இனிக்கும் தமிழ் -197/ டி வி ராதாகிருஷ்ணன்


————————————
செவியின் சுவை (நள வெண்பா)
—————————————————-
எருமை.
மந்த புத்தி கொண்டது
வெயில் என்றாலும் விரையாது
மழை வந்தாலும் ஒதுங்காது.
என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.
குளம் சேறானாலும் குளித்திருக்கும்
அவந்தி நாட்டிலும் அப்படி ஒரு எருமை.
அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி.
எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம்.
ஒரு குவளை மலர்.
அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியதாம்
அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.
அந்த ரீங்கார இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.
அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தியாம்.
அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்…பெரிய யானையின் வலிமையையை கொண்டவன்
இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள்
அவளுடைய தோழி…

பாடல்
வண்ணக் குவளை மலர் வௌவிவண்டு எடுத்த
பண்ணில் செவி வைத்துப் பைங்குவளை உண்ணாது
அரும்கடா நிற்கும் அவந்திநாடு ஆளும்
இரும் கடா யானை இவன்

பொருள்
வண்ணமயமான குவளை மலரை, வாயில் கவ்வி, அந்த மலரில் இருந்த வண்டுகள்
எழுப்பிய ரீங்காரமான இசை காதில் கேட்டு, அக்குவளை மலரை உண்ணாது எருமை
மயங்கி நிற்கும் அவந்தி நாட்டினை ஆளும் பெரும் யானையைப் போன்ற வலிமை
மிக்கவன் இவன்