
இசைக்கவி ரமணன் அவர்களின் ‘காலங்களில் அவன் வசந்தம்’ நிகழ்ச்சிகளைப் பற்றிப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஓரிரண்டு நிகழ்ச்சிகளைத்தான் பார்த்திருக்கிறேன். கடைசியாகப் பார்த்தது, பாலமுருகன் அவர்களின் மகன் பங்கேற்ற நிகழ்ச்சி – சிவாஜி படங்கள், பாலமுருகன் வசனங்கள் இவற்றுடன், கண்ணதாசன் பாடல்களைப் பற்றியும் பேசினார்கள். 60 – 70களின் தமிழ்ப் படப் பாடல்களில் மனம் லயித்தது உண்மை.
99 வது நிகழ்வாக இன்று சுபஶ்ரீ தணிகாசலம், இசைக்கவியுடன் இணைந்து கண்ணதாசனின் 10 பாடல்களைப் பற்றி, பாரதீய வித்யா பவனில் சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியை அளித்தார்கள்! இனிமையான கவிதை, இசை மாலையாக மணம் வீசியது பவன்!
கண்ணதாசன் என்னும் கவிஞன், எளிமையான கவிதை, பாடல் வரிகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை பாமரனுக்கும் புரியவைத்த மகா கலைஞன்! பாடல்களின் மூலம் திரைப்படத்திற்குப் புதிய பரிமாணம் கொடுத்தவர். அவரது பாடல்களில் பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிலுள்ள இலக்கிய நயம், அவை படத்தின் காட்சிகளுடனும், திரைக்கதையுடனும் ஒன்றிப்போகும் சிறப்பையும் சுமார் இரண்டு மணி நேரம் தொய்வில்லாமல் ரமணனும், சுபஶ்ரீ அவர்களும் உரையாடியும், பாடியும், வியந்தும் அரங்கத்தைக் கட்டிப் போட்டனர்!
இசைக்கவி, கம்பனையும், வள்ளுவனையும் கண்ணதாசன் தன் பாடல்களில் எடுத்தாண்ட விதத்தையும், விஸ்வநாதன் ராமமூர்த்தி, மகாதேவன் போன்ற இசை மேதைகளின் இசையில் கண்ணதாசனின் கவிதைகள், இனிமையான பாடல்களாக மாறும் அதிசயத்தையும் வியந்தார்! இசைக்கருவிகள் இன்றி பாடல்களை இனிமை குன்றாமல் பாடிப் பரவசப்படுத்தினார்.
சுபஶ்ரீ சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, ஜமுனாராணி குரல்களில் அனாயசமாகப் பாடினார். அவர் எடுத்துக்கொண்ட பாடல்களின் வரிகளில் இருந்த கவிதை நயத்தை நயம்பட எடுத்துரைத்த போது, அவர் அனுபவித்த அந்தப் பரவசம், அரங்கத்தில் உள்ளவர்களையும் தொற்றிக்கொண்டது!
ராமன் எத்தனை ராமனடி (லட்சுமி கல்யாணம்) பாடல் வரிகளில் கவிஞர் இராமனை வரிக்கு வரி ஒரு பெயரில் வர்ணிப்பதை – கல்யாணராமன், சீதா ராமன், ராஜாராமன் – அழகாகப் பாடினார். திருமணத்திற்குப் பிறகு காதல், வீரத்துடன் வரும் இளமைக் கால ராஜாராமன் என விளக்கம் கொடுத்தார்.
‘கண்ணுக்குக் குலமேது’ – கர்ணன் படப் பாடலில் , ‘தருபவனல்லவோ கண்ணா நீ’ என்ற வரிக்குக் கொடுத்த விளக்கம் அபாரம்!
தூங்காத கண்ணென்று ஒன்று, துடிக்கின்ற சுகமென்று ஒன்று, தாங்காத மனமென்று ஒன்று (குங்குமம்) – ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம்! கம்பனின் தோள் கண்டார் தோளே கண்டார், இதயக் கமலத்தில் பிபிஎஸ்,சுசீலா குரலில் ‘தோள் கண்டேன் தோளே கண்டேன்’ என் ஆனது. தோளில் இரு கிளிகள் கண்டேன் (மதுரை மீனாட்சி போல), வாள் கண்டேன் வாளே கண்டேன், வட்டமிடும் விழிகள் கண்டேன் (கண்கள், புருவம்) எனப் பாடி, அந்தக் காட்சியை மனக்கண்முன் கொண்டு வந்தனர்!
பாக்கியலட்சுமி படப் பாடல், “காண வந்த காட்சியென்ன” – நிலாவிற்கும், மகிழ்ச்சியுடன் ஓடிவந்து, தன் நிலையுணர்ந்து நின்றுவிடும் செளகாருக்கும் ஒத்துப்போகும் பாடல் வரிகளை விவரித்தபோது, இசையா, கவிஞனின் வரிகளா, நடிப்பா அல்லது இவற்றையெல்லாம் ரசித்து வழங்கிய சுபஶ்ரீயா – யாரை வியப்பது?
ஜமுனா ராணியின் ‘பாட்டொன்று கேட்டேன், பரவசம் ஆனேன்’, கே பி சுந்தராம்பாள் பாடிய (திருவிளையாடல்) ‘பாடல் என்றும் புதியது’, காத்திருந்த கண்கள் படத்தின் ‘துள்ளித் திரிந்த பெண்ணொன்று’, பணத்தோட்டம் ‘பேசுவது கிளியா’, நிறைவாக ‘ஆறு மனமே ஆறு’ – பாடல்களையும், கவிதை அழகையும், காட்சிகளின் அமைப்பையும் மிக நுட்பமாக விவரித்து, இயல்பாகப் பேசிய சுபஶ்ரீ யும், ரமணனும் பாராட்டுக்குரியவர்கள்’.
“பழைய பாடல் என்றும் புதியது” என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது! மீண்டும் எல்லா கண்ணதாசன் பாடல்களையும் கேட்க வேண்டும் என்ற ஆசை வந்தது எனக்கு மட்டும்தானா?
காத்தாடி ராமமூர்த்தி, இயக்குனர் வஸந்த், தாரிணி கோமல், அண்ணாதுரை கண்ணதாசன், சந்திரமோகன் என அரங்கத்தில் ஏராளமான வி ஐ பி க்கள்! பாரதீய வித்யா பவன் இரு தளங்களும் ஃபுல்! நின்று கொண்டே பலர் நிகழ்ச்சியை ரசித்தனர். மேடையிலேயே எனக்கு ஒரு இருக்கை அளித்த ரமணன் அவர்களுக்கு நன்றி!
கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், சுசீலா, டி எம் எஸ், ஈஸ்வரி, பி பி எஸ், சீர்காழி இவர்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆற்றியுள்ள பணி, இசை இவ்வுலகில் இருக்கும் வரையிலும் பேசப்படும் என்பதற்கு, இன்றைய நிகழ்வே சாட்சி!
