கவிதையை மொழி பெயர்த்தவர் பெருந்தேவி

அவன் கற்பனை செய்த மனிதன்
அவன் கற்பனை செய்த நதியின் கரையில்
அவன் கற்பனை செய்த மரங்களின் மத்தியில்
அவன் கற்பனை செய்த மாளிகையில்

அவன் கற்பனை செய்த சுவர்களில்
கற்பனை செய்த பழைய ஓவியங்களில்
கற்பனை செய்த சரிசெய்ய முடியாத விரிசல்களில்
கற்பனை செய்த உலகங்களின் நிழற்படங்களில்
கற்பனை செய்த இடங்களில் காலங்களில்

அவன் கற்பனை செய்த மதியங்களில் –
ஒவ்வொரு மதியத்திலும் –
அவன் கற்பனை செய்த படிக்கட்டுகளில் ஏறுகிறான்
கற்பனை செய்த பால்கனிக்குச் செல்கிறான்
கற்பனை செய்த நிலப்பரப்பை
பள்ளத்தாக்கைக் காண்கிறான்
கற்பனை செய்த குன்றுகளால் சூழப்படுகிறான்

அவன் கற்பனை செய்த பேய்கள்
அவன் கற்பனை செய்த சாலையில் இறங்கி
அவன் கற்பனை செய்த அஸ்தமிக்கின்ற சூரியனுக்கு
அவன் கற்பனை செய்த பாடல்களைப் பாடுகின்றன
இரவுகளிலோ
அவன் கற்பனை செய்த நிலா இருக்கும்போது
அவன் கற்பனை செய்த அன்பைத் தந்த
அவன் கற்பனை செய்த பெண்ணைக் கனவு காணும்போது
அவன் கற்பனை செய்த அதே இன்பத்தை
அதே பழைய வேதனையை உணர்கையில்
அவன் கற்பனை செய்த மனிதனின் இதயத்தைப் போலவே
அவன் இதயமும் மீண்டும் துடிக்கத் தொடங்குகிறது

(சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன் – நிகனோர் பர்ரா – தமிழில் : பெருந்தேவி – காலச்சுவடு பதிப்பகம் – விலை ₹ 125.}