சுகன்யா சம்பத்குமார்/கருணை இல்லம்


பாண்டிச்சேரியில் மிகவும் பழமையான புகழ்மிக்க குழந்தைகள் காப்பகம் என்றால் அது கருணை இல்லம் தான் . இதை 50 ஆண்டுகளாக நடத்தி வருபவர் ஜெனிபர் .குழந்தைகளுடன் அன்போடும் அக்கறையோடும் பழகும் ஜெனிபருக்கு 79 வயது ஆனதாலும் , இந்த காப்பகத்தை தனக்கு பிறகு பேத்தி இருந்தும் பார்த்துக்கொள்ள முன் வராததாலும் இதனை வேற யாரேனும் எடுத்து நடத்துவர்களா ? விருப்ப முள்ளவர்கள் தன்னை வந்து சந்தித்து பேசலாம் என்றும் பத்திரிகையில் விளம்பர படுத்தி இருந்தாள் . இந்த செய்தியை பார்த்துவிட்டு கிளம்பி வந்த ஜான் என்பவர் , ஜெனிபர் விலாசத்திற்கு வந்து கதவை தட்டினார் .கருணை இல்லமும் ஜெனிபரின் வீடும் அடுத்தடுத்து இருந்ததால் அவருக்கு அந்த சூழலை பார்க்கும் போது ரொம்பவும் பிடித்திருந்தது .கதவை திறந்தார் ரோஸி (ஜெனிபரின் 21 வயது பேத்தி ). “வாருங்கள் , உங்களுக்கு யார் வேண்டும் ? என்று கேட்டதற்கு , “நான் ஜான் ,காப்பகத்தை வாங்கும் பொருட்டு ஜெனிபரிடம் பேச வந்துள்ளேன் “ என்றார் .ரோஸிக்கு மிகுந்த சந்தோசம் . மனதிற்குள் , “அப்பாடா , நல்ல படியா இந்த காப்பகத்தை விற்றுவிட்டு ,ஜெர்மனி செல்ல வேண்டும் .,” என்று நினைத்து கொண்டாள் .”உள்ளே அவரை அழைத்து சென்று பாட்டியை கூப்பிட்டாள் , படுத்துக்கொண்டிருந்த ஜெனிபரும் மெல்ல எழுந்து வந்து உட்கார்ந்தாள் . ஜான் “ஜெனிபிர் மேடம், உங்களுடைய காப்பகத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் , நீங்கள் இதை எப்பொழுது தொடங்கினீர்கள் ? என்று கேட்டார் . ஜெனிபர் அப்பொழுது தன் கணவர் தன்னை வரைந்த புகைப்படத்தை பார்த்து சொல்ல ஆரம்பித்தாள் .”சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, நானும் என் கணவரும்,இந்தியாவை சுற்றி பார்க்க வந்தோம் அப்பொழுது , நாங்கள் பாண்டிச்சேரிக்கு வந்தோம் , இந்த ஊரின் கடலோரத்தில் , என் கணவர் என்னை வரைந்து கொண்டிருந்தார் . வரைந்த என் படத்தை நான் ஆசையாக பார்த்துக்கொண்டிருக்கும் போது , ஒரு லாரி என்னை இடிக்க வந்தது , படக்கென்று என்னை 4, 5 குழந்தைகள் அவர்கள் பக்கம் இழுத்தனர் . நான் சுதாரித்த போது , அந்த குழந்தைகளுக்கு நன்றி சொன்னேன் , அவர்களுக்கு சற்று பணம் எடுத்துக்கொடுத்தேன் , அவர்கள் அதற்கு “அக்கா எங்களுக்கு பணம் வேண்டாம் , நாங்கள் படிக்க ஆசைப்படுகிறோம் , நீங்கள் ஏதாவது எங்களுக்கு உதவி புரிய வேண்டுமானால் , எங்களுக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுப்பீர்களா ? எங்களுக்கு என்று யாரும் கிடையாது ,இங்குள்ளவர்கள் , எங்கள் தோற்றத்தை பார்த்து தவறாக எண்ணுகிறார்கள் ,உங்களை பார்த்த 5 நிமிடத்தில் இந்து பேருதவியை கேட்பது தவறுதான் , ஆனால் நிறைய இடங்களுக்கு சென்று உதவி கேட்டு நொந்துவிட்டோம் .” என்றார்கள் . என் மனதிலோ “என்ன இந்த குழந்தைகள் , தனக்கு உண்ண உணவோ , ஆடையோ கேட்காமல் , படிப்பு வேண்டும் , அதுவும் தன் சம்பாத்தியத்தில் படிக்க வேலையும் கேட்கிறார்கள் ? என்று யோசித்தேன் . பிறகு அவர்களிடம் ,”என்னை இந்த விலாசத்தில் நாளை வந்து பாருங்கள் “ என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தோம் . அந்த குழந்தைகளும் அடுத்த நாள் காலை வந்தனர் , வந்த அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம் , நாங்கள் தங்கி இருந்த இடத்தை விலைக்கு’வாங்கி , அந்த இடத்தில் , “கருணை இல்லம் “ என்று பெயரிட்டு , அந்த குழந்தைகளை நாங்களே பார்த்துக்கொள்ள முன்வந்தோம் . அவர்களுக்கு அருகில் இருந்த பள்ளியில் இடம் வாங்கி கொடுத்து , புத்தாடைகள் , சாப்பிட உணவு என்று எல்லா வசதிகளையும் செய்தோம் . அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ,நான் ஏற்கனவே கருவுற்றியிருந்ததால் , திரும்ப எங்கள் நாட்டிற்கு (ஜெர்மனிக்கு) செல்ல விரும்பாமல் இந்த குழந்தைகளோடு எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம் .ஏனெனில் அவர்கள் காப்பாற்றவில்லை என்றால் , நானும் என் மகனும் அன்றே இறந்திருப்போம் .என்னால் முடிந்த சிறு பிரதி உபகாரம் “ என்றாள் . மற்றும் தொடர்ந்தாள் இதை இப்பொழுது பார்த்துக்கொள்ள என் மகன் உயிருடன் இல்லை , அவனது மகளோ பார்த்துக்கொள்ள விரும்பவில்லை , 5 குழந்தைகளுடன் ஆரம்பித்தது , இன்று 1000 குழந்தைகள் வரை சேர்ந்துள்ளனர் . அனைவருக்கும் கல்வி, உடை , உணவு என்று எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம் . இங்கிருந்து படித்த பிள்ளைகளும் நல்ல நிலைமையில் இன்று உள்ளனர் , அவர்களும் அவ்வப்போது கருணை இல்லத்திற்கு பணம் அனுப்புவார்கள் “ என்றாள் . இதை கேட்ட ஜான் “உங்கள் சேவை மனப்பான்மைக்கு என் பாராட்டுகள் , கவலை படாதீர்கள் , உங்களை போலவே , நானும் இந்த காப்பகத்தையும் குழந்தைகளையும் நன்கு பார்த்துக் கொள்கிறேன்” , என்றார்.அதற்குள் “கண்களை துடைத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்த ரோஸி “ஜான் சார் , கருணை இல்லத்தை விற்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டோம் , உங்கள் வருகைக்கு நன்றி , இனி நானே இதை பார்த்துக்கொள்கிறேன் “ என்றாள் . ஜெனிபர் புன்னகை கலந்த கண்ணீருடன் ரோஸிக்கு நன்றி கூறினாள்