விழித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள யாருமில்லாதது அவனது தனிமை உணர்வை அதிகரித்தது. எழுந்து உட்கார வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நகரக் கூட முடியவில்லை. கையில் சொட்டுச் சொட்டாக சலைன் ஏறிக்கொண்டிருந்தது. கால்களுக்கு அடியில் ஏதோ அழுத்தியது. தலைக்கனம் திடீர்த் திடிரென்று விண் விண்ணென்று தெறித்தது.  கண்களை மீண்டும் மூடிக் கொண்டான்.

            மீண்டும் கண்களைத் திறந்த போது சுவரை ஒட்டியிருந்த நாற்காலியில் அம்மா கண்களை மூடியபடி உட்கார்ந்திருந்தாள்.  அவனுக்காகத் தவமிருக்கிறாளோ? அவனுக்கு கண்ணீர் வடிந்தது. மென்மையாக முனகினான். அம்மா உடனே பதறியடித்து உடனே அருகில் வந்தாள்.  தலையில் கைவைத்துப் பார்த்தாள். கடவுளுக்கு நன்றி சொல்வதுபோல், முருகா! என்னப்பா! என்று உருகிக் குரல் கொடுத்துவிட்டு கைகளால் கண்களை மூடிக் கோண்டு கேவினாள். பின்னர் சமாளித்துக் குரலைச் செருமிக் கொண்டு சொன்னாள் ‘எல்லாம் சரியாகிவிடும். இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்குப் போய்விடலாம்’. அவன் கைகளைப் பிடித்து ஆறுதல் சொல்வதுபோல் முனகினாள்.

            ’இனிமேலும் உன்னைத் தனியே இருக்க விடமாட்டேன். நீ வேண்டாமென்று சொன்னாலும் கல்யாணம் முடித்துவிட்டுத்தான் ஊருக்குப் போவேன். பெண்ணையும் பார்த்துவிட்டேன்.’

            அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவனுக்கும் தனியாக இருந்து சலித்துவிட்டது. சமவயதில் இப்போது ஒரு துணை தேவை என்று தோன்றியது.  டாக்டர் சம்ருதாவின் தங்கை மீனாட்சியை அவனுக்குத் திருமணம் முடித்துவிட வேண்டும் என்று அவள் சொன்ன போது, அவன் மறுப்பேதும் சொல்லவில்லை. கொஞ்ச வசதியான குடும்பமாக இருக்கவேண்டும். அது அவனுக்கும் நல்லதாக இருக்கும்.  ஏழைப் பையன் பணக்காரப் பெண்… சினிமாக்களின் வெற்றிக் கதை அல்லவா?  சில நேரங்களில் உண்மையாகிவிடுவதும் உண்டு. உலகத்தில் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள் ஆக முடியாவிட்டாலும், சிலருக்குச் சில நேரங்களில் அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு.

            எளிய முறையில் கோவிலில் வைத்துத் திருமணம் முடிந்தது. அம்மாவும் ஊருக்குப் போய்விட்டாள். பாஸ்கர் நாற்பத்தி ஐந்தாம் வயதில் மனைவியுடன் வாழத் தொடங்கினான்.  தனியாக இருந்து துயரப்பட்ட அவனுக்கு திருமண வாழ்வு மிக மகிழ்ச்சியாக அமைந்து போனதை அவனால் கூட நம்ப முடியவில்லை. தனியாகவே இருந்தவனுக்கு மீனாட்சி சொல்லிக் கொடுக்க ஏராளமான விஷயங்கள் இருந்தன. குடும்பப் பொறுப்புள்ள மனிதனாக மாறிக் கொண்டிருந்தான்.

                                                            ***

                   குழந்தை மிருதுலாவுடன் விளையாடும் போது பாஸ்கர் முதன் முறையாக மனம் இளகுவதை உணர்ந்தான்.  அதுவரை கடமைகள் ஒன்றையே நினைத்திருந்த அவன் மனத்தில் ஒரு பச்சைபுல் படர்ந்த விளையாட்டு மைதானம் விரிந்து கிடந்தது. நேரம் போவதே தெரியவில்லை.  அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததிலிருந்து அவளுடனேயே கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பான்.  மீனாட்சிக்கும் நாற்பது வயது. இருவரும் மிருதுலாவின் பின்னால் ஓடி ஓடிக் களைத்துக் கொண்டிருந்தனர்.  அவ்வப்போது ‘வீடுகட்ட வேண்டும்’ என்று மீனாட்சி வலியுறுத்தி வந்தாள்.  தூத்துக்குடியில், பாஸ்கரின் திருமணத்துக்கு முன்னரே சரவணன் பெரிய வீடு கட்டினான்.  ஆறு லட்ச ரூபாய் பாஸ்கர் கொடுத்திருந்தான்.  தூத்துக்குடிக்குப் போனால் சரவணனுடன் தங்கிக் கொள்ளலாம். வீடுகட்ட வேண்டிய அவசியம் இல்லை.  தம்பி வீடு இருக்கிறது. அவன் பணம் கொடுக்காவிட்டால், சரவணன் நான்கு படுக்கைகள் கொண்ட வீட்டைக் கட்டியிருக்க முடியாது. அம்மா அங்கே இருக்கிறாள். அம்மாவின் காலத்துக்குப் பிறகு அங்கே போய் இருந்து கொள்ளலாம். அம்மாவும் அதைத்தான் அவனிடம் சொல்லியிருந்தாள். சரவணனிடம் அதைச் சொன்னாளா இல்லையா என்று பாஸ்கருக்குத் தெரியாது. அதைக் கேட்கவும் கூச்சமாக இருந்தது. வீட்டுக்காக அவன் செய்த காரியங்கள் அவனுக்கும் தெரியும். அதனால் பாஸ்கர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘வீட்டைப் பற்றிக் கவலைப்படாதே, ரிடையர் ஆன பின்னால் ஊரில் போய் வாழலாம்’ என்று மனைவியிடம் சொல்லிவந்தான்.

            மிருதுலாவும் வளர்ந்துவந்தாள். அழகிய பொம்மை போலிருந்த அவள் வளர்வதை ஒவ்வொரு நாளும் பார்த்து மகிழ்ச்சியடைந்து வந்தான். இப்படி ஒரு அழகிய மகள் தனக்கு இருக்கிறாள் என்பதே அவனுக்குப் பெருமையாக இருந்தது. தனக்கு அழகிய படித்த ஒரு மனைவியும் மகளும் கிடைப்பார்கள் என்று கடவுள் வந்து சொல்லியிருந்தால் கூட அவன் நம்பியிருக்க மாட்டான்.  அவனைப் பொறுத்தவரை பல ஜோஸியர்கள் சொல்லிய ஆயிரம் பொய்களில் ஒன்று கூட உண்மையாகவில்லை. அவன் இருப்பதைப் பார்த்து, துறவியாகப் போய்விடுவான் என்று சொன்ன ஜோஸியர்களும் உண்டு. அன்பு செலுத்துவதற்கு இருவர் கிடைத்துவிட்டால் மனம் கனிந்துவிடுகிறது. அதற்கு மேல் அவன் பெரிதாக எதற்கும் ஆசைப்படவில்லை. அவனுக்கு அரசு குவாட்டர்ஸ் கிடைத்துவிட்டதால், வீட்டுப் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. இனி எந்தக் கவலையும் இல்லை என்று மனநிறைவுடன் வாழத் தொடங்கினான்.

            வாழ்க்கை ஒன்று சீரான விமானப் பயணம் அல்லவே! அசையாமல் அலுங்காமல் சட்டை அழுக்காகாமல் சென்று இறங்குவதற்கு. விமானப் பயணங்களில் கூட பல சமயங்களில் பெரும் அதிர்வுகள் ஏற்படுவதைப் பார்த்திருக்கிறான்.  அவன் வாழ்க்கையிலும் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன. வானத்தைப் போலப் பனிமூட்டமாக, சிலநேரங்களில் இருண்ட மேகங்களாக, சில நேரங்களில் தீயெரிக்கும் வெய்யிலாக மாறிக் கொண்டே இருந்தது. அதன் அலைக்கழிப்பைத் தாங்கிக்கொண்டு போவதைத்தவிர வேறு வழியில்லை.

            மீனாட்சி ஒருநாள் காய்ச்சல் என்று படுத்தாள். மீண்டும் அவளால் எழுந்திருக்க முடியவில்லை. மிருதுலா பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். டைபாயிட் அவளைப் படாதபாடுபடுத்தியது. அத்துடன் ஆர்த்ரைடிஸ் சேர்ந்து கொண்டது. நடமாடுவதே கஷ்டமாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நடப்பதைக் குறைத்துக் கொண்டிருந்தாள்.  மிருதுலா கல்லூரிக்குச் செல்லும் போது, மீனாட்சி உட்கார்ந்தோ படுக்கையில் படுத்துக் கொண்டோ இருந்தாள்.  மீனாட்சியின் வேலைகளை மிருதுலா பார்த்துக் கொண்டாள். பாஸ்கர் பிரமோஷன் பெற்றுவிட்டதால் அலுவலகத்தில் அதிகப் பொறுப்புகள வந்தன.  வீட்டிலும் அதிக வேலைகளைச் செய்யவேண்டியிருந்தது.  அலுவலகத்தில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள முடியாததாகிவிட்டது. அவன் வேலையில் தொய்வு விழுகிறது என்று அடிக்கடி வெவ்வேறி பிரிவுகளுக்கு அவனை மாற்றிக் கொண்டிருந்தார்கள்.  அலுவலகப் பொறுப்புகள் வீட்டுப் பொறுப்புகள் இரண்டுக்கும் நடுவில் களைப்படைந்தாலும், ஏற்கனவே பட்ட கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டது போலவே எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக் கொண்டான்.

            ஒருநாள் திடீரென்று, பகல் பன்னிரண்டு மணிக்கு மிருதுலா போனில் அழைத்தாள் ‘அம்மாவுக்கு மூச்சுவிட முடியவில்லை’. அவன் வீடு போய்ச் சேருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.  இருந்தாலும் சஃப்தர் ஜங் மருத்துவமனை கொண்டு போனார்கள். அங்கே போனதும் எமெர்ஜென்ஸியிலேயே கைவிரித்துவிட்டார்கள்.  மாரடைப்பு, இதயம் நின்றுவிட்டது.

            அவனுக்கும் இதயம் நின்றது போல் ஆகிவிட்டது. நடுக்கடலில் கப்பல் நின்றுவிட்டது. அப்பாவின் நிலையைப் பார்த்து மிருதுலா அவரைத் தேற்றிக் கொண்டிருந்தாள். அவளை நினைத்தால், பாஸ்கருக்கு மிகவும் கவலையும் அழுகையும் வந்தன. ஆனால் அவள் தைரியமாகத் தன்னைத் தேற்றுவதைப் பார்த்து, கொஞ்சம் தைரியமும் வந்தது.

            அடிக்கடி தூத்துக்குடி செல்லத் தொடங்கினான். அம்மாவின் உடல்நிலையும் மிகவும் மோசமாக இருந்தது. பாஸ்கருக்கு என்று ஒதுக்கிய அறையில் அவள் கட்டிலில் படுத்திருந்தாள். மற்ற இரண்டு சகோதரர்களும் அவர்களது குடும்பமும் இரண்டு அறைகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது வருமானத்தில் யாரும் புதிய வீடு கட்ட முடியாது என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அம்மா… போய்ச் சேர்ந்துவிட்டால்… பிறகு மிருதுலாவுக்கும் திருமணம் செய்து கணவனுடன் அவள் போய்விட்டால், அங்கே தங்கிக் கொள்ளலாம்.  தம்பிகளுடன் இருந்துகொள்ளலாம்.  அவர் இப்படித்தான் யோசித்து வைத்திருந்தான்.

            அம்மா சீக்கிரமே இறந்துபோனாள். பாஸ்கர் முழுச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டான். அம்மாவுக்காக எதையும் செய்யலாம். அவனது சகோதரர்களுக்கு அவ்வளவு வருமானமோ, சொத்துக்களோ இல்லை.  அவன் ரிடையர் ஆகும் நாளும் வந்தது.  அதற்கு முன் மிருதுலாவுக்குத் திருமணம் முடித்துவிட்டிருந்தான். பையன் ஒரு சி.ஏ. கம்பெனியில் வேலை பார்த்துவந்தான். மிருதுலா மெட்ரோ ரயில்வேயில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவாக வேலை பார்த்து வந்தாள்.  அவர்கள் வேறு வீட்டில் தனியாக வசித்து வந்தார்கள்.

            அரசுக் குடியிருப்பைக் காலி செய்ய இன்னும் இரண்டு மாதங்களே இருந்தன. ஊருக்குப் போனான். ‘இன்னும் கொஞ்ச நாளில், அரசுக் குடியிருப்பைக் காலி செய்ய வேண்டும். எனக்கு வேறு வீடில்லை. அதனால் அம்மா இருந்த அறையில் சாமான்களை கொண்டுவந்து வைத்துக்கொள்கிறேன். நானும் கொஞ்ச மாதங்கள் கழித்து இங்கேயே வந்துவிடுகிறேன். என்ன இருந்தாலும், குடும்பத்துடன் இருப்பது போல் இருக்குமா? சொந்த ஊர் நினைவை விட முடியாதல்லவா?’ என்றெல்லாம் தான் ஊருக்கு வருவதற்கான நியாயங்களை சரவணனிடமும், வேல்முருகனிடமும்  சொல்லிக் கொண்டிருந்தான். வேண்டா வெறுப்பாக அவர்கள் அவனைப் பார்த்தனர். ‘அம்மா இருந்த அறையைக் காலி செய்து கொடுங்கள். என் சாமான்களை வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விடுகிறேன்’ அவர்களிடமிருந்து ஒரு முனகல் கூட இல்லை. அந்த அறை திறந்தே கிடந்தது. உள்ளே போய்ப் பார்த்தான். சரவணனுடைய பிள்ளைகளின் சாமான்கள் இருந்தன. ‘அண்ணே, நீ கவர்ன்மெண்ட்ல வேல பார்க்கிற. நாங்க ஏதோ பிரைவேட்ல குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்கிறோம். உனக்காவது பென்ஷன் பி.எஃப்ன்னு பெரிய பெரிய தொகைகள் கிடைக்கும். எங்களுக்கெல்லாம் அது கிடையாது. அதனால நீ டெல்லியிலேயே செட்டில் ஆகிருண்ணா. அதுதான் நல்லது. நாங்க ஆளுக்கு ரெண்டு அறைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.  வேறு வழியில்லை’ என்று ஒவ்வொருத்தராக சொன்னதும், பாஸ்கருக்கு எல்லாம் கசந்தது. கோபத்தில் அவசரமாக விடைபெற்று டெல்லிக்குக் கிளம்பி வந்துவிட்டான். அவனுக்குத் தம்பிகளின் நிலையைக் கண்டு பரிதாபமாக இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பதினைந்து லட்ச ரூபாய் செலவில் கட்டிய பெரிய வீட்டில் இடந்தர அவர்களுக்கு மனமில்லை. அதைப் பற்றிப் பேசக் கூட அவர்கள் தயாராக இல்லை. அந்த வீட்டுக்காக ஐந்தாறு லட்ச ரூபாய் கொடுத்திருந்தான். வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து இருபது வருடங்களுக்கு மாதாமாதம் பாஸ்கர் அனுப்பிய பணத்தை வாங்கி அம்மா எல்லோருக்குமாகச் செலவு செய்துகொண்டிருந்தாள். அது எவ்வளவு என்று பாஸ்கர் கணக்குப் பார்த்தது கூடக் கிடையாது. இதைப் பற்றியெல்லாம் தம்பிகள் யோசித்துப் பார்க்காதது ஆச்சரியமாக இருந்தது.  அதற்கப்புறம் அவர்களிடம் அவனால் பேசக் கூட முடியவில்லை. அவர்களும் வேண்டுமென்றே உறவில் ஒரு இறுக்கத்தை வரவழைத்துக் கொண்டிருந்தனர் என்று தோன்றியது.  பேசிவிட்டால் உணர்ச்சிகள் பெருகி அவர்களுடைய திட்டம் கலைந்துவிடும் என்ற பயம்  அவர்களுக்கு இருக்கலாம்.  முதலில் சண்டை வரும் பிறகு சமாதானம் பேச வேண்டியிருக்கும். பங்கு கொடுப்பது நியாம் என்பதை மறுக்க முடியாது. என்ன ஆனாலும் வீட்டில் அவனுக்கு இடங்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அவனுக்கு கவர்ன்மெண்ட் வேலை என்பது ஒரு சாக்கு. ரிடையர்மெண்ட் ஆனதில் நிறையப் பணம் கிடைக்கும். மாதாமாதம் பென்ஷன் வரும். அவரே வீடு கட்டிக் கொள்ளலாமே!’. இதுவெல்லாம் அவர்கள் பக்க நியாயமாக இருக்கலாம். கொடுக்க விருப்பம் இல்லாதவர்களிடம் மல்லுக்கட்ட அவன் விரும்பவில்லை. பாஸ்கர் டெல்லி திரும்பிவிட்டான்.

            மகளுக்குத் திருமணத்திற்கு உடன்பிறந்தவர்களை குடும்பத்துடன் அழைத்தான். தம்பிகளும் தங்கையும் வந்திருந்தார்கள். ‘நீங்கள் இல்லாமல் நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று காட்ட விரும்பியது போல் அவர்களை மிக மரியாதையோடு நடத்தினான்.  திருமணம் மிக நன்றாக முடிந்தது.

            மாப்பிள்ளையும், மகளும் தங்களுடன் வந்து தங்கியிருக்க வேண்டும் என்று அவனை அழைத்தார்கள். ஆனால் பாஸ்கர் அவர்களுடன் போய் இருக்க விரும்பவில்லை. மகளுக்கு அது இடைஞ்சலாக இருக்கும். மாப்பிளை வீட்டில் இருந்து ஏதாவது மனக்குறை ஏற்பட்டால், உறவே கெட்டுவிடும். தனியாக இருந்து சமாளிப்பது மேல்.

            மீண்டும் மெஸ்ஸில் சேர்ந்து கொண்டார். அங்கே இப்போது இருந்த பையன்கள் அவருக்குப் பேரன்கள் வயதில் இருந்தார்கள். மெஸ் நடத்துகிறவர் தான் இவரைவிட இரண்டு வயது மூத்தவராக இருந்தார். இந்தக் காலத்து விடலைப் பையன்கள்  வேறுமாதிரி இருந்தார்கள்.  அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தம்பி தங்கைகளையே புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தக் காலத்து இளைஞர்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

பெரும்பாலான நேரங்களில் தனியாகத்தான் நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. கேரம் போர்ட் வாங்கிப் பார்த்தார். செஸ் போர்ட் வாங்கிப் போட்டார். எதிலும் யாருக்கும் ஆர்வம் இல்லை. இளைஞர்கள் டி.வி பார்த்தார்கள். அதைவிட்டால் மது அருந்தினார்கள். அவர் டி.வி. எப்போதாவதுதான் பார்த்தார்.  அவர்களுடன் மது அருந்துவதைத் தவிர்த்தார். அவர்கள் மது அருந்திவிட்டுப் பேசுவதைக் கேட்டிருக்கிறார். அந்த மாதிரிப் பேச்சுக்கள் அவருக்குப் பிடிக்கவில்லை.  வேறு வழியின்றி அங்கே காலம் தள்ளிக் கொண்டிருந்தார். அவரைப் போன்றே மனைவியை இழந்த பலர் இருக்கிறார்கள் என்று அந்தக் காலங்களில் தெரியவந்தது. அவர்களுக்குள் அடிக்கடி பேசிக் கொண்டார்கள்.  இப்படித் தனிமையில் போய்க்கொண்டிருந்த அவரது வாழ்வின் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது.

                                                *****

மே மாதம் இருபத்தி இரண்டாம் தேதி, பாஸ்கரின் மருமகன், தனது ஹோண்டா பைக்கில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பப் போய்க்கொண்டிருந்த போது, பின்னாலிருந்து வேகமாக வந்த ஒரு மஹெந்திரா பொலிரோ அவன் பைக் மீது இடித்து அவனைத் தூக்கி வீசியது. சாலையோரத்தில் இருந்த எலெக்டிரிக் போஸ்டில் மோதிக் கீழே விழுந்தான்.  பெரிய சாலை, ஏகப்பட்ட வாகனங்கள் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தாலும், மிக அதிகமாக அடிபட்டிருக்கிறது என்று கண்ட சிலர் அவனைத் தூக்கி பிளாட்பாரத்தில் வைத்த போதே, பேச்சு மூச்சற்ற அவனைச் சுற்றி சும்மா நின்று கொண்டிருந்தனர். பத்துநிமிடம் கழித்து அந்த இடத்துக்கு அகஸ்மாத்தாக வந்த போலிஸ் ஜீப்பிலிருந்து இறங்கிய போலிஸ்காரர் போன்பண்ணிய பின் இருபது நிமிடம் கழித்து வந்த ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டார்.  மருத்துவமனை அவசரப் பிரிவிலேயே கதை முடிந்துவிட்டது.

கொஞ்ச நாள் கழித்து, மெஸ்ஸைக் காலிபண்ணிவிட்டு பாஸ்கர் தன் மகள் வீட்டில் குடியேறினார். பேரக் குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவதுதான் அவருக்குப் பொழுது போக்கு.  மிருதுலாவின் குழந்தைப் பருவம் அவருக்கு ஞாபகம் வந்தது. தனது எண்பத்தி இரண்டாவது வயதில், நாற்பது வயதுக்காரரைப் போல உடலும் மனமும் இயங்குவது நல்லது என்றே அவருக்குத் தோன்றியது. பேரப்பிள்ளை பெரியவனாகும் வரை உயிரோடு இருக்க வேண்டும் தீர்மானித்துக் கொண்டார். அதுவரை உயிரைப் பிடித்து வைத்திருக்க வேண்டும். மகளைத் தனியே விட்டுப் போய்விடக் கூடாது.

ஒருநாள் கட்டிலில் படுத்துக் கொண்டே நண்பர்கள், அவர் ரிடையர்மண்ட் ஆன போது கொடுத்த சிறிய புத்தரின் சிலையைப் பார்த்தான்.  கண்கள் மூடித் தவமிருக்கும் அவரது முகத்தில் தெரிந்த உணர்ச்சி என்னவாக இருக்கும் என்று யோசித்தான். புத்தரின் உதட்டிலிருந்த புன்னகை அவனுக்கு எதையோ சொன்னது. இந்த இளம் வயதில் ஒரு குழந்தையுடன் தனியாக வாழ நேர்ந்த மகளை நினைத்து வருத்தப்பட்டாலும், தன்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதும் புரிந்தது.  ’என்னால் முடிந்ததை எல்லோருக்கும் செய்தேன். இதற்குமேல் என்னால் எதுவும் ஆகாது’ என்று நினைத்துத் தெளிவடைந்தார். அவருடைய பெரும்பாலான நேரம் மிருதுலாவின் மகள் இந்திராவுடன் கழிந்தது. குழந்தைகளுடன் இருப்பது எவ்வளவு குதூகலம் என்று அவருக்குத் தெரியும். குழந்தை சிரிக்கும் போது சிரித்தாள். அழும்போது அழுதாள். அதற்கப்புறம் அவளுக்கு எதுவும் நினைவில் இல்லை. அப்படி முதிர்ச்சியடைந்த மனிதர்களும் வாழலாமோ?  புத்தரின் புன்னகை அதைத்தான் சொல்கிறதோ? பாஸ்கருடைய வாழ்க்கை ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.  இந்த உலகில் வாழும் கோடானு கோடி மனிதர்களில் ஒருவராக.