சுகன்யா சம்பத்குமார் / /சீர் கொண்டுவந்தால் சகோதரன்

உதய்ப்பூர் நகரின் முக்கியமான வணிக வியாபாரி கோபாலாலின் செல்ல மகள் அபர்ணா . மிகுந்த அழகும் குணமும் உள்ள அவளை ஜோத்புரின் வியாபாரி பஜ்ரங்கின் மகனான அபிஜீத்துக்கு திருமணம் செய்துவைத்தார் கோபாலால் . அபர்ணாவிற்கு பரத் என்ற ஒரு அண்ணன் இருந்தான் , சிறு வயதில் தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான் .எங்கெங்கோ சென்று பிழைத்துக்கொண்டு இருந்தான் .அபர்ணாவிற்கு எப்பொழுதும் தன் அண்ணன் ஞாபகம் .ஒவ்வொரு ரக்ஷா பந்தனுக்கு அவனுக்காக ஏங்கி காத்திருப்பாள் .அந்த பழக்கம் கல்யாணம் ஆகியும் விடவில்லை .கணவரின் வீட்டிலோ தன் அண்ணன் ஓடி போனதை பற்றி எத்தனையோ ஏளன பேச்சுகள் அத்தனையும் தாண்டி தன் அண்ணன் என்றாவது வீட்டிற்கு வருவான் தன்னை சந்திப்பான் என்று மிகுந்த ஆசையுடன் இருந்தாள் .
கல்யாணம் ஆகி அவளுடைய முதல் ரக்ஷா பந்தன பண்டிகை .அனைவரும் உற்சாகத்துடன் காலையில் எழுந்தனர் .அவள் நாத்தனார் ஆர்த்தியோ அபிஜீத்துக்கு நிறைய பொருட்களை வாங்கி அவனை மகிழ்வித்தாள் .பதிலுக்கு அவனும் நிறைய ஆடை ஆபரணங்களை பரிசாக கொடுத்தான் . அதனை பெற்றுக்கொண்டு மிகுந்த ஏளனத்துடன் “அண்ணியாரே அண்ணன் என்றால் இப்படி இருக்க வேண்டும் ,தங்கைக்கு எத்தனை பரிசுகள் ,என் அண்ணனின் பாசம் இதில் தெரிகிறது பார்த்தீர்களா ?”என்றாள் .ஆனால் அபர்ணா எதற்கும் கவலை கொள்ளவில்லை , எப்பொழுதும் போல் கடைவீதிக்கு சென்றாள் ,அண்ணா விரும்பும் காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிகொண்டாள் , வீட்டிற்கு விரைந்தாள், தன் சமையல் வேலையை தொடங்கினாள் .எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம் , “இந்த பெண்ணிற்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா ,ஏன் வராத அண்ணனிற்காக இப்பொழுது சமைக்கிறாள் ?என்று நினைத்தனர். நேரம் நகர்ந்தன , சமையல் வேலையை முடித்து வாசலில் கண்ணீரோடு அமர்த்திருந்தாள் , யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் ஒரு உருவம் அவளருகே வந்து நின்றது , அவள் கண்ணீருடன் வாய் பேசமுடியாமல் நின்றாள் . அது வேற யாருமில்லை , அவளுடைய அண்ணன் பரத் . அவனை கண்டதும் சந்தோஷத்தில் இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .அவன் உள்ளே வந்ததும் , தன் தங்கைக்காக வாங்கிய சிறிது பூக்களையும் பழங்களையும் கொடுத்தான் , அபர்ணாவின் புகுந்த வீட்டுக்காரர்களின் ஏளன பேச்சு இன்னும் அதிகமாயிற்று .”இத்தனை வருடம் கழித்து தன் தங்கையை பார்க்க இப்படியா வெறும் கையை வீசிக்கொண்டு வருவது’? என்ன’ஜென்மமோ “என்று அவனை திட்டி தீர்த்தனர் . இதை கேட்ட பின் எங்கு தன் தங்கையும் தன்னை அவமானப்படுத்தி விடுவாளோ என்று பயந்தான் பரத். ஆனால் இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் நீண்ட வருடத்திற்கு பிறகு வந்திருக்கும் அண்ணனுக்கு ரக்ஷா பந்தன் சடங்குகளை செய்தாள் அபர்ணா .அவனுக்கு வயிறார சாப்பாடு போட்டாள் .அவன் தந்த பூவையும் பழங்களையும் மகிழ்வோடு பெற்று ஆசீர்வாதம் வாங்கினாள் . அவன் கிளம்பும்போது “அபர்ணா நான் அப்பாவிடம் சண்டையிட்டு வீட்டிற்கு வராமல் போனதால் உனக்கு என் மீது கோவமும் வருத்தமும் இருந்திருக்கும் ஆனால் என் சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளவே அப்படி செய்தேன் , என்னை மன்னித்துவிடு ,ஆனால் ஒரு நாள் வாழ்வில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு நம் அப்பா அம்மாவை சந்தித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு , அவர்களை நல்ல படியாக பார்த்துக்கொள்வேன் . ஆனால் இப்பொழுது கொஞ்சம் வியாபாரம் சுமாராக இருப்பதால் உனக்கு எதுவும் வாங்கி வர முடியவில்லை “என்று கூறி அழுதான் .அவன் கண்ணீரை தன் கைகளில் ஏந்தியபடி அபர்ணா தன் நந்தனாரை பார்த்து”ஆர்த்தி , எனக்காக என் அண்ணன் இருப்பதும் ,கண்ணீர் விடுவதும் தான் உண்மையான சீர் , பணம் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் , ஆனால் அண்ணணின் பாசம் ஒரு பெண்ணிற்கு எப்பொழுதும் ஒரு அரணாக இருக்கும் , அதுவும் புகுந்த வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு பெரிய காப்பாக இருக்கும் என்றாள் “…..

One Comment on “சுகன்யா சம்பத்குமார் / /சீர் கொண்டுவந்தால் சகோதரன்”

  1. மிகவும் அருமையாக கதையை எழுதி உள்ளார் சுகன்யா அவர்கள்.
    இது போன்ற சகோதரிகளுக்கு நல்ல ஆறுதல் அண்ணன்,தம்பி,இருக்கிறார்கள் என்பதுதான்.

Comments are closed.