செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

  1. பயங்கரச் சம்பவமும் தீரச்செயலும்

ஸ்ரீ பாக்கியலக்ஷ்மி அம்மாள் (ஸ்ரீ.வ.வே.ஸு ஐயரின் மனைவி) நல்ல தைரியம் வாய்ந்தவர். வீரப் பெண்மணி, பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட ஸகிக்க முடியாத கஷ்டங்களையும் பொறுமையுடன் அனுபவித்து வருவதற்காகவே இயற்கை அவருக்கு அவ்வளவு மனோதிடத்தை அருளியது போலும்.

தேர்தல் சமயம், ஒருநாள் நள்ளிரவு நேரம். அமாவாசைக்கு முந்தின நாளாதலால் வெளியில் ஒரே மையிருட்டு; அருகில் யாரேனும் நின்றிருந்தால் கூடக் கண்ணுக்குத் தெரியாது.
அப்போது பாபநாசம் அருவிக்கு இரையான சுபத்ரா (ஐயருடைய அருமைக் குழந்தை) பிறந்து 25 நாட்கள் இருக்கலாம். உதவிக்கு ஒரு வேலைக்காரி மட்டும் இருந்தாள். திடீரென்று வாசலில் ஒரே இரைச்சல் கேட்டது. ஒரு கூட்டத்தார், சுமார் 100 பேர்கள் இருக்கலாம், வரும் சத்தங் கேட்டது. தூளி எழும்பியது. ‘கூகூ’ என்று கத்திக் கொண்டு, ஒரு பர்லாங் தூரம் சாராய நாற்றம் அடிக்க நன்றாகக் குடித்து விட்டு, அந்த வெறியில் வாய்க்கு வந்தவிதம் பிதற்றலாயினர்.
ஐயர் வீட்டுக் கதவையே தட்டினர்; “யாரது?” என்று தர்ஜித்தார் ஸ்ரீமதி.
“ஐயர் எங்கே? கதவைத் திற!” என்று கத்தினார்கள்.
“ஐயர் இல்லை” என்று பதிலளித்தார் தைரிய லக்ஷ்மி.
“அப்படியானால் மரியாதையோடு கதவைத் திற. இல்லா விட்டால் உள்ளே வந்துவிடுவோம்” என்றனர் கூட்டத்தார். அந்தச் சமயம் ஐயரும் உள்ளேதான் இருந்தார். ஸதிபதிகளின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை வாசகர்களே ஊடுத்துக் கொள்ளவேண்டும். யோசிப்பதற்கோ நேரமில்லை. நிலைமையோ நெருக்கடியாய் இருந்தது.
மேலே கூறியபடி தேர்தல் சமயமாதலால் கேள்வி முறையில்லாத போக்கு. அதைக் காரணமாகக் கொண்டு அநியாயமே நிலைத்து வந்தது. ஒரு துணிகரமான காரியம் ஏதாவது செய்தால் மாத்திரமே இந்த விபத்திலிருந்து தப்ப முடியும். என்ன செய்வது? வாசற்படிக் கதவைப் பிளக்கிறார்கள் போக்கிரிகள். ஐயர் வீட்டிலிருந்து மூன்றாம் வீடு நண்பர் ஆறுமுகம் செட்டியாரது. ஆனால் அங்கே போவது எப்படி? தவிரக் காலத்திற்குத் தக்கபடி மிகவும் பந்தோபஸ்தாக அனேக பூட்டுகள்போட்டு வைத்திருந்தார் செட்டியார்.
ஐயர் வீட்டு முற்றத்தில் ஒரு மாதுளை மரமுண்டு. அதன் வழியாக மொட்டை மாடியில் ஏற வேண்டும். 25 தினங்கள் குழிந்த பச்சைக் குழந்தை வேறு; ஏணி, நாற்காலி ஒன்றும் அகப்படவில்லை. மனத்தில் பயமும் நடுக்கமும் ஏற்பட்டன
முன்னால் சிரமப்பட்டுக் கொண்டு ஐயர் மாடியில் ஏறிக் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டார். ஒரு கால் மாதுளை மரத்திலும், மற்றொரு கால் மாடியிலுமாக வைத்துக் கொண்டு குழந்தையை மாதுளை மரத்தோடு சேர்த்து ஒரு கரத்தினால் அணைத்துக் கொண்டார். குழந்தையை முட்கள் கிழித்தன. வேஷ்டியைப் பிடித்திழுத்தன கொம்புகள். மற்றொரு கையினால் மனைவி பராசக்தியை மனத்தில் தியானித்துக் கொண்டு ஜிவ்வென்று ஐயரது கரத்தைப் பற்றிக் கொண்டு மாடியில் தாவி ஏறினார். முற்றத்திலிருந்து மாடி சுமார் பத்தடி உயரம் இருக்கும். இவ்வளவும் மையிருட்டில், உடைப்பட்ட ஹிருதயத்தோடு செய்வதானால், என்ன பரிதாபநிலை!
இன்னும் இரண்டு மாடிகளைக் கடந்து நண்பர் ஆறுமுகச் செட்டியார் வீட்டில் மனைவியை விட்டு விட்டுத்தான் திரும்பித் தமது வீடு வந்து சேர்ந்தார். இதற்குள் எங்களுக்குச் சமாசாரம் எட்டிவிட்டது.
‘மனத்திற்கு மனமே சாக்ஷி’ என்பதுபோல் ஐயர். துன்பப்படுவது பாரதியாருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. நாங்கள் அப்போது கிருஷ்ணகான சபையில் வாசம் செய்து வரலானோம். ஆனால் இரவு அங்கே தங்குவதில்லை. மத்தியானம் சமையல் செய்து உணவருந்திவிட்டு இரவு போஜனத்தையும் மாலை ஆறு மணிக்கு முடித்துக் கொண்டு ஸ்ரீ பொன்னுமுருகேசம் பிள்ளை வீட்டில் முன் கூறியபடி இரவைக் கழிப்போம். எங்களுக்கென்று தனிவீடு வைத்துக் கொள்ளவில்லை. நான் இல்லாத சமயத்தில் போலீசார் கடிதங்கள் முதலியனவற்றை எடுத்துச் சென்று விடுவதே இதற்குக் காரணம்.
முருகேசம்பிள்ளை வீடு ஐயர் வீட்டுக்கு இருபது வீட்டுக்கு அப்புறம் இருந்தது. இரண்டும் ஒரே வீதியில்தான் இருந்தன. பாரதியார் இரவில் தூக்கம் வராமல் வெளிமாடியில் உலாவிக் கொண்டிருந்த சமயம்; ஐயர் வீட்டுக்குச் சமீபத்தில் தேர்தல் கூட்டங்கள் நடைபெற்றன; அவை லமோ துரை கூட்டமாக இருக்க வேண்டும். ‘ஸகோ ஸகோ’ என்று கத்திக் கொண்டு அக்கூட்டம் செல்வதைப் பார்த்தார், பாரதியார். அவர் மனத்தில் சந்தேகம் தோன்றிற்று. நன்றாகக் காது கொடுத்துக் கேட்டார். கூட்டம் ஐயரது வீட்டைக் கடந்து செல்லவில்லையென்று தெரிந்தது. தடபுடலாகக் கீழே இறங்கினார். அங்கிருந்த நண்பர்களான, கோவிந்தன், தேவ சிகாமணி, வேணுகோபால் என்பவர்களும் வீட்டிலிருந்த வேறு இப்பத்திகள் பத்துப் பேர்களும் சேர்ந்து ஐயரது வீட்டை நோக்கி வேகமாக நடந்தார்கள்.
புத்தி மருண்ட முரட்டுத் துஷ்டர்கள் நூறு பேர்களை உடல் வன்மையில்லாத பதினைத்து பேர்கள் எதிர்க்கப் புறப்பட்டார்கள்! “அடா பயல்களா? என்ன இங்கே?” என்று பாரதியார் கோஷ்டி கர்ஜித்தது. யாரோ பல பேர்கள் துரத்திக் கொண்டு வருவதாக நினைத்துக் கூட்டத்தார். ஆளுக்கு ஒரு புறமாக விரைந்து ஓடிவிட்டார்கள்.
அதுவரையில் ஆழ்ந்த நித்திரையில் ஈடுபட்டிருந்த ஓரி ஐ.டி.க்களும், போலீஸார்களும் அங்கே வேகமாக வந்தனர். என்னவெல்லாமோ நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போகிற வர்கள் போலத் ‘தாட்பூட்’ செய்துவிட்டுச் சென்றார்கள்.
பிறகு நாங்கள் விசாரித்ததில் புதுவைக்கு அருகிலுள்ள திரைப் பாளையம் என்னும் ஊரிலிருந்து கைக்கூலி வாங்கிக் கொண்டு, சுதேசிகளைத் துன்புறுத்த வந்த துரோகிகளின் கூட்டமே அது என்று தெரியவந்தது.
அன்றுமுதல் ஸ்ரீமதி பாக்கியலக்ஷ்மி அம்மாள் இரவில் எங்களோடுதான் இருப்பார். வாசற்புறம் 15 பேர், புறக்கடைப் புறம் 15 பேர் காவலில் பத்துத் தினங்கள் தங்கியிருந்தோம். பிறகு அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சிறு வீடொன்றில் கொஞ்ச நாட்களைக் கழித்தோம். கிருஷ்ணகான ஸபையில் தான் தேர்தல் அமளிக்காலத்தில் அனேகமாக நாட்கள் கழிந்தனவென்றே சொல்ல வேண்டும்.

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)


One Comment on “செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்”

Comments are closed.