மீ. விசுவநாதன்/கருணைக் கடலாம் ஈசன்

தும்பிக் கையான் அப்பன் – நம்
துயர்கள் தீர்க்கும் நேசன்
நம்பித் தொழுதால் உள்ளே – உடன்
நலமே பொழியும் ஈசன்

கண்ணில் ஒன்றைத் தந்த – மனம்
கசிந்த பக்தன் தன்னை
கண்ணாய்க் கொண்ட நேசன் – அவன்
கருணைக் கடலாம் ஈசன்

ஆதி அந்தம் இல்லான் – உடல்
அந்தி வானம் போலான்
பாதி மேனி தந்தே – உமை
பாகன் ஆன ஈசன்

ஓதும் ஒலியில் உள்ளான் – கதிர்
ஒளியில் பொன்னன் ஆவான்
பாதம் ஒன்றைத் தூக்கி – நடம்
பண்ணும் ராஜன் ஈசன்

உலக மெங்கும் உள்ள – ஜீவ
உயிரின் துடிப்பே ஈசன்
சுலப மான முக்தி – சிவ
சுருதி சேர்ந்த பக்தி.

(இன்று பிரதோஷ நன்னாள் – 07.02.2024 )