செல்லம்மா பாரதி/கலெக்டர் ஆஷ் மரணமும் அதனால் ஏற்பட்ட விபத்துக்களும்

பாரதியார் சரித்திரம்

தமிழ்நாட்டில் திடீரென ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது அதாவது திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த ஆஷ் என்பவரின் துர்ப்பாக்கிய மரணம் காரணமாக, திருநெல்வேலி ஜில்லா முழுவதும் கஷ்டத்திற்காளாகியது. ஓர் இளைஞன் ஆய்த்தோய்ந்து பாராமல் செய்த பிழையானது, அனேக சாதுக்களான கிராமவாசிகளையும், நல்லோரையும், பொதுவாகக் ‘கிராப்பு’த் தலையுள்ள இளைஞர்களையும், மீளமுடியாத தண்டனைக்கு உள்ளாக்கியது.
சும்மா இருக்கும்போதே எங்கள் வீட்டுக்கெதிரில் பத்து ‘ஸி.ஐ.டி.’ இருப்பார்கள். அப்போது மும்மடங்கு அதிகமானார்கள். அவர்கள் செய்த தொல்லைகளும் அளவு கடந்தன. என்னால் என் பிறந்த வீட்டார் அனுபவித்த துக்கம் கணக்கில் அடங்காதது.
கலெக்டர் கொலை செய்யப்பட்ட சமயம் கடையத்திலிருந்த நான் ஏழெட்டுத் தினங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
தமிழ்நாட்டில் எங்கே பார்த்தாலும் ஒரே அழுகைக் குரல்தான். சுதேசி இயக்கத்தில் சம்பந்தப்பட்ட பேர்கள், தப்பித்தவறி, ‘சுயராஜ்யம்’ என்று சொன்னவர்கள், ‘வந்தேமாதரம்’ என்று தெரிந்தோ தெரியாமலோ வாயசைத்தவர்கள், இவர்கள் மாத்திரமல்ல; இவர்களுடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்கள், பார்த்தவர்கள், கேட்டவர்கள் எல்லோருமாகச் சர்க்காரின் விருந்தினர் ஆயினர். அதிருஷ்ட முள்ள சிலரைத் தவிர மற்றவர் சர்க்காரின் பயங்கர
அடக்குமுறைக்கு ஆளானார்கள் என்றால் எங்கள் இடும்பத்தைப் பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை.

பாரதியார் ‘கர்மயோகி’ பத்திரிகை நடத்தி வருங்காலத்திலேயே என் தமையனார் ரன்கூன் சென்று அங்கு ஒரு வேலையில் அமர்ந்துவிட்டார். அந்தச் சமயம் ரங்கூனிலிருந்து கடையம் வந்திருந்தார். அவரும் சர்க்காரால் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப் பட்டார். என் தங்கை புருஷர் சிவராம கிருஷ்ணையர் பம்பாயில் மின்சார எஞ்சினியரிங்குப் பயிற்சிக்காக வாசித்துக் கொண்டிருந்தார். அவரையும் கைது செய்தனர்.

என் பிறந்த வீடு விசாலமானது. குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் என் தமையனார் வகித்து நடத்தி வந்தார். திடீரென அவர் கைது செய்யப்பட்டுக் கேள்வி முறையில்லாமல் வைக்கப்பட்டிருந்தது, என் தகப்பனாருக்கு ஸகிக்க இயலாத கஷ்டத்தை உண்டாக்கிவிட்டது. என் தாயார், பாவம், மிக்க பொறுமைசாலி; மகாலக்ஷ்மி போன்ற வடிவம் வாய்ந்தவர்; கடவுளிடம் குன்றாத அன்பு கொண்டவர். குடும்பத்திற்கு முக்கியஸ்தரான தம் குமாரர் சிறை சென்றதும் (சிறை சென்றால் அந்தச் சமயத்தில் தீவாந்தர சிக்ஷைதான்) மனத்தைத் தளரவிடாமல் கடையத்திலிருந்து ஒரு மைல் தூரமுள்ள கல்யாணி அம்மன் கோவிலுக்குச் சென்று மாதாவிடம் தம் துயரத்தைத் தீர்க்கும் வண்ணம் மன்றாடி அழுதுவிட்டு மத்தியானம் இரண்டு மணி வெயிலில் திரும்பிவந்து சிறிது ஆகாரமுண்டு களை தீர்வது வழக்கம். தகப்பனாரும், கடவுளை நம்புவதைத் தவிர வேறு வழியில்லாததால், சுந்தரகாண்ட பாராயணம் செய்வதும், ஒரு வேளை புசிப்பதுமாகக் காலங்கழித்து வந்தார்.

நம்மவரில் ஒரு பெருங்குறை; ஒருவன் கடவுள் சோதனையால் துன்பமுறும் சமயம், உற்றாரும், உறவினரும். அவன் மனத்தை ஏளன மொழிகளாலும், அவமரியாதைளாலும் புண்படுத்துவது தான் வழக்கம். அவர் கூறும் வார்த்தைகள் கஷ்டப்படுபவன் மனத்திற்கு ஈட்டியினால் குத்துவது போலவும், எரிகின்ற தீயில் எண்ணெய் வார்ப்பது போலவும் வேதனை செய்யும்.
சமயம் வாய்த்ததென்று ஊரார் வம்பு பேசலாயினர் “மாப்பிள்ளை புதுச்சேரிக்குப் போயாகிவிட்டது. பிள்ளையும் தீவாந்தரம் போவான். மற்றொரு மாப்பிள்ளைக்கு அதே கதிதான் போலும்” என்று என் தகப்பனார் காதில் விழும்படி அவர்கள் பேசிக் கொள்வார்கள்.