
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
புதன் கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
பணி முதிர்வாகி
பல்லாண்டாகியது.
நீ
ஒரு முற்றுப்புள்ளி.
தரை இறங்கிய கனி.
கரை ஏறிய கட்டுமரம்
கீழெறக்கிய பட்டம்
பொழிந்த வெறு மேகம் …
நிகர்
மனது ஏங்கும்
மத்தியில் நிற்க;
விரல் நீட்டி ஆணையிட;
குரல் உயர்த்திப் பேச;
அது உன் இடம்
இல்லை எனத் தெரிந்தும்..
புத்தி கொண்டு யோசி!
மனம் திரிந்து போகாதிருக்க
உபாயம் ஒன்றிருக்கு.
மனமகப்படுத்து; அதை.
கையகப்படுத்து;அதை.
சற்றே கடினம்;எனினும் சாத்தியமே அது.
புரிந்துகொள்; முதலில்.
இன்றைய நிகழ்வுகளில், நீ யாண்டும் இல்லை, அங்கு.
அன்றாட இன்றைய புதிய புதிர்கள், புரியாது உனக்கு.
நேற்றைய உனது தீர்வுகள்,
இன்றைய நிகழ்வுகளுக்கு ஏற்புடையாகாது.
ஏற்றுக்கொள்; இதை.
சரியான நேரத்தில்,
சரியான அளவில்,
சீர்திருத்தமாகவோ, அறிவுரையாகவோ,
அறவுரையாகவோ,
ஆலோசனையாகவோ;
இன்றி
ஆணவம் இன்றி
ஒரு பதிவாக மட்டும் பதிவு செய்.
ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.
இன்றைய நிலையில்.
பலனை சாராதிரு.
மனம் துவளாதே.
கரையில் நிற்கும் தரு,
கரைக்கு மட்டும் உறுதியா?
ஓடு நீரில் விழும் முறிந்த கிளையும்
பழுத்த இலைகளும்,
பாயும் நீரில் தவிக்கும்
கட்டெறும்புக்கும்,
மாந்தர்க்கும்;
உயிர் காக்கும் தெப்பமாகாதோ?
24-1-2024
