மீ. விசுவநாதன்/அப்பாவின் வாசனை


அப்பா என்றே அழைக்கும் குரலில்
எப்போ துமொரு இன்பம் உண்டு !.
பிறந்த முதலே பிரிய மான
சிறந்த உயிராய்ச் சேர்த்துக் கொண்டவர்
கைபிடித் தென்னை கடைக்கு, ஆறு,
மெய்வழிக் கோவில், மேற்கு மலைத்தொடர்
எல்லா இடமும் எனக்குக் காட்டிய
நல்லார் அப்பா நான்பெற்ற செல்வம்!
சொற்ப சம்பளம்! சூதிலா வாழ்க்கை !
பெற்றவர் முதுமை பேணிக் காத்தவர் !
பொய்யிலா அன்பால் பொழுதெலாம் பேசி
தொய்வே இலாத உறவில் களித்தவர் !
நடராஜன் வாத்தியார் சைக்கிளில் வந்து
மடமட வென்று சாப்ப்பிடும் முன்னே
வரங்கிடைத் ததுபோல் வாரிக் குதித்துநான்
குரங்குப் பெடல் போட்டுத் தெருவை
வலம்வந்த நாட்கள் வாரா தினிமேல்!
சம்பளம் வாங்கி வந்த அன்று
அம்மா அப்பா இருவரிடம் தந்து
வணங்கி ஆசி வாங்கிக் கொள்வார் !
இணங்கி வாழும் இயல்பை எமக்கு
இளமையில் கற்க இனிய வழிசெய்தார்!
என்னைக் கடிந்து பேசாத் தந்தையை
அன்னையின் முன்னே அதட்டிப் பேசிக்
கோபத்தில் வார்த்தைக் குழம்பை வீசினேன்!
சாபமோ கோபமோ சற்றும் தராமல்
அன்பு கனிய அமைதி காத்த
என்அப்பா முகந்தான் இன்றும் இதயத்தில்
ஆழப் பதிந்தே ஆறுதல் தந்தாலும்
வாழப் பழக்கிய மகத்தான அப்பாவின்
குணத்தில் சின்னக் குந்துமணி
மணக்க இன்னும் எத்தனை சன்மமோ?
(19.06.2022 19.31 pm)

. விசுவநாதன்)


அப்பா என்றே அழைக்கும் குரலில்
எப்போ துமொரு இன்பம் உண்டு !.
பிறந்த முதலே பிரிய மான
சிறந்த உயிராய்ச் சேர்த்துக் கொண்டவர்
கைபிடித் தென்னை கடைக்கு, ஆறு,
மெய்வழிக் கோவில், மேற்கு மலைத்தொடர்
எல்லா இடமும் எனக்குக் காட்டிய
நல்லார் அப்பா நான்பெற்ற செல்வம்!
சொற்ப சம்பளம்! சூதிலா வாழ்க்கை !
பெற்றவர் முதுமை பேணிக் காத்தவர் !
பொய்யிலா அன்பால் பொழுதெலாம் பேசி
தொய்வே இலாத உறவில் களித்தவர் !
நடராஜன் வாத்தியார் சைக்கிளில் வந்து
மடமட வென்று சாப்ப்பிடும் முன்னே
வரங்கிடைத் ததுபோல் வாரிக் குதித்துநான்
குரங்குப் பெடல் போட்டுத் தெருவை
வலம்வந்த நாட்கள் வாரா தினிமேல்!
சம்பளம் வாங்கி வந்த அன்று
அம்மா அப்பா இருவரிடம் தந்து
வணங்கி ஆசி வாங்கிக் கொள்வார் !
இணங்கி வாழும் இயல்பை எமக்கு
இளமையில் கற்க இனிய வழிசெய்தார்!
என்னைக் கடிந்து பேசாத் தந்தையை
அன்னையின் முன்னே அதட்டிப் பேசிக்
கோபத்தில் வார்த்தைக் குழம்பை வீசினேன்!
சாபமோ கோபமோ சற்றும் தராமல்
அன்பு கனிய அமைதி காத்த
என்அப்பா முகந்தான் இன்றும் இதயத்தில்
ஆழப் பதிந்தே ஆறுதல் தந்தாலும்
வாழப் பழக்கிய மகத்தான அப்பாவின்
குணத்தில் சின்னக் குந்துமணி
மணக்க இன்னும் எத்தனை சன்மமோ?
(19.06.2022 19.31 pm)