
13/1/24 அன்று நடந்த சொல் புதிதுவின் 87 ஆவது கவியரங்கத்தில்
நான் வாசித்தது. இன்னும் பதிவேற்றப் படவில்லை
எனதுள்ளம் துள்ளுகிறது
கடிவாளமற்று
கவிதையருவி கொட்டுகிறது
வா, என்னருமைத்தோழி!
அவனுக்கு பிடித்த பணியாரம் செய்ய
எனக்கு உதவுவாயாம்
அவனைப் பற்றிய என் தொடர் பேச்சை
அலுக்காமல்
ஆசையாய்
கேட்டுக் கொள்ளும் தோழி நீ ஒருத்தி தானே!
உன் முகம் ஏன் வாடியிருக்கிறது?
அவன் வர முடியாது
என செய்தியனுப்பியுள்ளானா
நாலாவது முறையாக?
அதனால் என்னடி?
அவன் பணி அப்படி
வா, நாம் பணியாரம் செய்து
நாமே சாப்பிடுவோம்
அந்த பொறாமை பிடித்த பெண்கள்
அவனைப் பற்றி கூறும் அவதூறுகளை
நீ நம்பாத வரை
நான் உயிர்த்திருப்பேன்
என்றறிவாய் அல்லவா?
சுவையாய் இருக்கறதடி
பணியாரம் அவன் நினைவிலும்
உனதன்பிலும் தோய்ந்து
