
100 ஆவது இணைய காலக் கவியரங்கம்
நூறாவது நாள் இன்று!
எனது கவிதைகளும்
அப்பாவிக் குழந்தைகளாக
இணைய காலக் கவியரங்கில்
குதித்துக் கும்மாளம் போட்டன!
இலக்கியச் சோலையில்
கம்பீரநடை பயிலும்
மகாக் கவிஞர்களின்
கவிதைகளின் நிழலில்
ஒளிந்துகொண்டன!
இளைப்பாறி மகிழ்ந்தன!
இலக்கியம் பேசும் குழுவில்
மனம் தளராமல் தினமும்
மழலை பிதற்றின!
நிழலின் மௌனத்தை
சாலைகளின் வாக்குமூலத்தை
நொடிகளின் நகர்வுகளை
கனாத் துறந்த தருணங்களை
பூஜ்யத்தின் பூரணத்துவத்தை
சிலுவைகளின் சூட்சுமத்தை
என் மனக்குமுறல்களை
இன்பங்களை, துயரங்களை,
முடிவிலா முயற்சிகளை
வாழ்க்கையின் பெரு நிறைவை
பகிர்ந்து கொண்ட தருணங்கள்
முடிவுக்கு வந்தன!
வியப்பளித்த கவிதைகள்,
மிரள வைத்த கவிதைகள்,
மனதைத் தொட்ட கவிதைகள்,
உண்மையின் தூதுவர்களாக சில,
உணர்வுப் பிழம்புகளாக சில,
யதார்த்த ஓவியங்களாக சில,
இயற்கை போற்றிய சில,
எளிமையாக சில,
நகைச்சுவையாக சில
என்று நித்தம் இங்கு
கொட்டிக் கிடந்த கவிதைகள்
இனி
கூழாங்கல் நினைவுகள்!
கற்ற பாடங்களும்
பெற்ற ஞானமும்
அனுபவக் கருவூலத்தில்
சேர்ந்து சிரிக்கட்டும்!
செவிக்கு இனிமையாக
ஒலித்த கவிதைகள் இனி
நினைவு யாழில்
இசையாகத் தவழ்ந்து
இனிமைப் பண் மீட்டட்டும்!
அனைவருக்கும் வாழ்த்துகள்.
