ஆர்க்கே.
வழக்கம்போல காட்டுக்குள் மரம் ஔவெட்டிவரப்போனான் வீரபாகு. வனத்தின் உள்ளே செல்லச் செல்ல விறகிற்கும் வியாபாரத்திற்கும் என பலவித மரங்களிருந்தன. கனிமரங்களில் பறித்துத் தின்ற பழங்கள் அதீத ருசியாய் இருந்தன. மதியம் வரை வெட்டிய மரங்களை கட்டி உருண்டை போலாக்கி இரண்டு கம்புகளுக்குமேல் அதை ஏற்றி வைத்து இன்னொரு மரத்துண்டால் நெம்பி நெம்பி அடுத்த கட்டைகளை இடம் மாற்றி இடம் மாற்றி வைத்து விட்டால் பொழுது சாயும் நேரம் ஊருக்குள் போய்விடலாம். இன்னும் நேரமிருக்கிறது. முதலில் அந்த சந்தன மரம். நல்ல விலைபோகும். அது வனத்தின் மிக வயதான மரங்களில் ஒன்று போல. இரும்புக் கோடரியின் ஒவ்வொரு வெட்டுக்கும் இன்னும் அதிக வாசனையை அடர்த்தியாய் காட்டுக்குள் பரப்பிக்கொண்டிருந்தது.
ஏரிக்கரையில் நின்றிருந்த அந்த வாகான தேக்கு மரமொன்றை தேர்ந்தெடுத்து வெட்டத் துவங்கினான். அந்த மரக்கிளையில் அமர்ந்தபடியே கோடரியை கூர்படுத்திக்கொண்டான். முக்கால் மரம்வரைவரை வெட்டு விழுந்ததும் மிச்ச மரத்தில் நின்றபடி காலால் மரத்தை பலமாக அழுத்தினான். சடசடவென்று சரிந்த மரம் ஏரியில் விழத்துவங்கியது. நீந்தி எடுத்துக்கொள்ளலாம் என நினைத்த நேரம் ஒரு நொடிப்பொழுதில் கையிலிருந்து பிடிதவறிய கோடரி ஏரியில் விழுந்துவிட்டது. ஆழமான ஏரி வேறு. நீந்தலாம். மற்றபடி கோடரியை தேடிக்கண்டெடுக்கவே முடியாது.
தரையில் குதித்த வீரபாகுவிற்கு தன் கையறுநிலையும் வாழ்வின் ஒரே ஆதார பலமும் பறிபோன துயரும் வாட்ட வாய்விட்டு ஓவென்று அழுதான். அப்போதுதான் அந்த அசரீரி கேட்டது அவனுக்கு.
“வருந்தாதே மகனே! ஏரிக்குள் விழுந்த உன் கோடரியை நான் எடுத்து தருகிறேன்”
கண்களைத்துடைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான். வெள்ளை உடையுடன் தோளின் இருபுறத்திலும் கரமும் நீண்ட வெண் சிறகுகளுமாக வனதேவதை நின்றுகொண்டிருந்தது.
“உனக்கும் உன் வாக்கிற்கும் நன்றி தேவதையே! நான் இந்தத் துயரிலிருந்து மீள எனக்கு உதவி செய்!” வணங்கினான்.
“இங்கேயே இரு இதோ வருகிறேன்.!”
ஏரிக்குள் ஒரு புகைபோல ஊடுருவி
சில நொடிகளில் எழுந்து வந்தது. அதன் கைகளில் மின்னியது ஒரு தங்கக்கோடாரி.
“இதுவா உன்னுடைய கோடரி விறகுவெட்டி?”
“இல்லை. இது இல்லை என்னுடையது”
மறுபடி ஏரிக்குள் மூழ்கி எழுந்தது தேவதை. அதன் கையில் இம்முறை பளபளக்கும் வெள்ளிக்கோடாரி.
“இதுவா பார்!”
“இதுவும் இல்லை “
பதிலைக்கேட்ட அடுத்தநொடி வனதேவதை ஏரியுள் மூழ்கி வந்தது.
“இதுவாவது உன்னுடையதா பார்!”
அதன் கையில் அதே பழைய இரும்புக்கோடாரி. அவனுடையதுதான்.
“ஆம்! தாயே! மிக்க நன்றி. இதுதான் என்னுடைய கோடாரி. தாருங்கள்”
அதைப்பெற கைநீட்டினான் வீரபாகு.
” தங்கக்கோடரிக்கும் வெள்ளிக்கோடரிக்கும் ஆசைப்பட்டு பொய் சொல்லி அவற்றை வாங்கிக்கொள்ளாத உன் நேர்மையையும் உண்மையையும் மெச்சினோம். இவ்விரண்டு கோடாரிகளையுமே உனக்கு பரிசாக அளிக்கிறேன். ” தங்க வெள்ளி கோடரிகளை நீட்டியது வனதேவதை.
தேவதையை வணங்கி இரண்டு கோடரிகளையும் வாங்கிக்கொண்டான் வீரபாகு.
“தாயே! என் இரும்புக்கோடரி?”
“”அது இனிமேல் வேண்டாம் உனக்கு. தினம் தினம் மரத்தை வெட்டி வனத்தை அழிக்காதே. இந்த இரண்டு கோடரிகளையும் விற்று இயற்கையை ஊனமாக்காத வேறு தொழில் செய். அல்லது தினசரி கானகம் வந்து பத்து மரங்களுக்கு ஒன்றாக அவற்றின் கனிகளை உதிர்த்து சேகரித்துக் கொள். கிழங்கு தரும் மரங்களையும் அவ்வாறே தோண்டி எடுத்துக்கொள். வாரம் ஒரு முறை மறக்காமல் இங்கே ஒரு செடி நட்டுவிட்டுப்போ. வனத்தின் முடிவில் உள்ள உன் ஊரின் துவக்கத்தில் வனமுதிர் சோலை என்ற பெயரில் ஒரு காய் கனி கிழங்கு அங்காடி வை. அங்கீகாரம் பெற்ற கிளைகள் நிறுவிக்கொள்.”
தேவதை இரும்புக்கோடாரியை ஏரிக்குள் ஆழமான இடம் நோக்கி வீசி எறிந்தது.
வீரபாகுவிற்கு ஏதோ புரிந்ததுபோலத் தோன்றியது..!
தான் பெற்ற தங்க வெள்ளி கோடரிகளை வெட்டிய மரங்களுக்குள் கட்டிவைத்துக்கொண்டு தன் ஊரை நோக்கி பயணமானான் அவன்.
பார்வையிலிருந்து அவன் அகன்றதும் ஏரிக்குள் குதித்த அந்த வனதேவதை இருபது இரும்புக்கோடாரிகளை எடுத்து கரையில் பரப்பியது.!
காட்டிலாகா மேலதிகாரி வனமாமலைத்தாயிடம் தான் அளித்த தலா இருபது
தங்க வெள்ளிக்கோடரிகளுக்கு இருபது இரும்புக்கோடாரிகளை பரிவர்த்தனை கணக்கு காண்பித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தனக்குள் சொல்லிக்கொண்டது.
ஒரே ஒரு தங்க கோடரி கணக்கில் இடித்தது.!
ஒரு பேராசைக்கார விறகுவெட்டி இதுதான் என் கோடரி என அவள் கையிலிருந்த தங்கக்கோடரியை பிடுங்கிக்கொண்டு ஓடியது ஞாபகம் வந்தது.
மறுபடி வனத்துக்குள் கால்வைத்து வரட்டும் அந்தக் கிராதகன். அப்போது இருக்கிறது அவனுக்கு. சிறகடித்து பறக்குமுன் மனதுக்குள் கறுவிக்கொண்டது அந்த வனதேவதை.
——–அன்புடன் ஆர்க்கே.!

பழைய கரு
புது மெருகேறி
என்னமோ உணர்த்தியது.
வா வா தினம் ஒரு கன்று நடுவோம் .