செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

  1. தேர்தல் அமளி

அந்தச் சமயம் புதுவையில் தேர்தல் ஆரம்பமாயிற்று. அக்கிரமங்கள் வரம்பு மீறின. வீட்டை உடைத்து உட்புகுந்து ஸ்திரீகளைக் கற்பழிக்கும் கொடூரச் செயல்களைச் செய்தால் கூட அரசாங்கத்தில் அந்தச் சமயம் கேள்வி முறையே இராது. குழாய்த் தண்ணீர் வெளியில் கொண்டுவர வேண்டும். பாவிகள் என்ன செய்து விடுவார்களோ என்ற பயத்துடன் நான் போவேன்.
இந்திராணியும் இந்திரனும் ஸ்வர்க்க லோகத்தில் சூரபத்மாசுரனின் கொடுமையைத் தாளாமல், பூவுலகத்தில் சீர்காழியில் வந்து தோட்டம் வைத்துப் புஷ்பங்களைப் பயிரிட்டுப் பகவான் கைலாசபதியை வணங்கிக் கொண்டிருக்கும் சமயம், அவுணர்கள் அதையறிந்து அங்கும் வரலாயினர். இந்திரன் இந்திராணிக்கு ஐயனாரைக் காவல் வைத்துத் தான் மட்டும் மேருமலைச் சாரலுக்குத் தவம் புரியச் சென்ற தருணத்தில் அஜமுகி என்னும் அரக்கி வந்து இந்திராணியைத் துன்புறுத்தவும் ஐயனாரின் பிரதிநிதியான
மஹாகாளர் அவளை அடித்துத் துரத்தினாராம். இந்தக் கதையை கந்தபுராணத்தில் வாசித்திருக்கின்றோம்.
ஐயனாரைப் போல எனக்கு, கிழவி அம்மாக்கண்ணு காவலாக இருந்தாள். ஒருநாள் இரவு பாரதியார் வெளியில் சென்றார். செல்லும் சமயத்தில், “அம்மாக்கண்ணு! செல்லம்மா பத்திரம்” என்று தமாஷாகச் சொல்லிச் சென்றார். நான் படுக்கும் அறை வாசற்புறமுள்ளது. அதன் வாயிற்படியில் தலைவைத்து வெளியில் படுத்திருப்பாள் கிழவி.
இரவு பன்னிரண்டு மணிக்குப் பாரதியார் வந்து ஒருநாள் கதவைத் தட்டினார். அந்தக் கிழவிக்கு நல்லதூக்கம். அவளை எழுப்புவானேன் என்று நானே கதவைத் திறக்க எழுந்து வந்தேன். திடீரெனக் காலடிச் சத்தம் கேட்டுவிட்டு, “ஐயோ! யாரோ வந்துவிட்டார்களே அம்மா” என்று கூக்குரலிட்டுக் கொண்டு எனது அறையில் நுழைய வந்த பாரதியாரை வாயிலில் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வரவிடாமல் மறித்தாள். பாரதியார், “நான்தான்” என்று உரக்கக் கத்தின பின்னரே அவள் அவரை உள்ளே போசு அனுமதித்தாள். பாரதியார் அப்போது அவளது அன்பின் ஆழத்தை வியந்து புகழ்ந்தார்.
அரசாங்கத்தில் கேள்வி முறையில்லாமல் இருந்தால் ஜனங்கள் பலவிதப் பயங்கர வதந்திகளைக் கிளறி விடுவது சகஜம். ஒருநாள் “சுதேசிகளைப் பிரிட்டிஷ் எல்லைக்குப் பிடித்துப் போய் விட்டார்கள்” என்று சமாசாரத்தை யாரோ சொன்னார்கள். நாங்கள் அதனை உண்மை என்று நினைத்துக் கதி கலங்கிப் போய் அம்மாக்கண்ணுவை அனுப்பி விசாரித்து வரச் செய்தோம். அவள் வருமுன்பாகவே திரிமூர்த்திகளும் ஏககாலத்தில் காட்சியளிப்பதுபோல, பாரதி, ஐயர், ஸ்ரீநிவாஸாச்சாரியார் மூவரும் வந்து சேர்ந்தார்கள். விஷயத்தைச் சொன்னதும், இடி இடியென்று நகைத்து, “இதற்காக உங்களுக்கு இவ்வளவு கலக்கம்?” என்று உரைத்தார்கள். அது அவர்களுடைய சுபாவம்!
மூவர்களும் சேர்ந்து யோசித்து, “தேர்தல் முடியும்வரை, இரவில் பெண்கள் எல்லோரும் இவ்வூர்ப் பிரமுகரும் சுதேசி அன்பருமான ஸ்ரீ பொன்னு முருகேசம்பிள்ளை அவர்கள் வீட்டிலும், புருஷர்கள் பாபு அரவிந்த கோஷ் வீட்டிலும் படுத்துக் கொள்வது” என்று தீர்மானித்தனர். அவ்விதமே நடந்து வந்தது. ஏனென்றால் நல்லதோ, கெட்டதோ எல்லோரும் சேர்ந்து அனுபவிக்க வேண்டுமென்பது நோக்கம். இரவில் இரண்டொருமுறை மூவர்களும் வந்து, “ஜாக்கிரதையாய் இருங்கள்!” என்று எச்சரித்துவிட்டுச் செல்வார்கள். தாங்கள் அப்பொழுதுதான் சற்றுக் கண்ணயர்ந்திருப்போம். ” பாக்கியம்! எழுந்திரு!” என்று ஐயர் தம் மனைவியை அழைப்பார். உடனே, என்ன ஆபத்தோ என்று எல்லோரும் சுருட்டி வாரிக்கொண்டு எழுந்திருப்போம்; “ஒன்றுமில்லை; பயப்படாதேயுங்கள்” என்பார்.
“ஐயரே, தூங்குகிறவர்களை எழுப்பி அத்தாளம் இல்லை என்கிறீரே!” என்று பாரதியார் கேலி செய்வார். இப்படியாக, ஒருநாள் செல்வதற்குள் இத்தனை கஷ்டங்கள். அதிலேயும் பாரதியார் மனம் சலிப்பது இல்லை.

செல்லம்மா பாரதி/புதுவையில் யதேச்சாதிகாரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்”

Comments are closed.