மீ. விசுவநாதன்/”நனவான கனவு”



(அகவல்)

“நன்றாக அமைந்த நலமிக்க மனிதர்கள்
ஒன்றாகக் கூடி ஊர்வலம் வந்து
குருவையும் இறையையும் குறையிலா தென்றும்
அருமையாய் வணங்கும் அழகிய ஊராம்
கல்லிடைக் குறிச்சி கனவிலும் நனவிலும்
வில்லிடை பூட்டிய வெற்றி அம்பென
வந்து போவது வழக்க மானதே!
அந்த ஊரினில் எழுப்ப தாண்டுமுன்
நற்குடியில் வந்து நானும் பிறந்ததால்
அற்புத மானதோர் ஆயிரம் கனவுகள்
வண்ணப் பறவைபோல் மனவானில் பறந்து
எண்ணம் வலுப்பெற ஏது வானது;

ஏழு வயதிலே எங்கள் கிராமத்தில்
பாழும் மனத்தினைப் பக்குவப் படுத்தும்
ஆதி சங்கரர் அத்வைத வழிவந்த
நீதி நாயகர் நெஞ்சில் நிறைந்த
சிருங்கேரி சாரதா பீடத்தின் குருநாதர்
வருங்கோடி பக்தரின் வாட்டம் போக்குற
அபிநவ வித்யா தீர்த்தரின் விஜயம்
தவிக்கிற மனத்திற்குத் தாயுற வானது;

அந்த நாளில் அவரின் பாதம்
சொந்த மென்றே சொல்லி உபதேசம்
பெற்ற பக்தரின் பேற்றைக் கண்டு
சற்றே நானும் சடக்கென மனத்துள்
எனக்கும் ஒருநாள் இதுபோல் வாய்க்க
குருவே அருளென குழந்தை நானும்
கும்பிட்டுக் கொண்டேன்; கொஞ்சம் கொஞ்சமாய்
வம்பிலும் அன்பிலும் மாட்டிக் கொண்டுநான்
வாழ்க்கை என்னும் வண்டிப் பயணத்தில்
ஆழ்ந்து காமத்தில் அடிபட்டுக் கிடைக்கையில்
முப்பத்து நான்கில் முனிபாரதீ தீர்த்தரை
கப்பெனப் பிடிக்தேன் ; காரணம் அறியேன்!
குருவெனக் கொண்டேன்; குறையேது மில்லேன்;
என்தாயின் அறுபது, சிருங்கேரி சாரதை
முன்னே குருவின் கருணையால் நடந்தது;

ஆசி வழங்கிய அன்புக் குருமுன்னே
நாசியில் கைவைத்து ஞானோ பதேசம்
அளிக்க வேண்டினேன்; அன்று ஏகாதசி;
களித்திருபார் மனத்தில் கடவுளை மௌனமாய்!
சைகையில் சொன்னார் நாளை என்றே!
என்தாய் என்னிடம்,’ இப்படியா குருவிடம்
உன்னாசை சொல்வது? ஒருபடி இன்னும்
பணிவாய்க் கேட்க பக்குவப் படணும்
தணிக்க வேண்டும் கோபமும் வீணாசை
மோகமும் என்று முறையாய்ச் சொன்னாள்!”
மறுநாள் துவாதசி; துளசி கல்யாணம்;
அறுபது கண்ட அம்மா ஆசியால்
குருநாதர் எனக்குக் கொடுத்தார் மந்திரத்
திருவாக்கு; உபதேசம் பெற்றேன்; அந்தப்
பொழுது முதலே புதுமனிதன் ஆனேன்;
அழுது புலம்பும் அவலம் எனக்கில்லை;
குருவின் மந்திர உபதேச மேன்மையால்
கருமமாய்ச் செய்கிறேன் காரியங்கள் யாவுமே!
பெற்றோரும் மனைவியும் பிள்ளைகள் யாவரும்
உற்றோறாய் இருந்தாலும் உள்துணை யாரென்று
உட்தொட்டுச் சொன்ன உயர்குருவை மறப்பனோ!
பட்டுப் பாதங்கள் பணிவதைத் துறப்பனோ!
நனவான கனவென்றே இதைத்தான்
தினமும் நினைத்தே நெஞ்சால் தொழுவனே !”

       (31.01.2024 20.29 pm)

One Comment on “மீ. விசுவநாதன்/”நனவான கனவு””

  1. அப்பளம் மணக்கும் கல்லிடைக்குறிச்சியில்//
    ஆன்மிகம் மணக்கப்
    பிறந்த குழந்தையே!//
    என்னில் சற்றே
    இளைய தம்பியே!//
    விஸ்வ குருவின்
    விசுவா சத்தில்//
    விஸ்வம் எங்கும்
    விளங்குக நின் புகழ்!

Comments are closed.