ஜெ.பாஸ்கரன்/ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்

(நூல் அறிமுகம் – திரு வி எஸ் வி ரமணன்)

மூதறிஞர் ராஜாஜி அவர்களைப் பற்றி வந்துள்ள நூல்களில் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். அவரது கட்டுரைகள், ஜெயில் அனுபவங்கள், மோனிகா ஃபெல்டன் நேர்முகம் கண்டு எழுதிய ‘RAJAJI’ , சாகித்திய அகாதமியின் ராஜாஜி (வெங்கடேஷ்) போன்ற புத்தகங்கள் சுவாரஸ்யமானவை. இன்று மாலை காந்தி கல்வி நிலையம் – புதன் வாசகர் வட்டம் நிகழ்வில் திரு வி எஸ் வி ரமணன் அவர்கள் ‘ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்’ (இந்து தமிழ் திசை) புத்தகத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். தெளிவான நடையில், அப்புத்தகத்திலிருந்து முக்கியமான, சுவாரஸ்யமான பகுதிகளைப் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். இடையிடையே தன் சொந்த அனுபவங்களையும், வாசிப்புத் தெறிப்புகளையும் சொன்னது மிகவும் இயல்பாக இருந்தது.

இந்து தமிழ்திசை வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில் 110 கட்டுரைகள், 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டுள்ளன. ராஜாஜி என்னும் அறிஞரை, அவரது பன்முகங்களைக் காட்டும் வகையில், அவரை அறிந்தவர்கள், பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு – வாசிக்க வேண்டிய ஆவணம் ஏனெனில், ராஜாஜியின் வாழ்க்கை இந்திய சுதந்திரத்துடனும், மகாத்மா காந்தியுடனும், தமிழக அரசியலுடனும், ஆன்மீக வாழ்க்கையுடனும், ஒழுக்கமான நெறிகளுடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் தன் சுயசரிதை எழுதப்படுவதை அவர் விரும்பியதில்லை என்கிறார் ராஜ்மோகன் காந்தி.

சி ஆர் கேசவன் 19 பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். சுதந்திர இந்தியாவிற்கு முதன் முதலில் செங்கோலை அனுப்பி வைத்தது ராஜாஜி என்பதைப் பதிவு செய்திருக்கிறார். காந்தியும், ராஜாஜியும் ஒத்துப்போன ஒரு விஷயம், ரெளலட் சட்டத்தை எதிர்த்தது!

ஜெயமோகன், சட்டநாதன் அவர்களின் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். “விழித்துக்கொண்டிருக்கும் நேரம் முழுதும் கற்றுக்கொண்டிருந்தார் ராஜாஜி (ஜெயிலிலும்!).

சின்ன அண்ணாமலை வீட்டிற்குச் சென்று ‘உங்கள் வீட்டு இட்லி மல்லிகைப் பூப் போல இருக்குமாமே. எனக்குக் கொடுங்கள்’ என்று ராஜாஜி கேட்க, சின்ன அண்ணாமலை மனைவி நடுங்கி விட்டாராம். மெதுவாக ‘நீங்க எல்லாம் எங்க வீட்டில சாப்பிடலாமா? பிராமணர் ஆயிற்றே?’ என்றாராம். அதற்கு ராஜாஜி, “சுத்தமான இடத்தில் செய்ததை யார் செய்திருந்தாலும், யாரும் சாப்பிடலாம்” என்றாராம். யார் பிராமணன்? என்று கேட்டு, பிராமணராகப் பிறந்தும் பிராமணரைப் போல நடந்து கொள்ளாதவர்களும், பிராமணரல்லாதவராயினும், பிராமணர்களைப் போல நடந்து கொள்பவர்களும் உண்டு என்றாராம்! இது சின்ன அண்ணாமலை தன் கட்டுரையில் சொல்வது.

முதன் மந்திரியின் சம்பளம் 50,000 ஆயிரத்துக்கும் மேல். ஆனால் தன் செலவு, 9000 க்குள்தான் என்று கூறி அதற்கு மேல் பணம் வாங்க மறுத்துவிட்டாராம் ராஜாஜி.

ஒரு சிறிய கிராமத்தில் காந்தி ஆசிரமத்தில் , ராஜாஜியால 6000 பேருக்கு சுயவேலை திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டதாம் – ராஜாஜி பாரதி எழுதியுள்ளார்.

ராஜாஜி ஜெயிலுக்குப் போகிறார். அவர் மகள், ‘எப்போது திரும்பி வருவீர்கள்?’ என்று கேட்க, ராஜாஜி, ‘ சுவற்றில் நாளை அப்பா வருவார் என்று எழுதி வைத்துக்கொள். தினமும் அதைப் பார்த்துக்கொள்’ என்றாராம். ஜெயிலுக்குப் போகும் மனநிலையிலும் என்ன ஒரு திடமான சிந்தனை!

அன்றைய ஃபைல்களை அவ்வப்போது முடித்து அனுப்பி விடுவாராம். ஒரு ஃபைல் மேஜை மீது இருந்தாலே அதிசயம்! காலை 9-11 வரை மட்டும விசிட்டர்களைப் பார்ப்பாராம்!

கங்கிரஸை வீழ்த்த, அண்ணாவை, ராஜாஜி ஆதரித்த போது, அதைக் ‘கூடா நட்பு’ என காங்கிரஸ் கூறியதற்கு, அண்ணா கூறிய பதிலும் ராஜாஜியின் பதிலும் சுவாரஸ்யமானவை.

கல்கி ஆசிரியர் சீதா ரவி ராஜாஜியின் பன்முகத் தன்மை பற்றி எழுதியுள்ளார். கல்கியுடன் ஆன உறவைப் பற்றியும், இதழ்களில் எடிட்டோரியல் குறித்து ராஜாஜி செய்துள்ள வரையரைகளைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனி விஸ்வநாதன், ராஜாஜியின் கடிதங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் எனக் குறிப்பிடுகின்றார். எல்லோருக்கும் தெரியும்படி ஏன் கார்டுகளில் எழுதுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, “எல்லோரும் படிக்கட்டுமே என்றுதான்” என்றாராம் ராஜாஜி! அப்படியோர் வெளிப்படைத் தன்மை!

பதேர் பாஞ்சாலியைப் போல எடுக்கப்பட்ட ராஜாஜியின் ‘திக்கற்ற பார்வதி’ படம் வெளியிட முடியாமல் போன நிலையில், எம் ஜி ஆர். அரசு சார்பில் வாங்கி வெளியிட்ட அரிய தகவலைச் சொல்கிறார், திரை பாரதி.

கல்கி ராஜேந்திரன் அவர்கள் ராஜாஜியுடன் ஆன தனது பர்சனல் விபரங்கள் சிலவற்றைப் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் ஆடும்போது, ராஜாஜியின் கால் எலும்பு உடைந்தது, வெல்லத்தில் கட்டெறும்பு ஊர்ந்ததை, அக்காரவடிசில் சாப்பிட்டுக் கண்டுபிடித்தது என சுவாரஸ்யமான அனுபவங்கள்!

பெரியார் ராஜாஜி நட்பு பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அவர்கள் திருவண்ணாமலையில் சந்தித்துப் பேசியதை இறக்கும் வரையில் யாருக்கும் சொல்லவில்லை என்ற செய்தியையும், நட்புக்காக, அழுதபடி ராஜாஜிக்குப் பெரியார் வாய்க்கரிசி போட்டதையும் பதிவிட்டிருக்கிறார்கள்.

தமிழருவி மணியன், டி எம் கிருஷ்ணா, நீதியரசர் சந்துரு ஆகியோரது கட்டுரைகளையும் குறிப்பிட்டார் ரமணன்.

ஒரு மணி நேரத்தில் அருமையான புத்தகத்தைப் பற்றி, அழகான ஓர் உரையை வழங்கி அறிமுகப்படுத்திய ரமணன் பாராட்டுக்குரியவர்.