செல்லம்மா பாரதி/புதுவையில் யதேச்சாதிகாரம்

பாரதியார் சரித்திரம்

அரசாங்கத்தாரின் அடக்குமுறை தமிழ்நாட்டில் இளைஞர்களின் மனத்தைத் திடப்படுத்தி வைராக்கியத்தை யும் சகிப்புத் தன்மையையும் அளித்தது. அதனால் அவர்கள் பின்னால் ஸாத்விகப் போருக்குத் தயாராக முடிந்தது. கிராமத்து மக்கள் ‘சுதேசி’ என்றால் நடுங்க ஆரம்பித்தனர். மக்கள் மனம் கிலி பிடித்ததுபோல் ஆகிவிட்டது. என் தாயைக்கூட இரு போலீஸார் பின் தொடர்ந்தனர்.
நான் கடையம் சென்றிருந்த காலத்தில் ஒருநாள் பாரதியார் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அடுத்த வீட்டு வழியாக உளவுப் போலீசார் உள்ளே நுழைந்து கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றனர். பாரதியார் வெளியிலிருந்து திரும்பி வந்ததும் எல்லாச் சாமான்களும் அலங்கோலமாக வாரி இறைக்கப் பட்டிருப்பதைக் கண்டார். முக்கியமான கடிதங்களில் சில காணப்படவில்லை. ஐயோ! அப்போது அவரது மனம் பட்டபாடு சொல்ல முடியாது. தூண்டில் மீனைப் போல் துடித்தார்! “என்ன அநியாயம்! தனி மனிதனைத் துன்புறுத்துதல் ஒரு பெரிய வெற்றியா? பெரிய இத்தனை ஸாம்ராஜ்யத்தைக்கட்டி ஆள்பவர்கட்டு இது கேவலம் என்று தெரியாது போய்விட்டதே! பிரஜைகள் ஒருவருக்கொருவர் தொந்திரவு படுத்திக் கொள்ளாமல் பாதுகாக்கவும்,திருடர்களைப் பிடித்து அடக்கவுமல்லவா போலீஸ் இலாகா ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது? ஒரு மனிதன் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அதுவும் எவ்வித முன்னறிவிப்புமின்றி, அவன் வீட்டில் போலீசார் நுழைவது எத்தனை அநீதமானது! நன்று நன்று!” என்று கோபச் சிரிப்புச் சிரிப்பார். இத்தனை முயற்சி செய்தும் எங்களுக்கு விரோதமான குறிப்பு ஒன்றும் போலீசாருக்கு அகப்படவில்லை.
மறுபடியும் நான் புதுவை சென்றதும் வாழ்க்கையை நடத்துவதே பெரும் போராட்டமாக ஆகிவிட்டது. ஒருநாள் கடத்துவது ஒரு யுகம்போலத்தான். சுதேசிகளை எப்படியேனும் பிரெஞ்சு எல்லையினின்றும் பிரிட்டிஷ் எல்லைக்குக் கொண்டுவர வேண்டுமென்று பெருமுயற்சி நடந்தது. அதை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டுமென்று பலர் முன்வந்தனர்.
பந்துக்களிலே கூடச் சிலர் பாரதியாரை வெளிக் கொணரும் பழிச்செய சயலுக்கு ஆளாயினர். எங்கள் பத்திரிகைகள் யாவும் நிறுத்தப்பட்டு விட்டன. கடிதங்களை எல்லாம் தணிக்கை செய்து அளிக்காமலே வைத்துக் கொண்டுவிடுவார்கள். மணியார்டர்களுக்குக்கூட அதே கதிதான். கூபனிலுள்ள விலாசங்களைப் பார்த்துப் பணம் அனுப்பும் நண்பர்களையும் போய்ப் பயமுறுத்தினார்கள். பலரைக் கைதும் செய்தார்கள். பணம் வருவது தடைப்பட்டது. பந்துக்களிடமிருந்து கடிதந்தான் கிடையாது என்றால், அவர்கள் எல்லோரையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டினார்கள். ‘இம்’ என்றால் சிறைவாசம். ‘வந்தே மாதரம்’ என்றவர்களின் குடும்பம் ‘அரோஹரா!’

One Comment on “செல்லம்மா பாரதி/புதுவையில் யதேச்சாதிகாரம்”

Comments are closed.