
பொன்னாய்ப் பூவாய் பொலிந்த ஞாயிறே,
உண்ணும் விழிகள் உவக்கும் ஓவியமே,
முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே,
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்,
புதிது புதிதென்ப் போற்றும் பரிதியே ,
இந்நாள் புதுமையிற் புதுமை இயற்றினாய்,
காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்
கோலக் கதிர்கள் குலுங்க, நீலக்
கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே,
ஆடல்வா ழியறின் அழகு வாழியே!
வாழிய பொங்கல் நந்நாள்
வண்டமிழ் வையம் வாழி
வாழிய தமிழ், நற் செந்நெல்
மடுபோலக் கறக்கும் மாடு
வாழிய ஆடல் பாடல்
மகிழ்ச்சியில் குளிக்கும் மாதர்
வாழிய தமிழர் யாண்டும்
விடுதலை வாய்க்கப் பெற்றே
வெல்க தமிழர்! மிகஓங்க செந்தமிழ்தான்!
வெல்க தமிழர் விடுதலை! – பல்க
தமிழர் அறமே! தனித்துயர்க யாண்டும்
தமிழர் நல்வாழ்வு தழைத்து.
நன்றி : எஸ். சண்முகம்

அருமை. வாழ்த்துக்கள்.