குமரன்/அம்மா சொன்னா கேட்டுக்கனும்

அரிக்கேன் விளக்கு படத்திற்கான கதை:

ஒரு வழியா சொந்த வீட்டுக்கு போகப்போறோம் என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

இருக்காதா என்ன, அம்மாவுக்கு, என்றைக்கு தன் மகன், ராஜனை, குழந்தை என்று பாராமல் வீட்டு உரிமையாளர் அடித்து திட்டினாரோ, அன்றே அப்பாவிடம் அழுது சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.

என் அப்பாவும் வீடு வாங்க வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் எடுத்தார்தான், ஆனால் அவருக்கு அதிர்ஷ்டமில்லை.

வாடகை வீட்டிலேயே வாழ்ந்திருந்த எங்களுக்கு சொந்த வீடு என்பது ஒரு பெரும் கனவு. பணத்தைக் கொடுத்து விட்டு ஏமாந்ததுதான் மிச்சம்.

ராஜனுக்கு அம்மாவின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதி அப்போதே ஏற்பட்டது.

அதற்குப்பிறகு, சுமார் 25 வருடங்களுக்குப்பிறகு ராஜன் வங்கியில் சேர்ந்து கிடைத்த வீட்டுக்கடனில் ஒரு மிகச்சிறிய வீட்டை கட்டி முடித்தான். வீடு சிட்டியிலிருந்து வெகு தொலைவில் இருந்த ஒர் இடம். அவன் அம்மாவுக்கு மிக வருத்தம்தான், இன்னும் பெரிய வீடாக கட்டலாமே என்று.

ஆனால் ராஜன் வங்கிக்கடனுக்கு மேல் ஒரு பைசா கூட கடன் வாங்கக்கூடாது என்று குறியாக இருந்தான். அம்மா எவ்வளவோ போராடிப்பார்த்தாள். ஆனால் ராஜன், ” இருக்கிற கடனை அடைப்பதற்கே எனக்கு இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகும், இன்னும் எல்லோருக்கும் கல்யாணம் பண்ணனும், அது இல்லாமல் வீட்டுக்கடனை அடைப்பதற்கு 30 வருடம் ஆகும்” என்று கூறி மறுத்து விட்டான்.

அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்குத்தான் தற்போது இவ்வளவு தடபுடல். அம்மா ஒவ்வொன்றாக தேவைப்படும் பொருள்களை சொல்லிக்கொண்டே போனாள். அப்பா அனைத்தையும் எழுதிக் கொண்டிருந்தார். அம்மா அப்போது ஒரு அரிக்கேன் விளக்கு தேவை என்று சொன்னார்கள். அவ்வளவுதான் ராஜன், அவன் அக்கா, தங்கை, தம்பிகள் என எல்லோரும் சிரித்து அம்மாவைக் கேலி செய்தார்கள். அப்பா மட்டும் அமைதியாக இருந்தார். அம்மா மீண்டும் அது வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
அப்பா எப்படியோ தேடிப்பிடித்து அரிக்கேன் விளக்கை ஏற்பாடு செய்தார்.

கிரகப்பிரவேச நாளன்று விடிகாலையில்தான் செல்ல வேண்டும் என்ற முறைமையால் எல்லோரும் ஒரு வேனில் சென்றோம்.

புது வீட்டு வாசலில் கொண்டு வந்த பொருட்களையெல்லாம் தட்டில் ஏந்தி அம்மா, அக்கா, தங்கை என எல்லோரும் தயாராக, ஏற்றிய அரிக்கேன் விளக்கை ஒரு தம்பி எடுத்துக்கொள்ள, இன்னொரு தம்பி மற்ற பொருட்களை தூக்கிக்கொள்ள, பால்காரர் தன் பசு மாட்டோடு வரவும் சரியாக இருந்தது.

அனைவரும் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் மின்சாரம் நிற்கவும் , அரிக்கேன் விளக்கின் வெளிச்சம் சட்டென்று பரவி எல்லோரையும் அரவணைத்துக் கொண்டது.

அம்மா, ” இப்ப தெரியுதா, இதன் அருமை” என்றும் “அம்மா சொன்னா கேட்டுக்கனும் ” என்று சிரித்தார்கள்.

ஆனா இப்ப அம்மாதான் இல்லை தன் மக்களுக்கு வழிக்காட்ட! சிரிக்க வைக்க!