
இன்று 25.01 .24 இணைய கால கவியரங்கின் 99 வது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதை கீழே.
99
தொட்டு விடும் தூரம்தான்,
எட்டி விடும் உச்சம்தான்,
இன்னும் கொஞ்சம் முயற்சி,
இன்னும் கொஞ்சம் பயணம்.
கிடைத்து விடும்,
சூட்டி அழகு பார்க்க
இன்னொரு மகுடம்.
உச்சியிலேறி நின்று
கொடி நாட்டி முழங்க
இன்னொரு சிகரம்
வசப்பட்டு விடும்,
அந்த சாதனை மைல்கல்.
அடைந்தபின் அது வேறு உலகம்,
வேறு பார்வை, வேறு உணர்வு.
அடைவதற்கு முன்னேயான
தருணங்கள், ஆவல், துடிப்பு,
எதிர்பார்ப்பு, தவிப்பு தோய்ந்த
கணங்கள்.
மருத்துவமனையில்
உள்ளே போய்ப்போய் வரும்
செவிலியர் முகம் , உடல் மொழியில்
ஏதேனும் நல்ல சேதி தெரியுமென
கவலையோடு காத்திருக்கும் நொடிகள்.
கண்விழித்துப் படித்து,
தேர்வுக்குத் தயார் செய்து,
விடைத்தாளில் பெயர், எண் எழுதி
கேள்வித்தாளுக்கென தவிப்புடன்
எதிர்பார்க்கும் நிமிடங்கள்.
வெளிநாட்டு வேலையெனச்
சென்ற மகள் வருடங்கள் தாண்டி
முதல்முறை ஊர்வரும் வேளை,
விமானம் கீழிறங்கிய பின்னும்
வெளியே முகமாவது தெரியாதவென
ஏங்கி நிற்கிற தருணங்கள்.
அடைவதற்கு முன்னேயான
அது வேறு உலகம்,
வேறு பார்வை, வேறு உணர்வு.
.

Wonderful
Excellent