சசிகலா விஸ்வநாதன்/பணி நிறைவு

முப்பத்தி ஏழு வருடங்கள்
வாழ்வின் பெரும் நாட்கள்….

மனதில் விஞ்சும் கனவு…
கனவில் கொஞ்சம் எதிர்பார்ப்பு…

இப்படித்தான் ஆரம்பம்…

தோளில் தொங்கும் பையுடன்
பேருந்துக்குக் காத்திருந்த நாட்களில்,
சிட்டுக்குருவியின் பறத்தலுடனும்;

பறத்தல் உன் பயிற்சி அல்ல..
பறத்தல் உன் திறனும் அல்ல
உன் இயல்பு
உன் பண்பு
வாழ்வு உனக்கு எளிதானதில் விந்தை ஒன்றும் இல்லை!
இந்த நொடி மட்டும்
எனக்கானது என்ற நினைப்பும்;
எவரையும் உன் பக்கம் திருப்ப வேண்டும் என்ற விழைவும்;
இல்லாததால்:

உன்னால் எளிதாக எதையும்
விடுதலும்,
கடக்கவும், தாண்டவும்,
வளைதலும்,
களைதலும்,
பொறுப்பதும்,
தவிர்க்கவும்,
மறக்கவும்,
மன்னிக்கவும்,
பகிர்தலும்,
இயல்பாக இயலும்.

நற்றுணை வாய்க்க;
மேலும் செதுக்கப்பட்ட
வைரமணி என்ன மின்ன;
குறை ஒன்றும் இல்லை உனக்கு!

நலமாக இல்லம்
சேர்ந்து இனி நீ
இன்புற்று வாழலாம்!

அலுவலக கோப்புகள் பார்க்க வேண்டாம்!
பரிசோதனைகளின் முடிவை வரையறுக்க வேண்டாம்!
நாளும் நூறு
கையொப்பம்
இடவேண்டாம்!
கோர்ட் படி வாசல்
ஏற வேண்டாம்!
இன்று யாருக்கு
என்ன பதில் கொடுக்க; என யோசிக்க வேண்டாம்!

மூன்று மாதங்களுக்கு
இரயில் பயணச்சீட்டு
பதிவு செய்து; ரத்து செய்ய வேண்டாம்

கண்ணில் சிறையிருக்கும்
உறக்கத்திற்கு
சற்று விடுதலை
அளித்து
நீண்டநாள் நீ எதிர்பார்த்து காத்திருந்த இல்லத்தில் வசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம்!

பறந்து பறந்து
பணி செய்து
அயர்ந்து விடுதலையை ரசிக்கலாம்.
உன்” அவரோடு”
அமர்ந்து நிதானமாக
உண்டி உண்ணலாம்!

இத்தனை இன்பம்
இருந்தும் உன் மனம்
ஏங்கலாம்
மரபணு பரிசோதனை செய்யவும்..
ஆய்வுகளின் முடிவை
தெரிவு செய்யவும்…
நாட்டமாய் பணி செய்த அனைவருக்கும்
வாடிக்கையாய்
வரும் வாட்டமே இது.
வாட்டமது மாறும்;
அதுவும் வாடிக்கையே!


28-1-2024