மீ.விசுவநாதன்/ஊழ்வினை

                         

                           

    சென்னை மந்தைவெளி பஸ்நிலையத்திற்குப் பக்கத்துத் தெருவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் மாடியில் குடியிருகிறான் மல்லி என்ற மல்லிகார்ஜுனன். அவனது சொந்த ஊர் தென்காசிக்குப் பக்கமுள்ள சாம்பவர்வடகரை. அவனுக்கு அப்பாவும் அம்மாவும் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் திருமணத்திற்குப் பின்பு தன் மனைவி, மூன்று மகன்கள், மற்றும் மாமனார், மாமியாருடன் சென்னையில் இந்த வீட்டில்தான் வாசம். மல்லிக்கு  பாரத ஸ்டேட் பேங்க்ல் வேலை. ஊரூராகச் சுற்ற மனமில்லாதவன். அதனால் உயர்பதவிக்கு ஆசைப்படாமல் இருக்கின்ற குமாஸ்தா பதவியே சொர்க்கம் என்று சென்னைக்கும், அதன் சுற்றுப்புற இடங்களுக்குமாக மாறிமாறி இருந்து வருகிறான். ஒவ்வொரு சீசனுக்கும் தவறாமல் குற்றாலம் அருவியில் குளிக்கக் குடும்பத்தோடு சென்றுவிட்டுத் திரும்புவான்.

     மல்லியின் மாமனார் ரத்தினம் ஐயருக்கு வரிசையாக நான்கு குழந்தைகள் பிறந்து சில மாதங்களே இருந்து விட்டு இறந்த பின்பு மிஞ்சியது ஒரே பெண்பெயர் கல்யாணி. ரத்தினம் ஐயருக்குப் பூர்வீகம் தென்காசி. மாமியாரின் ஊர் இலஞ்சி. திருக்குற்றாலம் மிக அருகில் என்பதால் சீசனில் அருவிக் குளியல் அதிகம். மல்லியின் மாமனார் ஒரு மிராசுதார். நிறைய புஞ்சையும், நஞ்சையுமாகக் கொடிகட்டிப் பறந்தார் இளமைக்காலத்தில். ஒரு மைனராகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

     ஒருநாள் காலை ஒன்பது மணிக்கு மல்லியின் அலுவலக நண்பன் குமார் அவனது வீட்டிற்கு எப்பொழுதும் போல வந்திருந்தான். வீட்டில் மல்லியின் மாமனாரைத் தவிர யாருமே இல்லை. வீடு முழுக்க மௌனம் சூழ்ந்திருந்தது. மல்லியின் மாமனார் ஹாலின் நடுவில் ஒரு நாற்காலியில் ஏதோ ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தார். அந்த அறையில் காற்றாடி இருந்தும் அதை அவர் போட்டுக் கொள்ளவில்லை.

     வீட்டிற்குள் நுழைந்ததும்,” என்ன மாமா..”டிவி”ல மகாபாரதம் நடக்கறதே…பாக்கலையா..” என்ற குமாரிடம்,” இப்பத்தான் இங்க ஒரு மகாபாரத யுத்தம் நடந்து முடிஞ்சிருக்கு…” தலையைக் குனிந்தபடி பதிலளித்தார் ரத்னம் ஐயர். ஒன்றும் புரியாமல் விபரம் கேட்டான் குமார். “மல்லியின் மாமியார், அதான் என்னோடு பொண்டாட்டிக்கு ஏதோ திடீர்ன்னு பழைய நெனைவு வந்து என்ன வாயில வந்தபடி திட்டினா…என்னோடு இடது கன்னத்துல ஓங்கி ஒரு அறை விட்டா…மடமடன்னு வாசல்ல எறங்கிப் போனா..அவ எங்க போனான்னு மாப்பிளையும், பொண்ணும், பேரன்களும் தேடிண்டு போயிருக்கா…இந்த எண்பது வயசுல நான்மட்டும் அந்தக் காலத்த நெனச்சு கன்னத்தத் தடவிண்டு தவிச்சுண்டுருக்கேன்..”

     ஒருமணி நேரத்திற்கும் மேலாக ரத்தினம் ஐயரும், குமாரும் பேசிக் கொண்டிருந்தனர். குமார் தான் வாங்கிக்கொண்டு வந்திருந்த மாம்பழங்களை அவரிடம் கொடுத்து நமஸ்காரம் செய்தான். ” என்ன நமஸ்காரம் பண்ணாதப்பா…நான் ஒரு பாவி… கண்கெட்டு சூரிய நமஸ்காரம் பண்ணறவன்” என்று இரண்டு கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோட நடுங்கும் குரலில் சொன்னார் ரத்தினம் ஐயர்.

      பேசிக்கொண்டிருக்கும் பொழுதே மல்லியும், கல்யாணி, மற்றும் பாட்டியைத் தேடிப் போன குழந்தைகளும் ரத்தினம் ஐயரின் மனைவி பொன்னம்மாவுடன் வீட்டிற்குள் நுழைந்தனர். பொன்னம்மா மாமியின் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது தெரிந்தது. பொன்னம்மா மாமி நேராக வந்து நடு ஹாலில் குமாரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். ” குமார்…எப்ப வந்தாய்…வெயில் கொளுத்தறது…கொஞ்சம் மோர் குடியேன்..அப்டியே எனக்கும் கொஞ்சம் மோர் தாயேன் கல்யாணி” என்று தன் மகளிடம் கேட்டாள்.

      மோரைக் குடித்துக் கொண்டே,” என்ன மாமி சௌக்கியமா இருக்கேளா?” என்று குமார் கேட்டதுதான் தாமதம்,” இதோ பாருடா குமார்…ஒன்னோடு அம்மாவும் நானும் நெருங்கின சிநேகிதிகள். இங்க பக்கத்துலையே பத்து வருஷத்துக்கு மேல அவளோடு பழக்கம்…அவளுக்கு இவரோட வண்டவாளம் எல்லாம் தெரியும். நான் சொல்லிருக்கேன்.

     எனக்கு இவர, இந்த மைனர்வாளக் கல்யாணம் பண்ணி வச்சபோது வயசு பதினைஞ்சு. இவருக்கு இருபது. பலே ஷோக்காளி. செண்டும், ஜெவ்வாதும், மல்லிப்பூவும், சீட்டுமாத்தான் திரிஞ்சார். அவரோட அப்பா சேத்துவச்ச சொத்து ஏழேழு தலைமுறைக்கு வரும். அம்புட்டையும் குடிச்சும், சீட்டாடியுமே அழிச்சார். ஒவ்வொரு தரம் கொழந்தை பொறந்தவுடன் தகவல் தெரிஞ்சுண்டு வருவர்…தொட்டில்ல இருக்கற கொழந்தை மொகத்தக் கூடச் சரியாப் பாக்காம அதோட கழுத்துல ஒரு தங்கச் செயினப் போட்டுட்டு, ரெண்டு வாய் சாப்டுட்டு வெளில போயிடுவர் சீட்டு வெளயாட…என்கிட்டக் கூட ஒரு வார்த்த பேசத் தோணாது…இப்படி ஒருநாளா ரெண்டு நாளா..வரிசையா நாலு கொழந்தைகளத் தூக்கி எமன்கிட்டக் கொடுத்தும் இவர் திருந்தலடா குமார்…எங்க தெருவுல கிட்டப்பான்னு ஒரு சண்டாளன் இருந்தான்…அவன் ஒரு ஷோக்குப் பேர்வழி…அவன்கூடச் சேராதேன்னு என்னோடு மாமனாரும், மாமியாரும் கரடியாக் கத்திக் கத்தியே உசிர விட்டா..ஒருவழியா சொத்து எல்லாம் கரைந்சுது…பாவி கிட்டாப்பாவும் தொலஞ்சான். அப்ப இவருக்கு ஒரு நாப்பது வயசிருக்கும்…எங்கப்பா…டேய் ரத்னம்…இனிமேலாவது சரியாருடா…என்னோட சொத்த ஒனக்கே எழுதிக் கொடுக்கறேன்..பொன்னாவோட சேந்து குடும்பம் நடத்துடா..நன்னாருடா..நான் பழசெல்லாம் மறந்துட்டேன்..என்று அழுதார். ஒண்ணுமே தெரியாத மாதிரி இங்க ஒக்காந்துண்டுருக்காரே  இப்படித்தான் அன்னிக்கும் இருந்தார். அப்பறம் என்கூட இருக்க ஆரம்பிச்சார். ஆசையார விட்டுது. எனக்கும் எல்லாரையும் போல ‘காமன்’ ஆசையத் தூண்டினான். இவரோட சேர்ந்து இதோ நிக்கறாளே எங்க பொண்ணு கல்யாணிய அஞ்சாவதா பெத்துப் போட்டேன்…கையில காசு அவ்வளவு பொழக்கமில்லை. எனக்குத் தெரிஞ்ச வழில பக்ஷணம் பண்ணி வியாபாரம் செஞ்சு வயத்தக் கழுவிண்டு வந்தேன்..இவரும் உள்ளூர்ல இருந்தா கேவலம்னு பக்கத்து ஆம்பூர்ல ஒரு பண்ணையாராத்து வயல் கணக்கெல்லாம் பாத்துண்டு வந்தார்…அங்க இங்க கடன வாங்கி இவள காலேஜ் வரைக்கும் படிக்க வச்சோம்…அப்பனப்போல பொண்ணும் கெட்டுப் போயுடப் படாதுன்னு எங்க உறவுக்காரப் பையன் மல்லிய…அதான் இவனக் கல்யாணம் பண்ணிவச்சோம்….மணிமணியா மூணு பேரக் கொழந்தைகள் பொறந்து நன்னா படிச்சுண்டு வரா…

     இதுவரை சாந்தமாகப் பேசிக்கொண்டு வந்த பொன்னம்மாள் திடீரென ஆவேசம் வந்தவள் போலப் பேசத் தொடங்கினாள்.

   “ஆனா…இந்தக் கல்யாணி இருக்காளே.. அப்படியே அவ அப்பாவப் போல இருக்கா..சத்தான நல்ல புருஷனா, மானத்துக்கு பயந்து வாழற இந்த மல்லிகேஸ்வரனுக்கு துரோகம் பண்ணிட்டு மகாபாவி ஒன்னோட கள்ளத் தொடர்பு வச்சுண்டு திரியறா…அப்படி என்ன இவளுக்கு இன்னோரு பொண்ணோட புருஷன்மேல மோகம்…தீய வை….தெருவுல அம்மணமாப் போற ஆடு, மாடுகள் கூட இப்படி மோகிச்சு அலையாது. ஆனா.. பொடவையும், வேட்டியுமா மானத்த மறைச்சுண்டு திரியற மனுஷாளுக்குள்ளதான் எத்தனை காமம் கொட்டிக்கெடக்கு.

     எனக்கு என்ன தெரியாதுன்னு நெனைக்கறையா… சொர்ண விக்ரகமா இருக்கற  பொண்டாட்டிய விட்டுட்டு இப்படி ஒவ்வொரு நாளும் இந்த வீட்டுக்கே வந்து அறைக்கதவைச் சாத்திண்டு அப்படி என்னாடா அவளோட,  அதுவும் வேறோருத்தனோடு பொண்டாட்டியோட பேச்சு…..சண்டாளா…எழுந்திருடா…இந்த நெருப்பு ஒவ்வொரு நாளும் கொதிச்சுக் கொதிச்சு இன்னிக்குக் காலைலதான் ஏதோ பேச்சு முத்திப்போய் அவரோட செவுட்டுல ஓங்கி ஒண்ணு சப்புன்னு வைச்சுட்டு வெளில போனேன்ண்டா….எனக்கு ஒரு வியாதியும்  கெடையாது…இருந்த ஒரே ஒரு மனோவியாதியும் இன்னிக்கோட போச்சுடா….போடா வெளில…மானங்கெட்டவனே.. ஒன்னமாதிரி போக்கிரிங்க….அது ஆணோ பொண்ணோ அவா முகத்துல காறித்துப்பறேண்டா “த்தூ”…” என்று பொன்னம்மாள் குமாரின் முகத்தில் காரி உமிழ்ந்து, தன் உள்ளக் குமுறலை ஒரு பேரருவிபோலக் கொட்டித் தீர்த்து விட்டாள்.

     குமாரின் முகத்தில் பட்ட எச்சில் சிதறி அவன் கையில் இருந்த டம்ளரில் உள்ள மோரில் விழுந்தது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ந்து போன குமார் தலையைக் குனிந்தபடி வெளியில் வேகமாகச் சென்றவன் இன்று வரை எவர் கண்களிலும் படவே இல்லை.

                ********     ***********    ***********  *********