மீனாக்ஷி பாலகணேஷ்/கேட்கப்படாத கேள்விகள்


இடிவிழுந்ததுபோல விக்கித்துப் பேச்சற்று நின்றுவிட்டேன். சித்தப்பா பெண்
ஜலஜாவுடனான என் பேச்சு அன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அப்படி
என்னதான் ஆகிவிட்டது?
அப்பாவைக் கூடத்தில் கிடத்தியிருந்தோம். முற்றிய கல்லீரல் புற்றுநோயின்
ஆட்டத்திலும், அது கொடுத்த வலியிலும், பக்கவிளைவுகளிலும் அலைக்கழிக்கப்பட்டு
இரண்டு மாதங்களாக, “எப்போதம்மா இந்தத் துன்பம் முடிவு பெறும். எப்போது எனக்கு
விடுதலை?” என முணுமுணுக்கும் அப்பாவின் பேச்சைக்கேட்டு நாங்கள் அனைவருமே
துடிதுடிப்போம். அதற்கெல்லாம் விடிவாக இப்போது அப்பா விடுதலையாகி
விண்வெளிக்குப் பறந்து விட்டார்.
சொந்த பந்தங்கள் வரிசையாக வந்து கூடிக் கொண்டிருந்தார்கள்.
அப்பாதான் வீட்டிற்குப் பெரியவர். பெரீப்பா, பெர்யப்பா என்றெல்லாம்
சித்தப்பாக்களின் பிள்ளைகளும் பெண்களும் அவர்மீது காட்டின மரியாதையும் பாசமும்
உலகப் பிரசித்தம்.
அவரும் லேசுப்பட்டவரா? நான் விரும்பியவருக்கே என்னை மணமுடித்து
வைத்தார். அந்த தைரியத்தில் முதல் சித்தப்பாவின் மகன், டாக்டருக்குப் படித்தவன்,
கூடப்படித்த மலையாளிப் பெண்ணை மணக்க விரும்பினபோது அவர்கள் வீட்டில்
பூகம்பம் வெடித்தது. அந்தச் சித்தி ஆசாரமானவள். அப்பாதான் தலையிட்டு, “சொந்த
வாழ்வில் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் தங்கள் பொதுவாழ்வில் சாதனை
படைத்து வெற்றியடைய முடியும்,” என எடுத்துச் சொல்லி திருமணத்தையும் நடத்தி
வைத்தார்.
அந்தச் சித்தப்பாவின் பெண்தான் ஜலஜா. அம்மாவின் விருப்பப்படியே, ஒரு
ஆசாரமான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள். இப்போது அடுத்தபெண் வனஜாவுக்குக்
கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. ஜலஜாவும் சித்தியும் பார்த்துப் பார்த்துத் தேடிய
வரன். மாப்பிள்ளை லண்டனில் பெரிய வங்கியில் பெரிய பொஸிஷனில் இருக்கிறார்.
முகூர்த்தம் வைத்தாகி விட்டது. இன்றைக்கு முப்பதாம் நாள் சென்னையில் தடபுடலாகத்
திருமணம்.
அதற்குள் அப்பா இப்படி! அப்பாவிற்கு நான் ஒரே பெண். யார் இறுதிச்
சடங்குகளைச் செய்வது? பெரிய சித்தப்பா முன்வந்தார். எல்லாம் தயாராகிக்
கொண்டிருந்தது. சாஸ்திரிகள் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார். ஈர வேஷ்டியுடன்
சித்தப்பா சிரத்தையாகத் தன் அண்ணாவை வழியனுப்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.

சின்ன சித்தப்பா ரங்கு பிரமை பிடித்ததுபோலக் கலங்கிப் போய் விட்டிருந்தார்.
அவருக்குப் பெரியண்ணா தான் எல்லாம். சுமாரான வேலையிலிருந்த அவரால் தன்
மகனைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க முடியவில்லை. அப்பாதான் அந்த
புத்திசாலிப் பையனை ஆராய்ச்சிப் படிப்புவரை படிக்கவைத்து இன்று அவன் ஜர்மனியில்
இருக்கிறான். தன் பெண்ணின் திருமணத்திற்கும் அண்ணாவையே நம்பியிருந்தார் ரங்கு
சித்தப்பா. எல்லாம் ஆனபிறகு அவரிடம், “நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு உதவ,”
என்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அப்பா ஒரு பெரிய
தொகையை இதற்காக டெபாசிட்டாகப் போட்டு வைத்திருந்தது எனக்கும் அம்மாவுக்கும்
மட்டுமே தெரிந்த சமாசாரம்.
“கல்பா, இதோ பார். அப்பாவோட ஆத்ம நண்பர் ராமநாதன் மாமா
அஹமதாபாதிலிருந்து செய்தி கேட்டு ஓடி வந்திருக்கார்,” என ரங்கு சித்தப்பா அழைத்தார்.
ராமநாதன் மாமாவும் அப்பாவும் சேர்ந்தே ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். இருவர்
குடும்பங்களும் மிக நெருக்கம். அவருக்கும் ஒரேபெண், சாந்தி என்று பெயர். திருமணமாகி
அமெரிக்காவிலிருக்கிறாள். மாமி இரண்டாண்டுகளுக்கு முன்பு மாரடைப்பில் காலமாகி
விட்டார்.
மொத்தக் குடும்பத்துக்கும் அவரைத் தெரியுமாதலால் எல்லாரும் அவரைச் சூழ்ந்து
கொண்டார்கள்.
“அப்பா நாலைந்து மாதமா ரொம்பவே கஷ்டப்பட்டார், மாமா,” என்று
சொல்வதற்குள் என் கண்கள் பொங்கி விட்டன. பரிவோடு என் தலையை வருடியவர்,
“கல்பா, கவலைப்படாதே, நான் இருக்கேன்மா உனக்கு இனிமேல் தகப்பனா,” என்றார்
அவர்.
பேச்சு எங்கெல்லாமோ சென்று கடைசியில், “யார் காரியம் பண்ணப்போறா? நான்
வேணாப் பண்ணட்டுமா?” என்றார் ராமநாதன் மாமா. சித்தியின் காதுகளில் இது தேனாக
விழுந்ததோ? பெண்ணுக்குக் கல்யாணமாயிற்றே? பெண்ணின் அப்பா இதையெல்லாம்
செய்யலாமா என உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள் அவள். கணவர் சரி என்று
சொல்வாரா என ஏங்கினாள் போலும்!
அப்போதுதான் ஜலஜா சம்பந்தமேயில்லாமல் உரக்க இதனைச் சொன்னாள்.
“ஆமாம் மாமா. பெரியப்பா கிடந்ததுதான் கிடந்தார். இன்னும் ஒரு மாசம்கூட இருந்து
வனஜாவின் கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போயிருக்கலாம் அல்லவா?” எல்லாரும் ஒரு
நிமிஷம் பேசக்கூடத் தெம்பின்றி அவளையே வெறித்தோம்.
‘பார்த்துட்டுப் போயிருக்கலாம்’ – எத்தகைய கொடூரமான சொற்கள் இவை?
அதிர்ந்து போன ராமநாதன் மாமா கணப்பொழுதில் சுதாரித்துக் கொண்டுவிட்டார்.
மூண்டெழுந்த என் கோபம் என்னை ஊமையாக்கி விட்டது. ராமநாதன் மாமா என்
கையைப் பிடித்து அழுத்தி கண்ஜாடையில் என்னை சமாதானம் செய்தார்.
அன்றிலிருந்து நான் ஜலஜாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்.

ஏனென்று புரிந்ததா? நான் அவளிடம் கூறாதவை, கேட்காதவை இவை:
“நேரம் வந்ததால் அவர், அப்பா – போய்விட்டார். அவர் பட்ட கஷ்டத்தைப்
பார்த்துக்கொண்டுதான் இருந்தாயே, இன்னும் ஒரு மாதம் அவர் துடிதுடிக்க
வேண்டுமென்று ஏன் நினைத்தாய்? உன் தங்கையின் திருமணம் தான் உங்களுக்கு
முக்கியமாகப் போய்விட்டதா? உங்களை எல்லாம் அன்பினால் அரவணைத்த
பெரியப்பாவின் நிம்மதி பெரிதாகத் தோன்றவில்லையா?”

சில கேள்விகளைக் கேட்க முடியாது அல்லவா?

One Comment on “மீனாக்ஷி பாலகணேஷ்/கேட்கப்படாத கேள்விகள்”

Comments are closed.