தங்கேஸ்/நிழல்கள்

இணை பிரியாது என்று நான் நினைத்திருந்த
நிழல் தான்
இன்றைய நடைபயிற்சியில்
எதிர்பட்ட திருப்பத்தில்
உடன் வராமல் நின்று விட்டது

திகைத்து நான் நிற்க
சாவகாசமாய் சிரித்து விட்டு
இருளோடு மறைந்து போனது

என் நிழலை தந்து விடு
நான் போய் விடுகிறேன்
என்று வார்த்தைகள் கேட்டன
சப்தங்களின் நிழல் அல்லவா
நீங்கள் என்றேன்
இருவருமே
மௌனங்களில் குதித்தோம்

நிழல்கள் பேசிக்கொண்டன
ஒரு நாள்
உடம்புகளுக்கான நிழல்களாய்
நாம் எத்தனை நாள் மண்ணில் உருள்வது ஒரு நாள்
அவைகளை நமக்கான நிழல்களாய் மண்ணில்
உருள விட்டாலென்ன?

என் நிழல் எங்கே என்று பார்த்தேன்
அதுதான் அங்கே பேசிக் கொண்டிருந்தது

உடலற்ற நாளொன்றில்
நிழல்கள் குதித்து கும்மாளமிட்டுக்கொண்டிருந்தன
சே சே என் நிழலா
அப்படி இருக்காது என
எண்ணி முடிக்கும் முன்பே
என் முன் தோன்றி
உடல்களை உதறுங்கள்
எனதருமை நிழல்களே
என பேய் கூச்சலிட்டது அது

ஊர்ந்து தவழ்ந்து பட்டாம் பூச்சிகளாகி
பறந்து செல்கின்றன
குழந்தைகளின் நிழல்கள்
உடன் வந்த என் நிழல்
ஒரு மரத்தடியில் இளைப்பாற
அதன்றி ஒரு எட்டு எடுத்து வைக்கமுடியவில்லை
என்னால்

பிறகு
என்நிழல் என்னைப்பார்த்து
கேட்டது
இப்பொழுது தெரிகிறதா
எவற்றின் நடமாடும் நிழல்கள்
யார் என்று?

One Comment on “தங்கேஸ்/நிழல்கள்”

Comments are closed.