செல்லம்மா பாரதி/பாரதியும் சிஷ்யர்களும்…

  1. பாரதியார் சரித்திரம்

வீட்டில் சிஷ்ய கோடிகள் சுமார் 35 பேர்கள் இருந்தார்கள். தீரமிக்க இளைஞர்களான ஸ்ரீ சங்கர கிருஷ்ணன், பாலு, தோத்தாத்திரி, ஹரிஹர சர்மா முதலியவர்கள். ஒவ்வொருவரும் விசித்திரமான பிரத்தியேக குணமுடையவர் அவர்களுடைய சமையல் சாப்பாடு எல்லாம் வெகு விரத்திரமாகவேயிருக்கும்.-

ஸ்ரீ சங்கரகிருஷ்ணன் கடைய நல்லூரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமம் – நல்ல வைதீக குடும்பத்தில் பிறந்தவர். கட்டுமஸ்தான சரீரம். தினம் தண்டால் பஸ்கி முதலியன செய்துவிட்டு ஒரு படி ஊற வைத்த பச்சைக் கடலையையும் சாப்பிடுவார். பாரத மாதாவின் பணிவிடை யில் ஏற்படுங் கஷ்டங்களைத் திருப்தியோடு அனுபவிப்பதில் உள்ளன்பு கொண்டார். “சிறைவாசம் ஏற்பட்டால், கொடிய தண்டனைகளை அனுபவித்து – பட்டினியிருந்து – களி தின்ன வேண்டும்; அதற்காக இப்போது முதலே சரீரத்தைப் பயிற்சி பண்ண வேண்டும்” என்று தினம் கேப்பைக் களி கிண்டிச் சாப்பிடுவார். பின்பு அவர் எதிர்பார்த்தபடியே கெலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப் பட்டுக் கொடுமையான சிறைவாசத்திற்கு ஆளானார்.
பால்ய வயதினளாகிய மனைவியையும், தாய் தந்தை, உற்றாரையும் தவிக்கவிட்டு, சிறை சென்று ஆறேழு வருஷம் அல்லலுற்று, திரும்ப வெளியில் வந்து சிறிது காலத்தில் மரண மடைந்தார். உத்தமத் தியாகி. புதுச்சேரிக்கு அருகிலுள்ள சிறு கிராமங்களில் ஹரிஜனங்களுக்குக் கல்வி பயிற்றுவதற்காகப் பாரதியார் தம் சிஷ்யர்களை அனுப்புவார். அவர்களில் முக்கியமானவர் ஸ்ரீ சங்கரகிருஷ்ணன்.
ஸ்ரீ பாலு, காவேரி தீரவாசி. என் தமையனாருக்கும் அவருக்கும் தினமும் திருச்சி திருநெல்வேலி ஜில்லாக்கள் சம்பந்தமாகச் சர்ச்சைகள் நடக்கும். சில சமயங்களில் சம்பாஷணை கொஞ்சம் பலமாகக்கூட, கடுமையான வார்த்தை களில் நடக்கும். ஸ்ரீ பாலு நல்ல கட்டுமஸ்தான சரீரத்தோடு கூடியவர். அவர் தாம்பிரபர்ணி நதியை நிந்திப்பார்; காவேரியைப் புகழ்வார். ஒருநாள் இருவரும் வாதாடும்போது பாலுவின் கால்களைத் திடீரென்று இழுத்து உயரத்தூக்கி விட்டார். பாலு தடாரென்று விழுந்தார். உடனே பாரதியார், “அடே! காவேரி தீரத்தானைத் தாம்பிரபர்ணியான் அடித்து விட்டான். அதன் பலன் வெண்கலப் பானை உடைந்தாற் போல் மண்டை உடைபட்டதுதான்” என்றார்.
ஸ்ரீமான் ஹரிஹர சர்மா சிறுவயது முதலே தியாக வாழ்க்கையில் ஈடுபட்டவர். அவரைக் கைத்தொழில் முதலியன கற்று வரும்படியாகப் பரோடாவிற்கு அனுப்பினார் கள். அங்கே சென்றவர் அப்படியே ரங்கூன் சென்று மகாத்மாகாந்தியின் ஸபர்மதி ஆசிரமத்தில் ஏழெட்டு வருஷங்கள் தங்கி, மகாத்மாவின் அன்பையும் ஆசியையும் பெற்று ஹிந்தி ப்ரசாரம் செய்வதற்காக மயிலாப்பூரில் தங்கி வந்தார். இடையில் அனேக மாறுதல்கள் ஏற்பட்டுக் காலசக்கரம் தன் இஷ்டப்படியே சுழன்றதால் பரோடா சென்ற நோக்கம் அவ்வளவாகக் கைகூடவில்லை. ஆனால் அவரை உத்தம ஸத்யாகிரஹியாக்கப் பாரதியாரே காரணமாக ஏற்பட்டார்.
ஸ்ரீ தோத்தாத்திரி, குவளைக்கண்ணர் இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவர்கள். பாரதியாருக்கு, “விஷயம் எதுவானாலும் சொல்லுமுன்பு நடத்த வேண்டும். என்ன துயரமான விஷயமானாலும் முகமலர்ச்சியோடு இருக்க வேண்டும்” என்பது கொள்கை. நண்பர்கள் இருவரும் பராதியாரை அளவுக்கு மிஞ்சிச் சோதிப்பார்கள். “தோத்தாத்திரி, கடைக்குச் சென்று வெற்றிலைபாக்கு வாங்கிவா!” என்பார் பாரதியார். உடனே, “இல்லாவிட்டால்?” என்பார் நண்பர். “இல்லாவிட்டால் அடுத்த கடைக்குப்போ” என்பார் பாரதியார். “அந்தக் கடையும் பூட்டியிருந்தால?” என்று பதில் வரும். “பெரிய கடைத் தெருவுக்குப் போாய் வா என்பார். “இந்த வெயிலில் என்னால் அவ்வளவு தூரம் போக முடியாதே” என்று நண்பர் பதில் சொன்னதும், “அட அபஜயமே! எதற்கெடுத்தாலும் இல்லையென்ற ஜபந்தானா? வெற்றிலையே இன்று போடுவதில்லை” என்று பாரதியார் தீர்மானித்துக் கொள்வார்.
இவ்வளவு பேச்சும் ஆனதற்குப் பிறகு நண்பர் ஸ்ரீ தோத்தாத்திரி க டைக்குச் செல்லுவார்.
குவளைக்கண்ணர் பாரதியாருக்கு எல்லா விஷயங்களிலும் நேர்மாறானவர். அவர் அன்பின் மிகுதியால் செய்த தொல்லைகள் கணக்கிடலடங்காதவை. ஓயாமல் பாஞ்சாலி சபதமோ அல்லது நொண்டிச்சிந்தில் அமைக்கப் பட்ட பாடல் ஏதேனுமொன்றோ காலை மூன்று மணிக்கு மனப்பாடம் பண்ண ஆரம்பித்தால், பொறுமையில் மிக்க தருமபுத்திரருக்குக்கூடக் கோபம் வரும்; அவ்வளவு உரக்கவும், கர்ண கடூரமான சுருதியிலும் பாடுவார்; ஓயவே மாட்டார். பாரதியாரைப் பிரியவே மாட்டார். அனாவசியமான கேள்வி கேட்பதில் குவளையை மிஞ்சினவர் கிடைப்பது அரிது. அனேக நாட்களில் சாப்பாட்டு வேளைக்கு வந்து எனக்குக் கூடச் சாதம் இல்லாமல் செய்துவிடுவது அவரது சுபாவம். நமது மிதமிஞ்சிய ஹிம்ஸை என்னும் கோலால் பாரதி யாருக்குப் பொறுமை என்னும் மந்திரத்தை உபதேசித்தார்.
ஸ்ரீ நெல்லையப்பபிள்ளை, சிவக்கொழுந்துநாயக்கர், வாத்தியார் சுப்பிரமணிய ஐயர், ஸ்ரீநிவாஸாச்சாரியார், சங்கர செட்டியார், ஆறுமுகம் செட்டியார், முருகேசம் பிள்ளை, குப்புசாமி ஐயர் மாப்பிள்ளை அருணாசல ஐயர் முதலிய நடுவயதினர்களும், தீர இளைஞர்களுமான சுமார் ஐம்பது பேர்கள் பாரதியாருக்கு நண்பர்களாவர்.
ஸ்ரீ வேணுகோபால், தேவசிகாமணி அவருடைய தாய் அம்மாக்கண்ணு அம்மாள், கோவிந்தன் என்னும் நால்வரும், புலிப்பால் கொண்டு வா என்று பாரதியார் உத்தரவிட்டாலும் கூட உடனே கொண்டுவரும் தன்மை உடையவர்கள்.
‘இந்தியா’ சிறிது காலத்திற்கெல்லாம் அரசாங்கத்தாரால் நிறுத்தப்பட்டது. ‘கர்மயோகி’ என்ற பத்திரிகை ஆரம்பமாகி இருவருஷம் நடந்தது. அதுவும் தன்னால் இயன்ற அளவு தேசசேவை செய்தது. பின்பு அதற்கும் முடிவு ஏற்பட்டது. ‘தருமம்’ என்றொரு பத்திரிகை உதயமானது. ஸ்ரீ நாகஸாமி, ஸ்ரீ.வ.ராமஸாமி ஐயங்கார், இன்னும் சிலர் சேர்ந்து நடத்தினார்கள்.
எங்கள் சிஷ்ய கோடிகளின் உறவினர்கள் கவலையோடு புதுவை வந்து தங்கள் பையன்களை ஊருக்கு வந்துவிடும் படியும், சுதேசியத்தில் பற்றைவிட்டுவிடும்படியும் வேண்டுவார் கள். ஆனால் தேசாபிமானம் என்பது மனத்தில் ஏற்பட்டபின் யாராலும் நீக்க முடியாத தன்மை கொண்டதல்லவா? இளைஞர்கள் மறுத்துவிட்டனர். புதுவையிலேயே தங்கி விட்டனர். ஸ்ரீ.வ.வே.சு.ஐயரும் வந்து சேர்ந்தார். ஸ்ரீ அரவிந்தரும் வந்தார்.
பின்பு பாரதியாரின் வாழ்க்கை மலர் மலர்ந்து மணம் பரப்ப ஆரம்பித்துவிட்டது. பாரதியார் சில தனவந்தர்களான நண்பர்கள் முயற்சியினால் ஆங்கிலேயர் வசிக்கும் தெருவில் ஒரு வீட்டைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டு அங்கே வசித்து வந்தார். இப்போது அதுவே பல வீடுகளாக ஆகி மனச்சாந்திக்கு இருப்பிடமான ஆசிரமமாகத் திகழ்கின்றது. பலர் அதில் சேர்ந்து ஆத்மார்த்தப் பசியைத் தணித்துக் கொள்கிறார்கள். ஸ்ரீ அரவிந்தர் அனேக நூல்கள் எழுதினார். பாரதியார் தினந்தோறும் சாப்பாடு இல்லாமற் போனாலும் கூட பொறுப்பார்; ஆனால் ஸ்ரீ அரவிந்தரைக் காணாமல் இருக்கமாட்டார். நாளடைவில் அரவிந்தர் வீட்டில் வங்காளிகளும், தமிழர்களுமாக இருபது பேர்கள் வரையில் சேர்ந்துவிட்டனர்.
பிரெஞ்சு அறிஞர் ரிஷார் என்பவர் தம் மனைவி யாரோடு ஸ்ரீ அரவிந்தர் தரிசனத்திற்குப் புதுவை வந்தார். ‘நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல’ வேதங்கள், பாஷ்யங்கள், உபநிஷத்துக்கள் முதலியவைகளை ஸ்ரீ ஐயர், பாரதியார், ஸ்ரீநிவாஸாச்சாரியார், அரவிந்தர் முதலியவர்கள் ஆராய்ந்து முற்றுமுணர்ந்து எல்லோருடனும் சமதிருஷ்டி யோடு வாழலாயினர்.
ஸ்ரீமதி ரிஷார் பாரதியார்பால் அன்பு கொண்டவர். பாரதியாரின் முகப்பொலிவையும், தலைப்பாகையையும் புகழ்ந்து கொண்டாடி ரிஷாரையும் அதுபோல உடை அணிவிப்பார். மேனாட்டில் நண்பர்கள் கை குலுக்குவது அநாகரிகம் என்று கையெடுத்து கும்பிடும் பழக்கத்தை அவர் மேற்கொண்டார்.
எங்களிடம் கையில் தம்பிடிகூட இல்லாமல் இருந்த சமயம் உண்டு. ஆனால் மனமோ நிறைந்த திருப்தியோடு இருக்கும். இவ்விதமாகத் தண்டகாவனம் ரிஷிகளால் நிறைந்ததுபோல் புதுவை சுதேசிகளால் நிறைந்திருந்தது.