எம்.டி.முத்துக்குமாரசாமி/பொன்னிறம் கொள்ளும் அந்தி



—-
கவிதை/ தனி நபர் நாடகம்
——
என் பௌத்த தியான குரு
வயோதிகத்தில் தளர்வடைந்திருக்கிறார்
கிட்டத்தட்ட அவர்
பட்டினி கிடந்து எலும்புக்கூடாய் மாறி
நடுவண் பாதையை உயிர் மீண்டு கண்டடைந்த
புத்தரைப் போல இருக்கிறார்
அவர் சொல்கிறார்
உனக்குத் திரும்பத் திரும்ப வரும்
கனவைப் பற்றிக்கொள் என்று.
எனக்கு முன்பெல்லாம் கனவுகள்
நினைவிலிருப்பதில்லை
அவர் சொன்னதைக் கேட்ட பிறகோ
எல்லாமே கனவுகள் போல இருக்கின்றன.
கண்ணாடியுள்ளிருந்து
என் இளமையைப் பார்க்கும்
என் வயோதிக ரூபம்,
நிச்சயமாகப் பொன்னிறம் கொள்ளும் அந்தி,
நிச்சயமற்ற வைகறையின் முதல் கிரணம்
சதா பிரசவ வலியில் நெட்டி முறிக்கும் பூனை
ஏற்கனவே இறங்கிவிட்ட மஞ்சள் சரக்கொன்றை
நீ ஏன் என் நாடகத்தை நிகழ்த்த விரும்புகிறாய்?
நான் ஒன்றும் ஆண்ட்டன் செகாவ் இல்லை
என் கதாபாத்திரங்கள்
வளர்வதுமில்லை தேய்வதுமில்லை
அவர்கள் ஒரே இடத்தில் நின்று மனதில்
உழன்றுகொண்டே இருப்பார்கள்
நீ என் நாடகங்களை கண்ணாடியினுள் நிகழ்த்த
விரும்புகிறாய் என்பது எனக்கு உவகையளிக்கிறதுதான்
நீ ஏன் நடிகர் தேர்வில் கலந்துகொள்ளக்கூடாது?
எல்லா மேடைகளும் கண்ணாடிகளால் ஆனதுதான்
அவை கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்
தான் படைக்காத எல்லாவற்றையும் அழிக்கும்
இந்த மனிதப் பிறவியின் மூலகம்தான் எது?
நீ சொல்வது எனக்குக் கேட்கிறது, நன்றாகக் கேட்கிறது,
“அங்கிள் வான்யா, நாம் நமது வாழ்க்கையை வாழ்ந்துதான் தீரவேண்டும், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் பகல்கள்,
நீண்ட மாலை நேரங்கள், தீராத இரவுகள் ..”
நிறுத்து நிறுத்து
தீராத இரவுகள் அந்த வசனத்தில் வராது
எந்தக் கண்ணாடியிலிருந்து நீ இறங்கி வந்தாய்
என எனக்குத் தெரியவில்லை
நான் என் ஆண்ட்டன் செகாவ்விடமிருந்து
வெகு தூரம் வந்திருக்கலாம்
நான் மிச்சமிருக்கும் என் ரெனி மார்ட்டினோடு
அந்தியின் கரையில் கூச்சலிடும்
சாம்பல் கடற்பறவைகளுக்குப்
பாடிக்கொண்டிருக்கலாம்
ஆனால் செகாவ்வின்
வசனங்களை நான் மறப்பதிற்கில்லை
தீராத இரவுகள் எனக்கானவை
நீண்ட மாலை நேரங்களோடு
செகாவ் நின்று போய் விடுகிறான்.
“நிலவழிந்த நள்ளிரவு நா நுனியால் தொட்டுத்
திறக்கக் காத்திருக்கிறது”
பேசாதே சோனியா பேசாதே
என் வசனத்தைப் பேசாதே
செகாவ்வின் நாடகத்தினுள் நின்று
என் வசனத்தைப் பேசாதே.
நான் உனக்கு செக்காவின் கதாபாத்திரப் பெயரைக் கொடுத்துவிட்டேன் பார்.
எனக்கு இருபத்தியிரண்டு வயது இருக்கும்போது
நான் செகாவ்வின் நாடகங்களை மேடையேற்றினேன்
அங்கிள் வான்யாவில் சோனியாவாக நடித்தவள்
பெயரென்ன, பெயரென்ன மஹ்ம் அவளை
நான் வேறொரு சிறுகதையில் கூட கொண்டுவந்திருக்கிறேன்
அவள் அந்த வசனத்தை
அவள் உதட்டைக் கடித்துக்கொண்டே பேசினாள்
“அடுத்தவருக்கு உதவ முடியாத போது
அடுத்தவரின் ரகசியத்தைத் தெரிந்துகொள்வதை விடப்
பெரிய துயரம் ஏதுமில்லை”
அவளுக்கு என் ரகசியம் தெரிந்திருந்ததோ
அவள் பெயர் என்ன என்ன என
நினைவு பிறழ்கிறது
சோனியாவாக நடித்தவள்
சோனியாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
மொட்டை மாடியில் பறவைகள் அழைக்கின்றன
அவலும் பொரியும் வெல்லமும்
கலந்து கொடுக்க வேண்டும்
புறாக்களும் கிளிகளும்
என் உள்ளங்கையிலிருந்தே
கொத்தி சாப்பிடும்
அணில்கள் என் உடல் மேல் ஏறி விளையாடும்
சோனியா நீ ஏன் என் படுக்கையறையிலிருந்து
என்னைப் பின் தொடர்ந்து இங்கே வந்திருக்கிறாய்?
என்னை என் பறவைகளோடும், அணில்களோடும்
பூச்செடிகளோடும் தனியே இருக்கவிடு.
என் குருவானவருக்கும் இந்த நீலக்குவளை
மலர்களைப் பிடிக்கும்.
காற்றோ கனத்திருக்கிறது
இரவோ சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது
பௌர்ணமி நிலவு ஒளிரும் நள்ளிரவில்
நீலக்குவளை மலரொன்று
மொக்கவிழும் சிற்றோசையில்
ஓராயிரம் இடிமுழக்கங்கள் சங்கமிக்கின்றன
நம் செவிப்புலன்கள் தாண்டி.
நீ ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய் சோனியா
உன்னை இரவிலல்லவா
என் படுக்கையறையில் சந்தித்தேன்
பறவைகளுக்குத் தானியம் கொடுக்க
காலையில் அல்லவா வருவேன்?
செகாவ்வுக்கு இரவைத் தெரியாது
ஒவ்வொரு இரவையும் கழிப்பது எத்தனை பெரிய சாகசமென செகாவ்வுக்குத் தெரியாது
இப்போது இரவா, பகலா?
நான் இன்னும் கனவுதான் கண்டுகொண்டிருக்கிறேனா.
இது அந்தி, கனவில் வரும் அந்தி
இதைத்தான் குருவானவர் இறுகப்பற்றிக்கொள்ளச் சொன்னாரா?
மாயை என்பது கிரியையும் கூட.
அந்தி ரகசியக் கேவலை மறைக்கும்
முகம் போல சிவந்து பொன்னிறம் கொள்கிறது
காலமும் காதலும் கற்பனைக் கோடுகள்
அவற்றை மனதிலும் நிலத்திலும்
எங்குதான் வரைந்தால் என்ன
வரையாவிட்டாலும்தான் என்ன
உதய முழு நிலவின் கிரணங்கள்
என்னை அடைவதில்லை
எல்லோரும் தேடுகிறார்கள்
எவரும் பார்ப்பதில்லை
முதல் காதலின் முதல் முகத்தை
நான் பார்க்க வேண்டும்
நான் திரும்பிப் போக வேண்டும்
ஒரே எட்டில் ஒரு நாளோ ஒரு யுகமோ
கடந்துவிடாதா?
சோனியா, நாம் அங்கிள் வான்யா நாடகத்தை
ஒரு காதலர் தினத்தில்தானே அரேங்கேற்றினோம்.
சௌந்தர்ய லஹரியில் இப்படியொரு போற்றிப்
பாடல் வரும்:
“ஓ இந்தக் காமதேவனைப் பாருங்கள்
அவனுடைய வில்லோ மலர்களால் ஆனது
அவன் வில்லின் நாணோ தேனீக்களால் ஆனது
அவனது அமைச்சனோ உறுதியற்ற, நம்ப இயலாத வசந்த காலம்
அவனது போருக்கான தேரோ மாறிக்கொண்டே இருக்கும் வடிவமற்ற மலைத்தென்றல்
எல்லாவற்றிற்கும் மேலாக அவன் அங்கங்களற்றவன், உடலற்றவன்
ஆனாலும் மலை மகளே
உன் விழியோரப் பார்வைகளின் அருளால் மட்டுமே
அல்லவா அவன் இப்பூவுலகை வென்றிருக்கிறான்.”
முதல்த் தொடுகை
முதல் விழிப்பு
அதன் அபூர்வ வெம்மையை நினைவுகொள்
அவள் துயரத்திலிருக்கும்போதுதான்
உன் கண்கள் அழகாயிருக்கின்றன
உன் கூந்தல் அழகாயிருக்கிறது என்று சொல்வோமோ?
கண்ணீர் விட்டுக் கதறி அழுவதல்ல
கண்ணீர் விடாமல் இருக்க
தொடர்ந்து போராடுவதே நடிப்பு என்று
சோனியா நானுனக்கு
எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்
கீழுதட்டைக் கடித்துக்கொண்டு வசனம் பேசாதே
என்று எத்தனை முறை என்
கீழுதட்டைக் கடித்துக்கொண்டே உனக்குச்
சொல்லியிருப்பேன்?
உனக்கானவள் என்று தெரியாவரை
எந்தப் பெண்ணையும் அமைதியாகப் பார்க்க இயலாதா?
ஹேய் இது செக்காவ்வின் வசனம் அதை சிறிது
மாற்றிச் சொல்கிறாய்
அப்படிச் செய்யாதே தயவு செய்து, தயவு செய்து
அப்போதும் என்னால் கீழுதட்டைக்
கடித்தபடி என்னால் உன்னிடம் சொல்ல இயவில்லை
இப்போது சொல்வதால் என்ன பயன்?
உன் பெயர் எனக்கு இப்போது நினைவு
வருவது போல இருக்கிறது.