சசிகலா விஸ்வநாதன்/காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்

அழகியசிங்கரின் என்பா
1.
காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
நேற்று நான் உண்ணா நோன்பு.
வியாழன் தோறும்; ஒவ்வொரு வாரமும்
காலை காபி அமுதம்

2.
காலையில் காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன்
சிறிதே தாமதம் ஆனாலும்; சர்க்கரை
அளவு பாதாளம் சென்று விடும்.
அந்த அச்சம் தினமும்.

3.
காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
அலுவலகம் கிளம்பும் முன் வேலைகளின்
அலைகள்; இன்னொரு காபி குடிக்கலாமா?
வேண்டாம்; இந்த சொகுசு

4.
காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
காலை காபியை விட்டு விடச்
சொல்லி, மருத்துவர் ஆலோசனையை முன்மொழிவாள்
மருமகள்; முடியுமா, என்ன!

5.
காலையில் காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன்.
நடைப்பயிற்சிக்குப் பிறகு இன்னொரு முறை
காபி,கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்;
யாரும் அறியாமல்; கூட

6.
காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
வீட்டு வேலையில் உதவி செய்யும்
வீராயியை, இன்னும் காணோம்; கடவுளே
நிம்மதியாக குடிக்க முடிகிறதா!

7.
காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
கை நழுவி காபி கீழே
கொட்டினதும் மருமகள் சீற்றம்; இன்று
எனக்கு காபி இல்லையே!

8.
காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
இன்றுதான் ஒரு வாரத்திற்குப் பின்னே
என்னவர் கையால் ஒரு காபி!
அமுதம்! அமுதம்! என்பேன்

9
காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
உடனடி காபி; தொண்டையில் இறங்குமா?
மதியம் அருந்த வேண்டும்; ஒரு
நல்ல ஃபில்டர் காபி

10.
காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்
அனைத்து வீடுகளிலும் காபி அருந்தனேன்
என் வீட்டு காபி போலில்லை
அவர்களும் அப்படியேதான் சொல்வார்கள்!

9-2-2024
h ♦