அழகியசிங்கர்/முறுக்கு

எழுபது வயதில்
முறுக்குத் திங்க ஆசைப்படலாமா?

கொஞ்சம் பயம்
கடித்துப் பார்த்தால்
பல் உடையுமா
முறுக்கு உடையுமா

கல்யாணத்திற்குச்
சென்றவன்
முறுக்கு, தேன்குழல்
மைசூர் பாக்கு, லட்டு, அதிரசம் எல்லாம்
கொடுத்தார்கள்
ஒரு கவர்ச்சிகரமான
பையில்

அவசரமாய் வந்தவன்
பொட்டலத்தைப் பிரித்து
அதிரசத்தை வாயில்
இட்டுக் கொண்டான்
மற்ற ஸ்வீட்டுகளைச்
சாப்பிட
சற்று பயம்
தயக்கத்துடன் முறுக்கை
எடுத்துக்
கொண்டான்
கடித்தான்.
பல் உடையவில்லை
முறுக்கு மென்மையாய்
கரைந்தது.

உலகத்தை வென்று
விட்டது போல்
முகத்தில் மகிழ்ச்சி