மௌனம்


ஆர் வத்ஸலா

மனைவிமார்களை கிண்டல் செய்வதை ஒரு சில ஆண்கள் எரிச்சலூட்டும் அளவுக்கு ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு தாங்கள் மிகவும் பயப்படுவது போல பேசுவது. இதற்கு பட்டிமன்ற பேச்சாளர்கள் ஒரு பெரிய கிங் சைஸ் உதாரணம் என்றால் எழுத்தாளர்களும் கவிஞர்களும் ஏதோ ஏழைக்கேத்த எள் உருண்டை என்று சிறிய சைஸில் இதே கிண்டலை அயராமல் சோராமல் தொடர்கிறார்கள். இது போன்ற கிண்டலை கேட்க, படிக்க நேரும்போது சிறுவயதில் ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்த ஜோக் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் தினமும் இயேசுவை பரிகசித்தோ அல்லது திட்டியோ கிளப் நோட்டீஸ் போர்டில் ஒரு நோட்டீஸ் போடுவாராம். ஒரு நாள் அங்கு வேறு ஒருவர் பின்வருமாறு ஒரு நோட்டீஸ் போட்டிருந்தாராம். “இதுவரை இயேசுவைப் பற்றி இந்த மகானுபாவர் சொல்வதை கேட்டாகிவிட்டது. இப்பொழுது இவரைப்பற்றி இயேசு என்ன சொல்கிறார் என்று கேட்க ஆவலாக இருக்கிறோம்.”

சாதாரணமாக மனைவிமார்கள் தங்கள் திருமணத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் குடும்ப நலனுக்காகவும் மௌனத்தை ஒரு தவமாகவே கடைபிடிக்கிறார்கள். இங்கு முக்கியமாக ஒரு விஷயம் கூற விரும்புகிறேன். எல்லா பெண்களும் தேவதைகள் என்றும் அத்தனை ஆண்களும் அசுரர்கள் என்றும் நான் கூற வரவில்லை. ஆனால் குடும்பத்தின் நிம்மதியை குலைக்க விரும்பாததால் அனேகமாக மனைவிதான் கணவனை விட பல விஷயங்களில் அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிறது என்பது நிஜம். ஒரு புரிதல் காரணமாக அப்படி விட்டுக் கொடுப்பதால் அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை தொலைத்து விடுவதில்லை என்பதும் உண்மை.


அதே சமயம் பூனைக்கு காலம் வரும்போது அது தனக்கு கிடைத்த வாய்ப்பை விடுவதில்லை என்பதற்கு 50 வருடங்களுக்கு முன் நடந்த பின்வரும் சம்பவம் ஒரு உதாரணம். :


என் மாமா ஒருவர். மிகவும் நல்லவர். மனைவியிடம் அன்பு கொண்டவர். ஆனால் அவளுக்கு ஒன்றும் தெரியாது என்றும் தனக்கு எல்லாம் தெரியும் என்றும் சதா பறைசாற்றிக் கொண்டிருப்பவர்.


அந்தக் கால வழக்கப்படி மாதம் மூன்று நாள் மாமியால் சமையலறைக்குப் போக முடியாது. அந்த நாட்களில் வரும் சமையற்கார மாமியால் ஒரு முறை வரமுடியாமல் போயிற்று. காலை காபியிலிருந்து தொடங்கியது பிரச்சினை. பில்டர் காபி போடுவது எப்படி என்று மாமி சொல்லத் துவங்கியதுமே, மாமா “எல்லாம் எனக்கு தெரியும்டீ. அந்த கீழெ இருக்கிற கிண்ணத்துல காபி பொடியெ போட்டுட்டு மேல் கிண்ணத்துல கொதிக்கிற தண்ணியெ விடணும், அவ்ளோ தானே? இது என்ன பெரிய கம்ப சூத்திரம்!” என்றார். மாமி மௌனமாகி விட்டாள்.


மாமா காபி போட்டார்.. போட்டார்…போட்டார்…