சசிகலா விஸ்வநாதன்/முத்தம்

நேற்றுக் காலையில்
இருந்து தேடல்…
இல்லை !
நடு இரவில் சற்று
விழிப்புணர்வு …
நினைவுகள் பின்னோடி
அதன்மேல் மையம்
எங்கே வைத்தேன்.. அதை?
நினைவில்லை…
நினைத்து நினைத்துப் பார்த்தும் பலனில்லை!
தேட ஆரம்பித்து விட்டது மனது.
அன்றாட அகத்துப் பணிகள் முடித்து;
அவரும் மதிய உறக்கம் கொண்டபின்….
தேட ஆரம்பித்து விட்டேன்!
புடவைகளுக்கு இடையே…
ஸ்வாமி அலமாரியில்..‌
பூஜை சாமான்கள் பெட்டியில்.‌‌..
எங்கே வைத்தேன்?
மனம் அதிலேயே நின்று;
மயங்கி சுழன்றது.

என் அலுவலகக் கோப்பு நடுவே…
வங்கி கணக்குப் புத்தக பைகளில்..
வீட்டுப் பத்திரங்களுக்கு இடையே…
எங்கும் இல்லை!
ஒரு வேளை வங்கி பெட்டகத்தில் இருக்குமோ?
வேகமாக கதவை
பூட்டிக் கொண்டு
பெட்டகம் திறந்தால்;
அங்கும் இல்லை.

மன ஓய்ச்சல் தந்த
தலைவலியுடன்
இல்லம் சேர்ந்து
சோர்ந்து அமர்ந்தேன்.
அதன் நினைவில்
நான் உழன்றே நின்றேன்.

இன்று காலை ஒரு நினைவுப் பொறி தட்ட..
என் பெண் எனக்கு எழுதின கடிதங்கள் அடங்கின கோப்பில் தேட….
அகப்பட்டது…
1-9-2000 தேதியிட்ட
₹1000 க்கான காசோலை ..

என் அன்பு மகள்
தன் முதல் மாத ஊதியத்தில்
அவள் தன் வாழ்வில்
எழுதி கையொப்பம் இட்ட முதல் காசோலை.
என்னைப் பார்த்து
முறுவல் செய்ய,
என் கண்ணில் நீர் சொரிய;
தந்தேன்;அதற்கு
ஒரு அழுத்தமான முத்தம்‌.

செல்லா காசோலை நுனி மடங்கி,
உதிரும் நிலை.
மென்தகட்டுக்குள்
பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.