சுகன்யா சம்பத்குமார்/ஒளி தந்த வாழ்க்கை


மருத்துவனான ராஜேஷ் மிகுந்த மனநிறைவுடன் தன் துணிமணிகளை பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தான் . அவன் நண்பன் ராகுல் வந்ததும் , மிகவும் சந்தோஷமாக வரவேற்றான் . ராகுல் ராஜேஷிடம் “என்ன ராஜேஷ் , அயல்நாட்டு உத்யோகத்திற்கு தயார் ஆகிவிட்டாய் போலிருக்கிறது , அங்கேயே ஒரு பெண்ணை பார்த்து திருமணமும் செய்துகொள் “ என்று கிண்டலடித்து பேசிக்கொண்டிருந்தான், அப்பொழுது ராகுல் அருகிலிருந்த பழைய மஞ்சள் நிற துணிப்பையை பார்த்தான் , அதில் ஒரு அரிக்கன் விளக்கு இருந்தது “என்னடா ராஜேஷ் இது , பெரிய படிப்பெல்லாம் படித்திருக்கிறாய் ,இன்னும் இந்த விளக்கை வைத்து என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? என்று கேட்டான் .அதற்கு ராஜேஷ் “நான் எப்படி இந்த நிலைமைக்கு வந்தேன் என்பதை என்றும் நினைவில் கொள்ளவும் ,தான் கஷ்டப்பட்டாலும் தன் பேரன் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்ட இறந்த என் தாத்தாவின் ஞாபகமாக வைத்துள்ளேன் “ என்றான் . பின்பு தொடர்தான் ,”ராகுல் , நான் சிறு குழந்தையாக இருக்கும்போதே என் பெற்றோர் இறந்துவிட்டனர் .அவர்கள் ஞாபகத்தினால் அடிக்கடி நான் சோர்ந்து போய் உட்காருவேன், அப்பொழுது என் தாத்தா , “ராஜேஷ் , நீ நன்கு படிக்க வேண்டும் நல்ல உத்யோகத்தில் அமர வேண்டும் என்றும் கூறுவார் ,உன்னால் நம்மை சுற்றி இருக்கும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உபயோகமாக இருக்க வேண்டும் “என்பார் அப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருப்போம் , இரவு நேரம் நெருங்கியதும் , என்னை அறியாமல் ஒரு வித பயம் வரும் , அந்த பயத்தை இந்த விளக்கை கொண்டு போக்குவார் என் தாத்தா , அப்பொழுது அந்த விளக்கின் ஒளியில் படிக்க சொல்வார் . உண்மையில் கொஞ்சம் கடினம் தான் , ஆனால் அந்த விளக்கு ஏற்றும் போது , நம் வாழ்வும் நாளை பிரகாசமாக மாறும் என்று நம்ப தோன்றும் . ஒவ்வொரு முறையும் அந்த விளக்கை அவர் ஏற்றும்போதேல்லாம் ஒரு தனி உற்சாகமும் தைரியமும் உண்டாகும் .எங்களிருவருக்கும் இந்த அரிக்கன் விளக்கு ஏற்ற துணை .என் பள்ளிபடிப்பை முடித்து நான் நல்ல மதிப்பெண் எடுத்த போது ,என் தாத்தா என் மதிப்பெண் சான்றிதழை பார்த்து என்னை கட்டி தழுவினார் , அப்பொழுது கூறினார் ,”ராஜேஷ் நீ உன் வாழ்வில் மிக சிறந்த உயரத்திற்கு போவாய் , அன்று நீ படிக்கும்போது உனக்கு வெளிச்சம் கொடுத்த இந்த அரிக்கன் விளக்கை மறந்துவிடாதே . இது உன் வாழ்விற்கு படிப்பை கொடுத்து அந்த படிப்பின் மூலம் நல்ல வாழ்க்கையையும் கொடுத்துள்ளது “ என்றார் . அன்றிலிருந்து என் வாழ்விற்கு ஒளி கொடுத்த இந்த விளக்கை நான் என்னருகிலேயே வைத்திருப்பேன் “ என்றான் . ராகுல் அதற்கு “ஓ ,பரவாயில்லையே , இந்த விளக்கிற்கு இப்படி ஒரு கதை இருக்கிறதா ? ஆனால் இப்பொழுது இதை விட்டுவிட்டு தானே செல்லப்போகிறாய் ? என்று கேட்டதும் , ராஜேஷ் யோசித்தான் , ராகுல் சாதாரணமாக கேட்டிருந்தாலும் ,அதில் உள்ள அர்த்தம் மிகவும் பெரிது . எந்த மருத்துவர் பட்டம் கிடைக்க இந்த அரிக்கன் விளக்கு பயன்பட்டதோ ,இன்று அதையும் அவன் வளர்ந்த கிராமத்தையும் விட்டுவிட்டு செல்லப்போகிறோம் என்று எண்ணி வருந்தினான் .அப்பொழுது தான் அவன் நினைவுக்கு ஒன்று வந்தது , கிராமத்தை விட்டு போகக்கூடாது என்பதற்காக தன் கிராமத்தில் இருந்த படியே அடுத்த ஊருக்கு சென்று மருத்துவ படிப்பை மேற்கொண்டது அவன் நினைவிற்கு வந்தது .இது அத்தனையும் அவன் கண் முன்னே வந்து நிற்க , ராகுலோ “ராஜேஷ் , சீக்கிரம் கிளம்பு , இல்லையென்றால் நீ விமானத்தை தவற விடுவாய் “ என்றான் . ராஜேஷ் மெல்ல சிரித்தபடியே விமான டிக்கெட்டை கிழித்துவிட்டு , “ இனி என் சேவை என் கிராமத்துக்கு தான் , இப்பொழுது என் அரிக்கன் விளக்கை , என் தாத்தா எனக்காக விட்டு சென்ற இந்த சொத்தை என்னிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது அல்லவா ?? என்றான்.ராகுலோ “உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது , ஒரு அரிக்கன் விளக்கிற்காக யாரேனும் வெளிநாட்டு வாய்ப்பை தவற விடுவார்களா ? என்று கேட்டான் .அதற்கு ராஜேஷ் “ராகுல் , நீ கஷ்டத்தை பார்க்காதவன் , அதுவும் வீட்டில் உனக்கு நிறைய வசதிகள் இருந்தது ,அதனால் உன் பள்ளி பருவம் மிகவும் அழகாக இருந்தது , நான் அப்படி இல்லை , எனக்கு முதலில் அடிப்படை வசதியே இருந்ததில்லை ,அதில் படித்து வெளியில் வந்த எனக்கு பெரிதாக எதன் மேலும் ஆசை இல்லை , உண்மை தான் நானும் முதலில் வெளிநாட்டு வாய்ப்பு என்றதும் மதி மயங்கினேன் , ஆனால் ,நாம் எதிலிருந்து வந்தோமோ , அதை மறக்காமல் , என்னை போல் உள்ளவர்களை மேலே கொண்டு வராமல் , நான் மட்டும் வளர்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை .நீ வந்ததும் சரிதான் , ஏனெனில் இந்த புரிதல் ஏற்பட காரணமே உன்னுடைய அந்த ஒரு கேள்வி தான் “ என்றான்.. …….

                        சுகன்யா சம்பத்குமார்