நாகேந்திர பாரதி/என் மகன்

சிறுகதை மதிப்புரை

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே

எங்களது இந்தியன் வங்கி நண்பர், நடிப்பு, எழுத்து என்று இரண்டு துறையிலும் சாதனை படைத்தது வரும் கௌரி சங்கர் அவர்களின் சிறுகதை ‘ என் மகன் .. எளிமையான முறையில் எழுதப்பட்டுள்ள நல்ல கருத்துள்ள கதை. நமது நண்பர்கள் நால்வர் குழு ஆர்கே அவர்களின் ஆசிரியத் தலைமையில் வெளிவரும் பூபாளம் இதழில் வெளிவந்துள்ள சிறுகதை

முதலில் கதைச் சுருக்கம் .மகனை அயல்நாடு அனுப்பி வைத்து விட்டு அவனது பொறுப்பில்லாத குணத்தை நினைத்து வருந்தும் ஒரு அப்பா தனது நண்பருடன் சேர்ந்து ஒரு ஆட்டோவில் வேளச்சேரியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்திற்குப் போகும் பயணத்தில் நடக்கும் உரையாடல் தான் கதை . இவரது மகனையும் ஆட்டோக்காரன் மகனையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும் விதத்தில் நடக்கிறது அந்த உரையாடல்

அந்தப் பயணத்தில் ஆரம்பம் முதல் நாமும் சேர்ந்து ஆட்டோவில் பயணிக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்து விடுகிறார் ஆசிரியர். கடைசியில் ஒரு திருப்பம். அதை நோக்கிக் கொண்டு செல்லும் முறையில் சுவாரசியம் ஏற்படுத்துகிறார் ஆசிரியர்.

கதை ஆரம்பத்தில் ஆட்டோக்காரனிடம் இவர் ‘ வேளச்சேரி வருமாப்பா ‘ என்று கேட்க ‘ வேளச்சேரி இங்கே வராதுங்க, நாமதான் வேளச்சேரி போகணும் ‘ என்று ஆட்டோக்காரன் பதில் சொல்லும் நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது கதை. கதையைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதில் இந்த நகைச்சுவைத் தொடக்கம் நல்ல சிறுகதை யுக்தி

ஆட்டோக்காரன் தன் ஆட்டோவைத் ‘ தங்கராசு ‘ என்று அழைத்து பிரியமாகப் பேசிக்கொண்டு ஓட்டிச் செல்வதும் கதையைக் கலகலப்பாகக் கொண்டு செல்கிறது . ரஜினி படிக்காதவன் படத்தில் தனது டாக்ஸியை ‘லட்சுமி ‘ என்று பிரியமாக அழைக்கும் நகைச்சுவைக் காட்சியும் நினைவுக்கு வந்தது .

அந்த அதிகாலை நேரக் காட்சியையும் வருணனை மூலம். நம் கண்முன் கொண்டு வருகிறார் ஆசிரியர். . ‘எல் ஈ டி விளக்குகள் கீழே பாய்ச்சிய ஒளியில் , ஊருக்கே சாம்பிராணி புகை போட்டது போல் இலேசாகப் பனி படர்ந்து சாலை முழுவதும் மூடி இருந்தது ‘ நமக்கும் அந்தக் காலை நேரம் நம் கண் முன் தெரிகிறது .

நடுவில் ஆட்டோகாரனின் ஆங்கிலப் பேச்சை நியாயப் படுத்தும் விதத்தில் அவனது பள்ளிப் பருவ வாழ்வையும் அவன் மூலம் விளக்க வைத்து , வாழ்க்கை எப்படி பலருக்குத் திசை மாறிப் போகிறது என்பதையும் காட்டுகிறார் ஆசிரியர்.

இப்போது நாயகன் தனது நண்பனிடம் அயல்நாடு சென்றுவிட்ட மகனின் குண நலன்களைச் சொல்லுமபோது , பல குடும்பங்களில் நடக்கின்ற இது போன்ற வேதனைக் காட்சிகளை நினைவு படுத்துகிறார் ஆசிரியர்.

அமெரிக்கப் பெண்ணைக் கலயாணம் செய்து கொள்ளப் போகும் அவரது மகன் தனது குடும்பத்தின் நிலை பற்றிக் கவலைப் படாமல் நடந்து கொள்ளும் விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார் நாயகன் .

அதே சமயம் ஆட்டோ ட்ரைவர் தனது மகனைப் பற்றிப் பெருமையாகப் பேசும் விஷயங்கள் , வாழ்வின் பல்வேறு பக்கங்களை நமக்குத் தெரிவிக் கின்றன. அவன் தன் மகனுக்காக வாங்கிய கடனை மகனே உழைத்து அடைத்து விட்டதையும், தங்கைகளுக்குத் திருமணச் செலவு, படிப்புச் செலவு போன்றவற்றையும் அவன் உழைப்பின் மூலமே நடப்பதையும் தெரிவிக்கத் தெரிவிக்க அவன் மகன் மேல் ஒரு மரியாதையே உண்டாகி விடுகிறது அவர்களுக்கும், ஏன் , நமக்குத்தான்.

இரண்டு மகன்களையும் பொருத்திப் பார்த்து , பல குடும்பங்களில் இது போன்று மாறுபட்ட குணாதிசயங்களோடு மகன்கள் இருப்பதை உணர்த்திப் போகிறார் ஆசிரியர்.

இறுதியில் அந்த ஆட்டோக்காரன் தன் , மகனாக நினைப்பது அவனது ஆட்டோவைதான் என்பதும் அந்த ஆட்டோ ஓடிக் கிடைக்கும் வருமானத்தில் தான் அத்தனையும் நடந்தது என்பதும் நமக்குத் தெரிய வருவது நல்ல திருப்பம். அந்த ஆட்டோ ட்ரைவர் பேசிய வசனங்கள் எல்லாம் உயிருள்ள மகனுக்கும் உயிரற்ற ஆட்டோவுக்கும் பொருந்துவதை நாம் திரும்பிப் படித்துப் பார்த்து ஆசிரியரின் திறமையை வியந்து கொள்ளலாம்.

சின்னக் கதை. அதன் மூலம், மகன் பாசம், உழைப்பின் உயர்வு, பெற்றோரின் கஷ்டம், என்று பல விஷயங்களை , கலகலப்பாகவும் சிறப்பான வருணனைகள், உரையாடல்கள் இவற்றோடு ஒரு திருப்பமும் கொடுத்து , அழகான சிறுகதையாக நமக்குக் கொடுத்துள்ள கௌரி சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தன் கையே தனக்குதவி என்று இருக்கும் அந்த ஆட்டோக்கார அப்பா ஒரு பக்கம், என்னதான் மகனின் குணநலன் பற்றி வருத்தம் ஏற்பட்டாலும் , மகனுக்குச் செய்த கடமைக்கு பலனை எதிர்பார்த்து ஏமாந்து அங்கலாய்க்கும் நாயகன் அப்பா ஒருபக்கம் என்று இரண்டு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தி நம்மைப் பலவிதங்களில் சிந்திக்க வைக்கிறார் எழுத்தாளர் கௌரிசங்கர் . இரண்டு அப்பாக்களின் குண நலன்களைப் பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர் . கௌரி சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள் .அழகியசிங்கருக்கு நன்றி . வணக்கம்.

————

One Comment on “நாகேந்திர பாரதி/என் மகன்”

  1. ஆட்டோவையே மகனாகப் பார்க்கும் பாச உணர்வு புதுமையான முறையில் கௌரி சங்கர் எழுத்தில் வெளிப்படுகிறது.
    இக்கதைக்கு நாகேந்திர பாரதியின் விமர்சனம் கனம் சேர்க்கிறது!

Comments are closed.