நாகேந்திர பாரதி/கண்ணாடிச் சில்லுகள்

‘டேய், அரிக்கேன் விளக்கை எடுத்துட்டு வா, எத்தனை தடவ சொல்லி இருக்கேன் , படுக்க மேலே வைக்கக் கூடாது’ன்னு என்றபடி விரையும் அப்பாவைப் பின்தொடர்ந்தான் அவன் , அவசரமாக . ‘ உங்கப்பாவுக்குப் பொடதியிலும் கண்ணு, தெரியாது உனக்கு ‘ என்ற அம்மாவின் குரல் உள்ளே இருந்து . போகிற போக்கில் அவருக்கு சுற்றி நடக்கும் எல்லாவற்றின் மேலும் கவனம் உண்டு. அது விவசாயிக்கே உரிய தெறமை. இத்தனை ஏக்கர் வயக்காட்டிலே , நஞ்சை, புஞ்சையிலே நெல்லு , மிளகாய்ன்னு போட்டு பயிரைக் காத்து விளைய வைக்கிற விவசாயத் தலைமுறைக்கே உரிய கவனம்.

அதிகாலை நாலு மணி..வயக்காடுகளைச் சுத்தி வந்து , வாய்க்கால்த் தண்ணிய எவனாவது பக்கத்து வயலுக்கு மாத்தி விட்டுட்டான்னு பார்த்து சரி செய்ய, மம்பட்டியைத் தோளிலே போட்டுக்கிட்டு வேக நடை போடுற அவர் பின்னாலே ஓடினான் அவன் அரிக்கேன் லைட்டோடு. அவருக்கு இந்த வெளிச்சம் எல்லாம் தேவை இல்லை . இவனுக்காகத்தான் அது இருட்டிலே போயிப் பழகி கண்ணு ராத்திரியிலும் முழிச்சா பளபளக்கும் ஆந்தை மாதிரி அவருக்கு .’ டேய் , கருவை முள்ளை ஒதுக்கிட்டேன். ஓரம் குத்திராமப் பாத்து வா. ‘ போற பாதையில் கவனம். அதே சமயம் சுத்தி வாய்க்கால் தண்ணி நம்ம வயலுக்குப் போகுதான்னு பார்வை. குறுகின வரப்பில் பழக்க நடை. இவன் பார்த்துப் பார்த்துத் தான் போகணும். இல்லேன்னா வரப்புச் சகதி வழுக்கி விட்டுடும்.

பக்கத்து டவுனில் தாத்தா வீட்டிலே இருந்து படிக்கிற இவனுக்கு , லீவு விடுறப்ப கிராமம் வந்துடணும் . தன்னோட சாம்ராஜ்யத்தை இவனுக்குக் காட்டுறதில்லே அவருக்கு ஒரு சந்தோசம். இப்படித்தான் ஒரு நாள் கம்மாய்க்குப் போயி வேஷ்டியை விரிச்சு அவர் ஒரு பக்கம், இவன் ஒரு பக்கம் நுனியைப் பிடிச்சு அள்ளிட்டு வந்த கெண்டையும் கெளுத்தியும் ,அது ஒரு ருசி . ராத்திரி ராமாயண நாடகத்தில் ராமர் வேஷத்தில் அவர் ஆடுற ஒயிலாட்டப் பாட்டுக்கு ஊரே கை தட்டி விசில் அடிக்கும். அந்தக் கிராமத்தில் அவர் ஒரு ஹீரோ. முளைக்கொட்டு உத்சவத்தில் முதல் மரியாதை இத்யாதி , இத்யாதி .

‘டே இந்த பொன்னமாய்க்காக்காரன் புத்தியைப் பாரு , வாய்க்கால்த் தண்ணியை அவன் வயலுப் பக்கம் திருப்பி விட்டிருக்கான். நம்மதான் ஊரிலே கூடிப் பேசி வச்சிருக்கேமே. இத்தனை நேரம் கம்மாய்த் தண்ணீ இன்னின்ன வயலுக்குன்னு . நம்ம நேரத்திலே அவன் வயலுக்குத் திருப்பி விட்டிருக்கான் பாரு , இன்னிக்கு ஊருக் கூட்டத்திலே பேசி ஒரு வழி பண்ணணும் அவனை. எங்கே , அரிக்கேனைத் தூக்கிப் பிடி , என்றபடி மம்பட்டியைத் தோளில் இருந்து இறக்கி மண்ணு வெட்டி அவன் வயல் பக்கம் போட்டு மூடுற நேரம், அப்பா ‘ பாம்பு ‘ என்று கத்தினான் அவன். ஒரு சாரைப் பாம்பு அவர் காலைச் சுற்ற , அதை இழுத்து அந்தப் பக்கம் தூக்கி எறிந்தார் அவர். இவன் கை நடுங்கி விழுந்த அந்த அரிக்கேன் லைட்டின் கண்ணாடிச் சில்லுகள் சிதறின ..

‘ இது வேணுமா சார், நூறு டாலர் ‘ என்ற அந்தப் பெண்ணின் குரல் அவன் நினைவைத் திருப்பியது . குளிரூட்டப்பட்ட அந்த நியூயார்க் நகரக் ‘கலைப் பொருட்கள் ‘ கடையில் ஒரு கண்ணாடி அலமாரிக்குள் பளபளத்துக் கொண்டிருந்தது . அதே போன்ற அரிக்கேன் லைட். நீலக் கலர்த் தகரத்தட்டுகள் வடிவமாக மடக்கி , புகை போக மேலே சன்னல் வழி விட்டு , மேலே சின்னக் கலசம் போல் , கீழே பீடம் போல் சுற்றிக் கம்பிகள் இறுக்கி தூய வெள்ளைக் கண்ணாடி பளபளக்க ஒரு புனிதக் கோபுரம் போல அது. அந்த அரிக்கேன் லைட்டைப் பார்த்தபடி ‘ ஆமாம் ‘ என்றான் .

பக்கத்தில் இருந்த அவன் மனைவி . ‘ஏங்க , இது எதுக்குங்க ‘ என்றாள் . அவளைப் பார்த்துச் சொன்னான். ‘ராத்திரி சொல்றேன்.’ அவன் கண்கள் கலங்கி இருந்தன . அவளுக்குத் தெரியும் ‘ இதுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும் . அந்தக் கதையை அவன் சொல்லி முடித்து நெகிழ்ந்து போவான். அதன் பின் அதில் இருந்து மீண்டு வர அவனுக்கு அவள் உதவி தேவைப்படும் ‘ என்று நினைக்க அவள் மஞ்சள் முகத்தில் நாணச் சிவப்பு பூசியது .

——————————

3 Comments on “நாகேந்திர பாரதி/கண்ணாடிச் சில்லுகள்”

  1. அப்பப்பா!
    அருமையாக உள்ளது உள்ளபடியே நடப்பதை விவரித்து காட்டும் உங்கள்
    கதை படிக்க படிக்க சுவை கூடுகிறது.
    நன்றி.

Comments are closed.