உதை/அழகியசிங்கர்

எனக்கு யாரையாவது
உதைக்க வேண்டுமென்று
தோன்றியது..
முதலில்
ஒரு நூல்கண்டை
உதைக்க
நினைத்தேன்

உண்மையில்
என்னால் உதைக்க
முடியுமா
என்று தெரியவில்லை
காலை தூக்கும்போது
பின் காலின்
நரம்பு பிடித்துக்கொள்கிறது

நான்
தேடும்போது கிடைக்காத
நூல் கண்டு
புத்தகங்களுக்கு
நடுவில் இருந்துகொண்டு
சிரித்தது
அது என் உதையிலிருந்து
தப்பித்து விட்டது

பாவப்பட்ட ஜன்மம்
என்றால்
கவிதை எழுதுபவர்களைத்தான்
சொல்ல வேண்டும்
அவர்கள் கவிதைகளை
யாரும் ரசிப்பதில்லை
தெரிந்தும் அவர்கள்
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்
உதைத்தால்தான் சரியாக
வருவார்கள்

அப்படி எழுதுபவர்களில்
முதன்மையாக
என்னைத்தான்
உதைக்க வேண்டும்
என்னையே
என்னால் உதைக்க முடியாது என்பதால்
யாரை உதைப்பது
என்று வேறு ஒரு
கவிஞரைத் தேடுகிறேன்

அதனால்
நீங்கள் என் கண்ணில்
படாமல்
ஓடி விடுங்கள்!