மீனாட்சி சுந்தரமூர்த்தி/மஞ்சள் மாலையில்

06.02.24.
மாலை நேரம்.5. 50.

மஞ்சள் மாலையில் மாலை வெயில்
குளிர்
காற்றோடு கதை பேச,
சீரான
புல்வெளியில் தேன்சிட்டு
ஒன்று
பட்டாம் பூச்சியைத்
துரத்தும்.

கோப்பைத் தேனீர்
அருந்தியபடி
விழிவிரிய
மேல்மாடி முற்றத்தில்
நான்.

வெள்ளைத் திரையில் கருமேகத்
தூரிகையால்
வடிவங்கள் தீட்டிய
வானவனை,

அலுங்காமல்,
குலுங்காமல்
பச்சை வண்ணப்
பட்டு
கட்டிப் பார்த்திருந்தாள்
நிலமகள்.

கான்கிரீட் வீடுகள் போல்
தெரியுமிவை
மரத்தால் கட்டியவைதான்.

சீரான நடைபாதைத் துணை
வரும்
சாலைகளில் ஒலிப்பான்
தொடாமல்
இயங்கும் மகிழுந்துகள்.

பனிபொழியும் குளிர்காலம்
வாயிலில்
காத்திருக்கும் வேனிற்
பருவமிது.

வளர்ப்பு நாயோடு நடைபயின்ற
மனிதர்.
அது புல்வெளியி்ல் கழித்த
இயற்கை உபாதையைக்
கையொடு
வைத்திருந்த ஞெகிழிப் பையில்
எடுத்தார்.

எப்போதும் கோலமிட்ட வாசலில்
நாயை
அசிங்கப் படுத்த அவிழ்த்து
விடும்
பக்கத்து வீட்டினரின்
நினைவு
அந்நிய தேசமதில் என் நினைவில்
ஆடியது.