சொல் புதிது 100-வது இணைய கால கவியரங்கம்
26.01.2024
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து கே புஷ்பராஜ்
எங்கள் உரிமைகளை
ஏன் பறித்தீர்கள்?
நாங்கள் என்ன குற்றம் செய்தோம்
நாங்கள் மூச்சு விடவும்
உங்கள் சம்மதம் வேண்டுமா?
எங்கள் பேச்சு எங்கள் உரிமை.
வயல்களில் உழுகிறோம்
காடுகளில் உழைக்கிறோம்
எங்கள் இரத்தம் வேர்வையாக
நிலத்தில் விழுகிறது
எங்கள் மண்ணில் எங்கள்
வியர்வையும் கலந்திருக்கிறது.
எங்கள் நிலம்
எங்கள் மக்களுக்குரியது
அதில் நாங்கள் உழவு செய்வோம்
பயிர் செய்வோம் உரமிடுவோம்
நீர் பாய்ச்சுவோம்
நாங்கள் அறுவடை செய்வோம்
எங்கள் நிலங்களில்
உங்களின் இயந்திரம் எதற்கு?
உங்களின் வணிக வளாகங்கள் யாருக்கு?
எங்களைப் பற்றி
நீங்கள் உருவாக்கிய பொய்கள்
நீங்கள் உருவாக்கிய சட்டங்கள்
நீங்கள் உருவாக்கிய மன்றங்கள்
நீங்கள் உருவாக்கிய நீதிகள்
நீங்கள் உருவாக்கிய தீர்ப்புகள்
எதுவும் எங்களுக்கானவை அல்ல
அது உங்களுக்கானவை
எங்கள் மன்றங்களை நாங்கள் உருவாக்குவோம் எங்கள் சட்டங்களை நாங்கள் ஏற்படுத்துவோம் எங்கள் தீர்ப்புகளை நாங்கள் எழுதுவோம்
அது எங்களுக்கானவை
அதில் எங்களின் வாசம் வீசும்
அது நாட்டை ஆளும் வியாபாரிகளுக்கானவை அல்ல
உங்கள் தீர்ப்புகள்
கடவுளின் தீர்ப்பு அல்ல
நாங்கள் ஒரு போதும்
நம்பிக்கை இழக்க மாட்டோம்
எங்கள் போராட்த்தை தொடர்வோம்
ஒரு நாள்
வெற்றி பெறுவோம்
–

அருமை கவிதை
உரிமை கவிதை!